Tuesday, April 29, 2025

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19

திருப்பலிமுன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின்போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடிய சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பை தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்கு பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:

திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அனைத்திற்கும் மேலாக உம்மீது கொண்ட அன்பை உறுதிச் செய்தபின், “என் ஆடுகளை மேய்” எனச்சொல்லி, பேதுருவிடம் தலைமைப்பணியை ஒப்புவித்த இறைவா, புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யக் கூடியிருக்கும் கர்தினால்களை, தூய ஆவியாரால் வழிநடத்தி, காலத்திற்கு ஏற்ற நல்ல திருஅவைத் தலைவரை எங்களுக்குத் தந்தருளும்படியாக, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என அனைத்துலகப் படைப்புகளாலும் ஆராதிக்கப்படுகிற, அரியணையில் வீற்றிருப்பவரான ஆட்டுக்குட்டியே, எம் இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், போருக்கு முனைப்புக் காட்டுவதைத் தவிர்த்து, உயிர்த்த ஆண்டவரின் கொடையான அமைதியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், அதே நேரம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் முற்றிலும் ஒழிந்துபோக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிற தெளிவான உறுதியோடிருந்த திருத்தூதர்களைப் போல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இறைத் திருவுளப்படி வழிநடத்தவும், இளையோர் யாவரும், தங்கள் மேல்படிப்பு, பணியமர்வு, திருமணம் போன்றவற்றைத் தெரிவுச் செய்வதில், உமக்குக் கீழ்ப்படிவதன் மூலம், வாழ்வில் உயர்வு காணவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்” மகிழ்ச்சியுற்ற திருத்தூதர்கள் அடிச்சுவட்டில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவருமே, எங்கள் துன்ப துயரங்கள், வேதனை, சோதனைகள் நடுவிலும், “ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு” என மெய்ப்பிக்கும் விதமாக, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வினை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கருணைக் கடலாகிய இறைவா, வெய்யில் கால வெக்கையைச் சற்றே தணிக்கவும், நோயற்ற நல்வாழ்வை எமக்குத் தரவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF

Tuesday, April 22, 2025

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-11அ,12-13, 17-19
யோவான் 20:19-31

முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. இறைஇரக்கத்தை நாடி ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாகத் தன் சீடத்தி மதலா மரியாவின் வழியாகத் தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டுக் கலிலேயாவில் தன் சீடர்களைச் சந்திக்கச் செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்கத் துணிவோடு வெளியே சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிடச் செய்கிறார். நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டு கொண்ட தோமையார் மூலம் காணாமல் இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறு பெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.

இயேசுவைச் சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றத்தை அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக்கொண்டு அவரின் பேரிரக்கத்தைப் பெற்று அவரின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டங்களில் நிறைவாய் பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்றுப் பகர்ந்தத் திருத்தூதர்களின் வாழ்க்கை முறைப் பற்றிப் பதிவுச் செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாகப் பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோலக் கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகளின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:2-4, 22-24, 25-27அ

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

2.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!  ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

3.ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின் மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. உயிர்ப்புப் பெருவிழாவின் அடுத்த நாளிலே, இவ்வுலக வாழ்விலிருந்து நிலைவாழ்வுக்குக் கடந்து சென்றுள்ள எமது மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன்” என்று யோவானுக்குத் தன்னை வெளிப்படுத்திய, என்றென்றும் வாழ்பவரான இயேசுவின் இரக்கப்பெருக்கினால், புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்து அகமகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருமனத்தவராய்க் கூடி வந்ததை விவரிக்கும் முதல் வாசகத்திற்கு ஏற்ப, தாயாம் திரு அவையானது ஒருமனப்பட்ட திருக்கூட்டமாய், புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்ய, தூய ஆவியார் துணை புரிய வேண்டுமென்றும், திருஅவைத் தலைவர்களும் இறைமக்களும், ‘ஒரே ஆயன், ஒரே மந்தை’ என்கிற மனநிலையோடு பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறை இரக்கப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில், உமது பேரிரக்கத்தை நாங்கள் அனுபவிக்க வேண்டுமென்றும், தொடக்கக் காலத் திரு அவையை வளர்த்தெடுத்து உறுதிப்படுத்த, நீர் ஆற்றிய அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும், இன்றைக்கும் தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” என்கிற திருப்பாடல் வரிகளை, நாங்கள் எந்நாளும் பறைசாற்றுகிற வண்ணம், எங்கள் வாழ்வின் குறைகள், நோய்கள், பிணிகள், பிணக்குகள், வறுமை, வாட்டம், அனைத்தும் நீங்கப் பெற்றவர்களாய், உயிர்த்த ஆண்டவரின் உன்னத வழிநடத்துதலில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாங்கள் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்கிற உம் அழைப்பினை ஏற்று “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று அறிக்கை செய்த தோமாவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் உறுதி பெற வேண்டுமென்றும், உமது உயிர்ப்பின் கொடையாகிய அமைதியினை, எங்கள் வீடும், நாடும், நாங்கள் வாழ்கிற இவ்வுலகும், அனுபவிக்க வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. எம்வாழ்வின் வழிகாட்டியான இறைவா! தங்கள் பள்ளிப்படிப்புக்களை முடித்து விட்டு மேற்படிப்பிற்காகக் கல்லூரிகளில் இடம் தேடி அலையும் எம் இளையோர், சிறந்த வழிகாட்டிகளின் மூலமாகத் தாங்கள் விரும்பும் கல்வியினைப் பெற்று, பெற்றோருக்கும், திருஅவைக்கும், நாட்டிற்கும் உவந்தவர்களாகத் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


Print Friendly and PDF


Wednesday, April 9, 2025

புனித வார நிகழ்வுகள்-2025

 புனித வார நிகழ்வுகள்-2025




புனித வார நிகழ்வுகள்-வாசகங்கள்-மன்றாட்டுகள்-திருச்சடங்கு முறைகள்

 

 

குருத்து ஞாயிறு  13/04/2025

 


பெரிய வியாழன் |  17/04/2025
ஆண்டவருடைய இரவு விருந்து


புனித வெள்ளி | 18/04/2025
ஆண்டவருடைய பாடுகள் வெள்ளி


பாஸ்காத் திருவிழிப்பு | 19/04/2025
பாஸ்கா ஞாயிறு/20/04/2025

 


உயிர்த்த இயேசுவின் சீன ஒவியம் 

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன். 9382879082

 

Monday, March 31, 2025

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

 தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தனிப்பட்ட கருத்தை எடுத்துச் சிந்தித்து நம் அகவாழ்வை ஆராய்ந்துப் பார்க்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று மீண்டும் நம் அகவாழ்வைச் சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவறுவது மனித இயல்பு. ஆனால் தவறுக்குப் பின் திருந்தி எழுவதுதான் மனிதனின் மாண்பு. அது தான் கிறிஸ்தவனின் பண்பு என்பதை இன்றைய இறைவாக்குகள் அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது
இயேசு இரக்கத்திலும், மன்னிப்பதிலும், அன்புச் செய்வதிலும் என்றும் மாறாதவர். இயேசு யாரையும் தீர்ப்பிடுவதில்லை. இரண்டாம் வாசகத்திலும் நான் விரும்புவது எல்லாம் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற திருத்தூதர் பவுலின் கூற்றும், முதல் வாசகத்தில் இதோ, நாம் புதியனச் செய்கிறோம் என்ற எசாயா இறைவாக்கினின் முழக்கமும், இயேசுவின் பாணியில் நாம் பிறருக்குத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது. அவரில் ஓப்புறவு கொண்டு நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூத மக்களை விடுதலைச் செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களிக்கும் இறைவன், அவர்களுக்குத் தான் எகிப்தில் செய்த அறிகுறியை நினைவுபடுத்தி, தான் இப்போது செய்வது அதனிலும் புதியது என்று தான் தரவிருக்கும் விடுதலையின் மேன்மையைச் சொல்கின்றார். எகிப்தின் அடிமைத்தனம் மிகப்பெரிய வடுவை இஸ்ரயேலரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கலாம். 'என்னை அவன் அடிமையாக வைத்திருந்தான்' என்பதை அவர்களால் எப்படி மறக்க முடியும். ஆனால், மறந்தால்தான் இறைவனின் புதிய அற்புதங்களை இரசிக்க முடியும்.இறைவனின் புதிய செயல் என்னவென்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க நாம் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்:

திருப்பாடல்126: 1- 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவுக் கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி
உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுலடியாரைப் பொறுத்தமட்டில் ஒருகாலத்தில் முதன்மையானவையென இருந்தவை இப்போது கிறிஸ்துவை அறிந்தவுடன் கடைநிலைக்குச் சென்றுவிட்டன. 'கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் முன் இவை யாவும் குப்பை அல்லது இழப்பு'. 'கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்டுகொண்டு' என்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குப் பவுலடியார் இங்கே பயன்படுத்தும் ஓர் உருவகம் தான், 'பந்தயத்தில் ஓடுவது.' பந்தயத்தில் ஓடுவோரின் கண்முன் இலக்கு மட்டுமே இருக்க வேண்டும். நாம் இதுவரை ஓடிவந்த டிராக் எப்படி இருந்தாலும், டிராக் மாறி வந்தாலும், இன்றுமுதல் சரியான டிராக்கில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்து வைத்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவைப் பற்றிக் கொள்ள அழைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்:

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்து இயேசு தன்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத், தொடர்ந்து ஓடிய பவுலடியாரைப் போலவே, உடல்நலம் தேறி வருகிற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், இறைமக்களும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாய், துடிப்புடன் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்” என்கிற முதல் வாசக வாக்குத்தத்தங்கள், நாங்கள் வாழுகிற இக்காலத்தில், இவ்வுலகிலும், எம்நாட்டிலும் நிறைவேற வேண்டுமென்றும், அமைதியும், சமத்துவமும், நீதியும், நேர்மையும், செழித்தோங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்” என்று சொன்ன பவுலிடம் இருந்த, தொடர் முயற்சியும், அயராத உழைப்பும், தங்களது பள்ளித்தேர்வுகளைச் சந்தித்த, மற்றும் சந்திக்கவிருக்கிற மாணவச் செல்வங்களிடமும் இருந்து, அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இல்லாமை, இயலாமை, வறுமை, வேலையின்மை, சமாதானமின்மை, உடல்நலமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால், இன்னலுறும் மக்களின் வாழ்வில், “இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது” என்கிற வரிகள், மெய்ப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கத்தின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்கிற உமது வார்த்தைகளால் திடம் பெற்று, முன்பு நடந்தவற்றை மறந்து, புதுச்செயல் ஒன்றை செய்கிற உமது பேரருளை நம்பி, மனமாற்றத்தின் பாதையில் நடந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, March 26, 2025

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

 தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

 யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே, / இறைவனை நோக்கிய, / பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்:

திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'தடைபட்ட உறவு மீண்டும் சரிசெய்யப்படுவதே ஒப்புரவு. கடவுள் தன் கொடையாக ஒப்புரவை நமக்கு வழங்கினாலும், அந்த ஒப்புரவிற்கு நம்மையே நாம்தான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்துவின் வாயிலாக, நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள், அதே ஒப்புரவாக்கும் திருப்பணியைத் தமது திருஅவை மூலமாகத் தொரடர்கிறார். கிறிஸ்துவின் தூதுவர்களாய் விளங்கும் திருத்தந்தை உள்ளிட்ட அருள் பணியாளர்கள் அனைவரும், தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள ஒப்புரவாக்கும் திருப்பணியைக் குறையின்றிச் செய்யவும், இறைமக்கள் யாவரும், நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணத்தை, ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், சிறப்பாக மேற்கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடியதை விவரிக்கும் முதல் வாசகம் கூறுவதுபோல, மாந்தர் அனைவரும், நிலத்தின் விளைச்சலை உண்டு மகிழவும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற்று நிறைவான வாழ்வு வாழவும், எம்வீட்டிலும், நாட்டிலும், அகில உலகிலும், அமைதி நிலவவும், எல்லாரும் எல்லாம் பெற்று இனிதாக வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்” என்கிற இன்றைய திருப்பாடல் வரிகளின்படி, துயருறுவோரின் துயர் நீங்கவும், வறியோரின் வறுமை விலகவும், பிணியுற்றோரின் பிணி நீங்கவும், நோயுற்றோர் நலம் பெறவும், தேவையில் இருப்போரின் தேவைகள், உம்மால் சந்திக்கப்படவும், யார் யாரெல்லாம் எதற்காக வேண்டுகிறார்களோ, அவை எல்லாம் நிறைவேற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” என்கிற திருப்பாடல் வரிகள், இன்றைய நற்செய்தியில் வருகிற ஊதாரி மைந்தன் வாழ்விலே நிஜமானது போல, இங்கே கூடியுள்ள எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழவும், அப்படிப்பட்ட மறுவாழ்வு வாய்த்திட “எழுந்து என் தந்தையிடம் செல்வேன்” என்றுரைத்துச் செயல்படும் மனமாற்றத்தின் ஆவியை நாங்கள் பெற்றிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, March 17, 2025

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு-ஆண்டு 3

 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12
லூக்கா:- 13: 1-9

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்! நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார்.
இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வுள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

`கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். `எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

`மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,’ என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. எரியும் முட்புதரிலிருந்து ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று உம்மை வெளிப்படுத்திய கடவுளே, எம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலனில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிற வேளையில், அவர்களுக்குப் பூரண உடல் நலம் தரும்படியாகவும், இறைமக்களை உள்ளடக்கிய திருஅவை முழுவதுமே, நல்லாயனின் பின்னே அணிவகுக்கும் ஆடுகள்போல, எதிர்நோக்கின் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “அவர்களின் துயரங்களை நான் அறிவேன். அவர்களை விடுவிக்கவும், நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.” எனக்கூறி இஸ்ராயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் உடனிருந்து வழிநடத்தியவரே, அமைதியிழந்து தவிக்கும் இவ்வுலகிற்கு நிலையான அமைதி தரவும், பல்வேறு இன்னல்களால் அவதியுறும் உலக நாடுகள் நல்வாழ்வை நோக்கி நகரவும், எம்தாயகமாம் இந்திய தேசமும், நீதியின் வழியில், சமத்துவம் நோக்கிப் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கிறிஸ்து என்கிற ஆன்மீகப் பாறையிலிருந்து, ஆன்மீகப் பானத்தைப் பருகியும், ஆன்மீக உணவை உண்டும் வருகிற நாங்கள் அனைவரும், தீயனவற்றில் ஆசை கொண்டு, அழிவு விளைவிக்கும் முணுமுணுப்பின் பாதையில் பயணித்த இஸ்ரயேலரைப் போல் அல்லாமல், கடவுளுக்கு உகந்தவராய் எம்வாழ்க்கைப்பயணத்தைத் தொடரவும், குறிப்பாகத் தேர்வு காலத்தில் இருக்கும் எம்குழந்தைகள் அனைவரும், உல்லாசத்தைத் துறந்து, உற்சாகமாய் உழைத்து, வெற்றி நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கனி கொடுக்கத் தவறினாலும், எம்மை வெட்டி வீழ்த்தாமல், விட்டுவைத்து, இன்னொரு ஆண்டையும், மற்றொரு தவக்காலத்தையும் தந்துள்ள இறைவா, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இந்த அருள் தரும் காலத்தைச் செவ்வனே செலவிட்டு, மனமாற்றத்தின் பாதையில் பயணிக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஞானத்தின் இருப்பிடமே இறைவா! தங்கள் கல்வியாண்டு இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்க எங்கள் பிள்ளைகள் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் சிறப்பாகவும், விவேகத்துடன் செயல்பட்டு, தங்கள் உழைப்பின் வெற்றிக் கனியைச் சுவைத்திடவும், அவர்களின் அடுத்தக் கல்வியாண்டுச் சிறப்புடன் அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்…

www.anbinmadal.org


Print Friendly and PDF


Thursday, March 13, 2025

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

 தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!. புயலுக்குப் பின் அமைதி, இரவுக்குப் பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப் போல் இயேசுவின் பாடுகளுக்குப் பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்.

மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பதில்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன் இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல். இவ்வாறு கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின் கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1,7-8,9-13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி

ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார்.நாம் நமது தன்னல வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழ முடியும். தன் மக்கள்மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்குச் செவிசாயுங்கள்"

நம்பிக்கையார்களின் மன்றாட்டுகள்

1. ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வை விவரிக்கும் நற்செய்தியிலே “நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்”, என்று சொல்லப்பட்டதை நினைவில் கொண்டு, ஆண்டவராகிய இயேசுவுக்கும், அவரின் பிரதிநிதியாகிய திருத்தந்தைக்கும் ஏனைய தலைவர்களுக்கும், செவிகொடுக்கும் மக்களாக நாங்கள் விளங்கவும், உடல் நலிவுற்றிருக்கும் எம்திருத்தந்தை, முழு உடல் நலம் பெற்று நீடு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
2. “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” என்றாலும், இம்மண்ணில் வாழ்கிற நாள்வரையில், நாட்டிற்கு உகந்த குடிமக்களாக வாழ வேண்டிய கடமையுணர்ந்து நாங்கள் செயலாற்றவேண்டுமென்றும், உலகத் தலைவர்களும், எம்நாட்டுத் தலைவர்களும் அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய விழுமியங்களைப் பேணிக்காக்கிறவர்களாக விளங்கவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்கிற முதல் வாசக கூற்றுப்படி இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எல்லா வேளையிலும், குறிப்பாக இந்த யூபிலி ஆண்டுத் தவக்காலத்திலும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, ஜெப, தவமுயற்சிகளிலும், பிறரன்புச் செயல்களிலும் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவல்ல இயேசுவின் பாதையில் பயணித்து, “ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்” என்கிற திருப்பாடல் வரிகளை உள்வாங்கியவர்களாய், அவரது திருமுகத்தையே நாடி, யாருக்கும் அஞ்சிடாத வாழ்க்கை வாழ்ந்திடத் தேவையான அருள்தர வேண்டுமென்றும், இறந்த அடியார்கள் அனைவரும் வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் கண்டிடவேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF