Sunday, December 28, 2025

புத்தாண்டு சிறப்புத் திருப்பலி அன்னை மரியாள் -இறைவனின் தாய்

புத்தாண்டு சிறப்புத் திருப்பலி 
அன்னை மரியாள் -இறைவனின் தாய் 01.01.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

திருப்பலி முன்னுரை

புனித கன்னிமரியா இறைவனின் அன்னை என்ற சத்திய வாக்குதான் புலர்கின்ற புத்தாண்டின் நுழைவாயில். காலம் புதிய ஆண்டு என்ற புத்தாடையை அணிந்து உற்சாகத்தோடு தன் பயணத்தைத் தொடங்குகிறது. பூமி பந்து புதுப்பொலிவுடன் சூரியனைச் சுற்றி தனது அடுத்த சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறது. கடந்த காலம் நமக்களித்த அளப்பரிய நன்மைகளுக்காய் நன்றி நவில்வோம். அதே நேரத்தில் அவை நமக்குக் கற்றுக் கொடுத்தப் பாடல்கள் கணக்கற்றவை. நெஞ்சில் ஆழமாய் பதிந்த ஏமாற்றம், இடர்பாடு, துன்பம், கவலை, போராட்டம் ஆகிய அனைத்தும் கற்பூரமாய் கரைந்துபோகட்டும். இனிவரும் வாழ்க்கை கற்கண்டாய் இனிக்க, கனவுகள் மெய்ப்பட, புவி ஈர்ப்பு விசை மீறி முகம் காட்டிச் சிரிக்கும் காட்டுப் பூவாய் புதிதாய் சிந்திக்க புத்தாண்டு நமக்கு ஒரு வயதை சேர்த்துத் தருகிறது. பழையதை கடந்து புதிய சூழலை ஏற்க முன்வருவோம். அன்னை கன்னி மரியாவைப் போலக் கடந்த கால யூத சமூகத்தைக் கண்டு கவலை கொள்ளாமல், எதிர்காலத்தில் என்ன சொல்வார்களோ என்று ஏங்காமல், இன்றே இப்பொழுதே “நான் உமது அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று புறப்பட்டது போல் புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: 

அன்று இஸ்ரயேல் மக்கள் மோசே வழியாக ஆண்டவரிடமிருந்து பெற்ற ஆசியை இன்று நம் தாய்த் திரு அவை புத்தாண்டு பரிசாக நமக்கு வழங்குகிறது. பாதுகாப்பையும், அமைதியையும், அருளையும் சுமந்துவரும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை: 

இயேசுவின் பிறப்பு நமக்கும் அவருக்குமிடையே சகோதர உறவையும், நமக்கும் கடவுளுக்குமிடையே தந்தை, பிள்ளை என்ற குடும்ப உறவையும் வழங்குகிறது. நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடன்பிறவா சகோதரர்கள் எனக் கூறும் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியாவின் திருவிழாவோடு புதிய ஆண்டினை தொடங்கிடும் திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், அனைத்தையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாவைப் போலவும், தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிச் சென்ற இடையர்கள் போலவும், எங்கள் இறைவேண்டலாலும், செயல்பாட்டாலும், உயிருள்ள சாட்சிய வாழ்வை மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “இனி நீங்கள் அடிமைகளல்ல” என்கிற பவுலடியாரின் வார்த்தைகள், அனைத்து உலகிற்கும், வையத்தில் வாழும் அனைவருக்கும், அச்சமில்லாத மனதையும், அனைவரும் சமம் என்கிற உணர்வையும், எல்லாரும் உரிமைப்பேறு உடையோரே என்கிற உள்ளுணர்வையும் உண்டாக்கவும், அமைதி நிறை உலகையும், செழுமை மிகு தேசத்தையும் உருவாக்கும் விதத்தில் தலைவர்களும் குடிமக்களும் உழைத்திடத் தேவையான அருள்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பி, தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பி, கண்ணுக்குப் புலப்படாத கடவுளை ‘அப்பா, தந்தையே,’ எனக் கூப்பிடும் பேற்றினைத் தந்திருப்பதற்காக நன்றி சொல்லும் வேளையில், நம் பங்குத்தளமும், பங்குக் குருக்கள், பங்குப் பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள், சிறுவர், இளைஞர், பெண்களை  உள்ளடக்கிய அமைப்புகள், பாடகர் குழுக்கள் ஆகிய அனைவரும், மூவொரு இறைவனிடம்  காணப்படும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விசுவாசக் குடும்பமாகச் செயல்பட, நீர் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புத்தாண்டு புலர்கின்ற இந்தப் புனித நேரத்தைக் களியாட்டத்தோடு தொடங்குகிற எண்ணிறந்த மக்களின் நடுவே, உம்முடைய பிரசன்னத்தில் கூடியுள்ள எங்களுக்கு “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!” என்கிற ஆசிமொழி உண்மையிலேயே உரித்தாகிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
       
5. புத்தாண்டுத் திருப்பலியில் கூடப் பங்குபெற முடியாமல் தவிக்கின்ற உடல் நலமற்றோர், முதியோர், கைவிடப்பட்டோர், அகதிகள், வேலையின்றி தவிப்போர், வறுமையில் உழல்வோர், விளிம்புநிலை மக்கள், போன்ற எல்லோர் வாழ்விலும் சூழ்ந்திருக்கும் இருளைப்போக்கி, ஆண்டவர் தம் திருமுகத்தை அவர்கள் பக்கம் திருப்பி, அமைதி அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment