திருவருகை காலம் 4ஆம் ஞாயிறு ஆண்டு 1
இன்றைய வாசகங்கள்:
2 சாமு. 7:1-5,8-12,14,16
உரோமையர் 16:25-27
லூக்கா 1:26-38
திருப்பலி முன்னுரை
அமைதி என்னும் திரு ஒளி ஏற்றித் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு திரு அவை நம்மை அன்போடு அழைக்கிறது. 'கடவுள் நம்மோடு' என்பதுதான் இன்றைய வழிபாட்டின் கருப்பொருள்.
தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்தக் கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: எசாயா 7:10-14
“இதோ கன்னிப்பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” என்ற கடவுளின் அடையாளத்தை இறைவாக்கினர் எசாயா வெளிப்படுத்துகிறார். இந்த நம்பிக்கையின் அடையாளத்தைப் பெற்றுள்ள நாமும் இன்றைய சமூகத்தில் நம்பிக்கையின் அடையாளங்களாகத் திகழும் மனவுறுதியோடு முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b)
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
3. இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை: உரோமையர் 1:1-7
இயேசுவே நமக்கு நற்செய்தி, அவரது பணியாளர்களான நமது வாழ்வும் நற்செய்தியாக ஒளிர வேண்டும். நம் பணிகள் என்னென்ன என்பதை எடுத்துரைப்பதே புனித பவுலடியார் தரும் இன்றைய இரண்டாம் வாசகம். திருவருகைக் காலத்தில் நமது கடமைகளை, பணிகளை நினைவூட்டும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா
நற்செய்தி: மத்தேயு 1:18-24
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. இயேசு கிறிஸ்துவின் பணியாளர்களாகவும், கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப் பட்டவர்களுமாகிய திருஅவைத் தலைவர்களுக்காகவும், குறிப்பாகத் திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். மிக விரைவில் வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவினை, எங்களுக்கு மட்டுமின்றி, மாந்தர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாகக் கொண்டாடிடும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!” என்கிற பவுலடியாரின் வாழ்த்து, இந்தப் பூவுலகில் மெய்ப்பட வேண்டுமென்றும், உலகத் தலைவர்களும், எம்நாட்டை ஆள்வோரும், அமைதியின் பாதையில் பயணித்து, மக்கள் அனைவரையும் சமய, சமூகப் பாகுபாடின்றி, ஒருதாய் மக்களாகப் பாவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. திருவருகைக் கால வளையத்தின் நான்காம் மெழுகுதிரியை ‘அன்பின் மெழுகுதிரியாக’ ஏற்றுகிற இந்நாளில், ‘கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு’ எனத் தம் திருமடலைத் தொடங்கும் பவுலடியாரின் கூற்றுப்படி, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அன்பின் மக்களாக விளங்கி, இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், பிறரன்பு செயல்களில் எம்மையே அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. திருமுழுக்கு யோவான் விடுத்த மனமாற்றத்திற்கான அழைப்பினை கடந்த வாரங்களில் கேட்டு வந்த நாங்கள், மனிதரின் பொறுமையையும், கடவுளின் பொறுமையையும் சோதிக்கும் மக்களாக வாழாமல், நல்லதொரு பாவசங்கீர்தனம் செய்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாகும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ‘அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என யோசேப்புவுக்கு வானதூதர் சொல்லிய நற்செய்தி, கன்னி மரியாவின் வழியாக நிறைவேறியதை நன்றியோடு கொண்டாடி மகிழுகிற நாங்கள், எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், இயேசு என்னும் இம்மானுவேல் பிறந்திட, தகுந்த விதத்தில் தயாரிக்கவும், ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்கிற உணர்வோடு, வாழ்க்கையை நடத்தவும், அருள் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment