Monday, June 24, 2024

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு 30-06-2024

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

சாலமோனின் ஞானம்  1:13-15; 2:23-24
2 கொரிந்தியர் 8: 7, 9, 13-15
மாற்கு 5:21-43

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு பெண்கள் நலமடைந்த புதுமைகளைக் கேட்கவிருக்கிறோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இரு புதுமைகள் நிகழ்கின்றன. மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது, எவ்விதத் தொடர்பும் இல்லாத இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப் போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இருபெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வருபவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிர் இழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக் கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக் கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு. இந்நிகழ்வை நம் ஆழ்மனதில் பதிவுசெய்து நாம் எப்பொழுதும் இறைமகன் இயேசுவை மையமாகக் கொண்டு நம் வாழ்வை வளமாக்க இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

 

முதல் வாசக முன்னுரை

ஊடகங்கள் தரும் உலகையும், விவிலியம் தரும் உலகையும் இணைத்துச் சிந்திக்கும்போது, இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில் கவிதை வரிகளாய் இன்றைய முதல் வாசகம் ஒலிக்கிறது: "கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது" என்பது தான் இவ்வரிகள். முதல் வாசகமாக வரும் சாலமோனின் ஞானம் இப்பகுதியை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11,12
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். -பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. -பல்லவி

ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் சேமிப்பைப் பற்றியும் பகிர்வைப் பற்றியும் திருத்தூதர் பவுலடியார் "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! என்ற எடுத்துக்காட்டுடன் இயேசுவின் அன்பை அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசு அவர் செல்வராயிருந்தும் ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். பவுலடியாரின் இக்கருத்துக்களை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1.உயிரினும் மேலான பேரன்பு கொண்ட தந்தையே எம் இறைவா! எம்திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்கத் தங்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் சாட்சியம் பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் அனைத்தும் உம்மையே மையமாகக் கொண்டு, உம்மேல் முழு நம்பிக்கை வைத்து எங்கள் வாழ்க்கையை உமக்கு உகந்ததாக வாழவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், நிலைவாழ்வைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.எல்லாரும் தஞ்சம் தரும் எம் இறைவா! புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4.என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! எம் இளையோர்கள் அனைவரும் படிப்பிலும், ஒழுக்கத்திலும், மனிதமாண்பிலும் உன்னதஇடத்தைப் பெற்றிடவும், அவர் தம் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ்ந்திடவும் ஆவியாரின் அன்பும், அருளும் நிறைவாய் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவரையும் ஆதரிக்கும் தந்தையே எம் இறைவா! ஏழைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோரை கண்டு அவர்களுக்கு உதவிட தங்கள் உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் வாழ்வில் மகிழ்வு, உடல்நலமும் பெற்று அமைதியான வாழ்க்கைப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, June 17, 2024

பொதுக் காலம் ஆண்டின் 12 ஞாயிறு 23-06-2024

பொதுக் காலம் ஆண்டின் 12 ஞாயிறு  


இன்றைய வாசகங்கள்:

யோபு 38:1.8-11
2கொரிந்தியர் 5: 14-17
மாற்கு 4:35-41

திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே இன்று நாம் ஆண்டின் 12ஆம் ஞாயிற்றைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர் என்று கருணையின் கடவுளைப் புகழ்வோம். ஏனெனில் மானுடத்தைப் படைத்து ஒவ்வொரு நொடியும் கண்ணின் இமைபோல மனுகுலத்தைக் காக்கின்றவர். தாயாகத் தந்தையாக நம்மைக் காத்து வருகின்றார்.
இறைவனின்‌ பராமரிப்பு நம்முடன்‌ இருக்கும்போது நமது வாழ்வில்‌ எதைக்‌ கண்டும்‌ அச்சமடையத் தேவையில்லை. இறைவனோடு இணைந்து நடந்தால்‌ இயற்கையும்‌ நம்மோடு இணைந்து நடக்கும்‌. இயற்கைக்கு எதிராக நாம்‌ மாறும்போது இறைவனுக்கு எதிராகவே மாறுகிறோம்‌. இரையாதே! அமைதியாக இரு! என்ற இறைமகன்‌ இயேசுவின்‌ ஒற்றை வார்த்தைக்குப் பொங்கிய கடலும்‌ அடங்கியது. சீடர்களின்‌ நம்பிக்கையும்‌ அதிகரித்தது. அந்த இயேசுவின்‌ மீது நம்பிக்கை கொண்டவர்களாய்‌ இறைவனின்‌ பராமரிப்பை உணர்ந்தவர்களாய்‌ வாழ்வை எதிர்கொள்ளும்போது எத்தகைய இன்னல்களும்‌ துன்பங்களும்‌ சோதனைகளும்‌ நமது வாழ்வில்‌ வந்தாலும்‌ அவற்றையெல்லாம்‌ கடந்து வர முடியும்‌. அதற்கான அருளை வேண்டிப் புனிதப் பலியில்‌ பக்தியுடன்‌ இணைவோம்‌.

வாசக முன்னுரை:

முதல்‌ வாசகம்

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இயற்கையின்‌ வழியாக இறைவன்‌ யோபுவோடு உரையாடுகிறார்‌. தாயின்‌ கருவில்‌ உருவாகும்‌ முன்பே நமக்கு உரு தந்த இறைவன்‌ இயற்கையிலும்‌ தனக்கு உருவம்‌ வைத்திருக்கிறார்‌. இயற்கையும்‌ கடவுளுக்குப் பணிந்து நடக்கும்‌ என்பதை இன்றைய முதல்‌ வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். - பல்லவி

2.அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. - பல்லவி

3.தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்;  அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. - பல்லவி

4.அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! - பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசகத்தில்‌ திருத்தூதர்‌ பவுல்‌ புரிந்து நகர மக்களுக்கு எடுத்துரைக்கிறார்‌. கிறிஸ்துவோடு இணைந்திருக்கக்கூடிய சூழலில்‌ நாம்‌ புதிதாய்‌ படைக்கப்பட்டவர்கள்‌ போல நற்பண்புகளால்‌ நிறைந்தவராய்‌ இருக்கிறோம்‌. ஆகவே கிறிஸ்துவின்‌ பேரன்பால்‌ ஆட்கொள்ளப்பட்டவர்களாக நாம்‌ வாழ வேண்டும்‌ என்பதை எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச் செவி சாய்ப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டு:

1. எம் இறைவா திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசு பணியைச் செவ்வனே ஆற்றிடப் போதுமான ஆற்றல்களை அவர்கள்மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. என் அன்பு தந்தையே இறைவா எம்நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சி புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்


3. உன்னதரே எம் இறைவா மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராகச் செயல் பட்டுக் கடலின் இறைச்சலை கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத் தர வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. திடத்துடன் வாழும் வாழும் திருச்சபையாக வாழ யோபுவின் துன்பங்களை நாங்களும் பகுத்துணர்ந்து, சோதனைகளில் துவண்டு போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவை போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. காற்றையும் கடலையும் அடக்கும் இறைவா! வரதட்சணை, கடன் தொல்லை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்களெனப் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் மக்களை உமது இறை பாராமரிப்பில் வைத்துக் காத்து அவர்கள் தீவினைகளில் இருந்த விடுபட வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, June 12, 2024

பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு

 இன்றைய வாசகங்கள்

எசேக்கியேல் 17: 22-24  |  2 கொரிந்தியர் 5: 6-10  |  மாற்கு 4: 26-34

 திருப்பலி முன்னுரை :

இயற்கையுடன் இணையாமல் இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே இயற்கைப் பாடங்கள் சொல்லித் தருகின்றார் இறைவன்.

இயற்கை என்ற பள்ளியில் இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த இயற்கை வளங்களை இழக்கும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கிவிட்டு, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று உலகநாடுகள் அனைத்தும் மாநாடுகள் நடத்தி வருகின்றது.

மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமையே இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் "தானாக வளரும் விதை" என்ற உவமை.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள் நாம் வாழும் அவசர உலகில் பெருமளவு காணாமற் போய்விட்டன.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் தாம் நாம். பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இறைவார்த்தைகள் உரமாக இருந்து, அருள்கொடைகள் எனும் நீர் ஊற்றி, விதை முளைத்து, செடியாக, மரமாக வளர்ந்து நிற்கும்போது, நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம்மால் நல்ல கனியைக் கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அக்கனிகள் வளரக் கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைவனின் நற்கனிகளாய் உருபெறச் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இறைவனின் உன்னத கொடையே நம் உயர்வும், வளர்ச்சியும் ஆகும்.  மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்குப் பயன் தரும் மரமாக வேண்டும். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல். வளர வைப்பதும், வளர்ந்ததை உலர வைப்பதும் இறைவனின் வல்லமை. இறைவனின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15
பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வர வேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும்.ஆம் இறுதிநாளில் இயேசுவின் நீதிமன்றத்தில்  நாம் தோன்றும்போது நாம் உடல் வாழ்க்கையின்போது நாம் செய்த நற்செயல்கள், தீச்செயல்களுக்கு உரிய   பலனைத் தரும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!  இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியாகத் திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்து கொள்ளப்பட்ட திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட அழைப்பிற்கு ஏற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. எம்மைப் படைத்தாளும் எம் இறைவா! அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும் சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கி நீர் படைத்த இயற்கையோடு ஒன்றித்துவாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுவோம்.

3. அன்பு இறைவா, நல்ல பெற்றோர்களாக நாங்கள் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல முன் மாதிரியாகத் திகழ்ந்து, ஆன்மிக வாழ்விலும், அருள் வாழ்விலும் எங்கள் குழந்தைகள் வளர்ந்திட உமதுஅருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பிறரின் சுமைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட இறைவா! துன்பத்தில் பங்கேற்ற சீமோனைப் போன்ற நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பிறருடன் அவரவர் தேவைக்கேற்ப எங்கள் உடைமைகளையும், உணர்வுகளையும், ஆறுதல் தரும் வார்த்தைகளையும் பகிர்ந்து வாழக்கூடிய நல் மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் பள்ளிக் கல்வி முடித்துக் கல்லூரிகளுக்கும், உயர் படிப்புக்கும் செல்லவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவரவர் விருப்பத்திற்கும், திறமைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றப் பாடங்களைத் தேர்வு செய்து சிறப்புடன் வெற்றி பெற்று இயேசுவின் சாட்சிகளாய் விளங்கிட உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, June 4, 2024

பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 09.06.24

பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

தொடக்க நூல். 3:9-15
2 கொரிந்தியர். 4:13-5:1
மாற்கு 3:20 - 35

திருப்பலி முன்னுரை:

இன்று பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறு. நம் ஆலயத்தில் கூடியுள்ள இறைமக்களே பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்காக, உண்மையில் வாழ இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கடவுள் இவ்வுலகை நல்ல நிலையில்தான் படைத்தார். அவர் படைத்த அனைத்தும் நன்றாக, மிகவும் நன்றாக இருக்கக் கண்டார் என்று தொடக்கதால் கூறுகிறது. அப்படியானால் பாவம் எப்படி இவ்வுலகில் நுழைந்தது? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகத்தில் மனித குலத்தின் முதல் பெண் வாயிலிருந்து வரும் பதில்: "பாம்பு என்னை ஏமாற்றியது." எனவே அலகையின் வெஞ்சகத்தால்தான் பாவமும் அதன் வழியாகச் சாவும், மற்ற எல்லாத் துன்பங்களும் வந்தன.

கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது "அலகையின் செயல்களைத் தொலைக்கவே' என்று கூறுகிறார் புனித யோவான். கிறிஸ்து அலகையை 'இவ்வுலகின் தலைவன்' என்றழைக்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவின்மேல் அலகைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றார். மேலும் "இவ்வுலகத் தலைவன் வெளியே துரத்தப்படுவான்" என்றும் ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கிறார்.

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு தனது தவற்றை ஏற்றுக் கொள்ளும்போது அவன் பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ஆம், உண்மையான வாழ்வு வாழ நாம் முன் வந்தால், துன்பங்கள் நமக்கு வரலாம்! ஆனால் அந்தத் துன்பங்களுக்குப் பிறகு மறைந்து நிற்கும் மனநிம்மதி என்னும் முழுமதி நமது இதய வானிலே எழுந்து இதம் தருவது உறுதி.

இந்த இதமான ஆசீரை அனுபவிக்க வீடு ஒன்று விண்ணகத்தில் உள்ளது என்ற ஆழமான நம்பிக்கையில் இன்றைய திருப்பலியில் நிறைவாய் பங்கேற்போம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

முதல் மனிதன் ஆதாம் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தன் மனைவிமீது குற்றத்தைச் சுமத்தியபோது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாக மாறின! அவர்கள் மனம் மன்னிக்கப்படாத சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டது! சூழ்நிலை மாறியதால் இறைவனால் வகுக்கப்பட்ட சூழ்நிலைக்குள் அந்த முதல் மனிதர்களால் வாழ முடியவில்லை ! இன்ப வனத்தை விட்டு வெளியேறியபிறகு அவர்கள் பட்ட பாடுகள் என்னவென்று நமக்குத் தெரியும்! இந்நிகழ்வை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6, 7-8
பல்லவி:  பேரன்பும் மீட்பும்  ஆண்டவரிடமே உள்ளன.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி

ஆண்டவரே! நீர் எம்குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

நம்பிக்கை மனப்பான்மைக் கொண்டுள்ள திருத்தூதர் பவுலடியார் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே நம் எல்லோரையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார் என்று நம்பிக்கையுடன்  பேசுகிறார். நாம் அடையும் துன்பங்கள்  மிக எளிதில் தாங்கக் கூடியவை. நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.  அது என்றும் நிலையானது என்று தெரிந்த நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனதில் பதிவுச் செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார் ஆண்டவர்.அல்லேலூயா, அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

இரக்கம் காட்டுவதில் வல்லவரான எம்தந்தையே இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் மறுமையில் ஒரு வீடு எங்களுக்கு நிலையாக உள்ளது என்று நம்பிக்கையின் மூலம் பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்குச் சான்றுப் பகரும் நல்வாழ்வை வாழ்ந்திடத் தேவையான நேரிய மனமும், உள்ள உறுதியும் பெற்றிட அருள் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

படைப்புகளின் ஆண்டவரே எம் இறைவா! இருளில் வாழ்வோரைக் கண்ணேக்கியருளும். உம்மை ஒரே உண்மைக் கடவுளாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களின் உள்ளங்களில் உமது அன்பின் ஒளிப் பரவிடவும், உமது போதனைகளுக்கு உண்மையாக இருக்க உமது ஆவியை எங்கள்மேல் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாடுகள் அனைத்திற்கும் ஒளியான எம்தந்தையே இறைவா! உலகின் எல்லா நாடுகளுக்காகவும், பதவியில் உள்ளவர்கள் மக்களிடையே அமைதிக்காகவும் நல்ல உறவுக்காகவும் உழைக்கவும், மனிதநேயம் காக்கப்படவும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் தேவையான நல்ல உள்ளங்களும்,நேர்மையும் கொண்டவர்களாகப் பணிபுரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வெற்றியின் நாயகனே எம் இறைவா! எம்வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கும் வெற்றிவாகை என்பதனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட, குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா! இன்றைய சமூகத்தில் நிலவும், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விலகி வெளிவந்திடவும், மக்கள் தங்கள் சுயத்தையும், சமூக மதிப்பீடுகளையும், உறவுகளையும் இழந்து நிற்கும் நிலைமாறி, உறவைப் போற்றிப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்களாக மாற்றி நல் வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, May 27, 2024

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா

 

இன்றைய வாசகங்கள்

விடுதலைப்பயணம் 24:3-8;
எபிரேயர் 9:11-15;
மாற்கு 14:12-16, 22-26

திருப்பலி முன்னுரை:

இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக  மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது. ஆனால் காலப்போக்கில் அவர்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்து பிறஇனத் தெய்வங்களை வழிபட்டு உடன்படிக்கையின் அன்பை முறித்தனர். எனினும் இறைவன் இறைவாக்கினர்  எரேமியா வழியாகப் புதியதோர் உடன்படிக்கையை முன் அறிவித்தார்.  இந்தப் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர்  இயேசுவிறிஸ்துவே என்பதை உணர்ந்து விடுதலைநூலிலிருந்து வாசிக்கப்படுவதைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18
பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். -பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றயைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது என்று உரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா,  உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம்நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்த தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, May 20, 2024

மூவொரு இறைவன் திருவிழா 26-05-2024

மூவொரு இறைவன் திருவிழா

இன்றைய வாசகங்கள் :

இணைச்சட்டம் 4: 32-34, 39-40
உரோமையர் 8: 14-17
மத்தேயு 28: 16-20

திருப்பலி முன்னுரை:

இன்று மனித அறிவுக்கு எட்டாத மறை உண்மையாம் மூவொரு கடவுள் என்ற பேருண்மையை ஊய்த்துணர நம் திருஅவை மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாட நம்மை அழைத்துள்ளது.
மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலைத் தன் சிந்தனைக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றிய கதை நமக்கு நினைவிருக்கலாம்.
நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரைக் கோபத்தில் ஆழ்த்தியது. தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.
இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு தான். நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படி இருக்க உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்துப் பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம்.
உறவுகளை வளர்ப்பதைவிட, மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகில் மானிடனைப் படைத்த நாள்முதல் தேனும் பாலும் ஓடிய கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் வரும் வரை அவர்களை வழி நடத்திய ஆண்டவரே கடவுள். அவரைத் தவிர வேறு எவரும் இலர் என மனதில் இருத்தி நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது ஆசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகமான இணையச்சட்ட நூலில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் வரும் இவ்வாசகத்தை நம் சிந்தனைகளில் பதிவுச் செய்வோம்.

பதிலுரைப் பாடல்:

திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. -பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
-பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும்போது நம்முடன் இணைந்து நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சாட்சி பகர்கிறார். இவ்வாறு இயேசுவின் பங்காளிகளான நாம் அவரோடு துன்பத்தில் பங்கு பெறும்போது அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பாட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தைப் பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்துப் பணிச் செய்யும் உத்வேகத்தை எம்நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. மனிதன் பாங்குடன் வாழ இயற்தையைப் படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்குத் தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திடவும், மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதரங்கள் காக்கப்படவும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5. உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. படைப்பின்‌ இறைவா ! எம்இளைஞர்களும்‌, இளம்‌ பெண்களும்‌, சிறார்களும்‌ உம்‌ படைப்பின்‌ மேன்மையை உணர்ந்து, தங்களிடம்‌ வளர்ந்து வருகின்ற அழிக்கும்‌ மனப்பான்மையை அழித்து ஆக்கப்‌ பூர்வமான சிந்தனைகளும்‌ செயல்களும்‌ வளர நல்ல மனம்‌ வேண்டுமென்றும்‌ மனிதர்களை அடிமைப்படுத்தும்‌ போதைப்‌ பொருள்கள்‌, குடி, புகை, சூதாட்டம்‌, பணவெறி போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல்‌ எங்களைக்‌ காத்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, May 13, 2024

தூய ஆவியாரின் பெருவிழா 19.05.2024

தூய ஆவியாரின் பெருவிழா

 இன்றைய வாசகங்கள்:

1. திருப்பணி 2:1-11
2. 1கொரி 12:3,7,12-13  
3. நற்செய்தி யோவான் 20:19-23

திருப்பலி முன்னுரை

ஆவியிலும்‌, உண்மையிலும்‌ வழிபட வந்திருக்கும்‌ இறை இயேசுவில்‌அன்புக்குரிய சகோதரர்‌ சகோதரிகளே! தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாட கோவிலில்‌ குழுமியிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ பெருமகிழ்வுடன்‌ வரவேற்கின்றோம்

இன்று தாயாம்‌ திருஅவையின்‌ பிறந்த நாள்‌ ! கிறிஸ்துவின்‌ மறையுடலாக விளங்கும்‌ திருஅவையின்‌ தொடக்க நாள்‌! அன்னை மரியாவுடன்‌ செபத்தில்‌ இணைந்திருந்த சீடர்கள்‌ நடுவில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்தபோது திருஅவை பிறந்தது. இயேசுவின்‌ உயிர்ப்பு, விண்ணேற்றம்‌, தூய ஆவியாரின்‌ வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும்‌, நமது கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ அடித்தளமான உண்மைகள்‌. இவை மூன்றும்‌ நம்‌ வாழ்வில்‌ நல்ல மாற்றங்களைக்‌ கொண்டுவரும்‌ பெருவிழாக்கள்‌ !

தூய ஆவியார்‌ என்பவர்‌ ஓர்‌ ஆற்றல்‌ ! வேறுபாடுகளைக்களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வல்லவர்‌. தூய ஆவியார்‌ மூவொரு கடவுளின்‌ மூன்றாம்‌ ஆளாக விளங்குகிறார்‌. இவர்‌ இறைத்தந்தையுடனும்‌, இறைமகன்‌ இயேசுவுடனும்‌ ஒன்றாக ஆராதனையும்‌ மாட்சியும்‌ பெறுகின்றவர்‌. தூய ஆவியாரின்‌ வல்லமையால்தான்‌ அன்னை மரியாவின்‌ கருவில்‌ இயேசு உருவானார்‌. இயேசு திருமுழுக்குப்‌ பெற்றபோது தூய ஆவியார்‌ புறா வடிவில்‌ அவர்மீது இறங்கி வந்தார்‌.

தூய ஆவியாரின்‌ பெருவிழா நாளில்‌ அவர்‌ தங்கியிருக்கும்‌ நம்‌ உடலைத் தூய்மையாகப் பேணவும்‌, ஆற்றல்களையும்‌, திறமைகளையும்‌ பொது நன்மைக்காகப்‌ பயன்படுத்தவும்‌, தூய ஆவியாரின்‌ செயல்களுக்கு இசைந்து நடந்து இயேசுவின்‌ சாட்சிகளாக வாழவும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

இறை இயேசு உயிர்த்த ஐம்பதாம்‌ நாளன்று அவர்‌ வாக்களித்தபடியே ஒரே இடத்தில்‌ கூடியிருந்த சீடர்கள்‌ அனைவரையும்‌ பிளவுபட்ட நாவு வடிவில்‌ தூய ஆவியார்‌ ஆட்கொண்டதையும்‌ அவரின்‌ தூண்டுதலால்‌ சீடர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசும்‌ ஆற்றல்‌ பெற்றதையும்‌ இயேசுவின்‌ நற்செய்தி உலகில்‌ பலருக்கும்‌ அவரவரது தாய்‌ மொழிகளிலேயே அறிவிக்கப்பட்டதையும்‌ எடுத்துரைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்கு செவிசாய்ப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24 29-30. 31,34
பல்லவி : ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

 
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி 


ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. ஊனியல்பின்‌ இச்சை தூய ஆவியாருக்கு முரணானது என்றும்‌, அந்த இச்சைகளில்‌ ஈடுபடுவோர்‌ இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்றும்‌, தூய ஆவியின்‌ துணையால்‌ வாழ்வதால்‌ அவர்‌ காட்டும்‌ நெறியில்‌ நடக்க முயலுவோம்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.

****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********

 

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பைத் தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்குத் துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.
4.மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைக் கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் நல்ல தரமான கல்வி கூடங்களில் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.
5. இளைய சமுதாயத்திற்காக...
நன்மை பயக்கும்‌ இறைவா! உலகில்‌ உள்ள அனைத்து இளைஞர்களும்‌ இளம்‌ பெண்களும்‌ நல்ல பண்புகளை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, தீயப்‌ பழக்கங்களில்‌ சிக்காகமல்‌ விழிப்புடன்‌ இருக்கவும்‌, நாட்டுக்கும்‌ வீட்டுக்கும்‌ நன்மை பயப்பவர்களாக வாழவும்‌, எரிச்சல்‌ அடையாமலும்‌, சினம்‌ கொள்ளாமலும்‌, பொறுமையாகவும்‌, கனிவாகவும்‌, உதவும்‌ மனப்பான்மையுடனும்‌ பணியாற்றவும்‌, ஒருவர்‌ மற்றவரை மன்னித்து, மதித்து, விட்டுக்கொடுத்து வாழவும்‌ அவர்களுக்கு மனமாற்றத்தைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding