திருக்குடும்பத் திருவிழா - 28.12.2025
இன்றைய வாசகங்கள்:
2. கொலோசையர் 3:12-21
3. மத்தேயு 2:13-15, 19-23
திருப்பலி முன்னுரை
இறை நம்பிக்கையின் மகிழ்வை உலகுக்கு வழங்குவதில் உப்பாக, ஒளியாகத் திகழ்ந்த திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட கூடியுள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். குடும்பம் ஒரு கோயில், அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். சிறந்த குழந்தையை வளர்ப்பது சிறந்த தலைமுறையை வளர்ப்பதாகும். மனத்தூய்மை, பணிவுடைமை, இன்சொல் பேசுவது, எளிமை, சிக்கனம், பகை மறத்தல் போன்ற பண்புகளில் வளரும் குடும்பம் நீதியிலும், நிம்மதியிலும் நீடுவாழும். தாய் தந்தையரின் அன்பு வாழ்வு குழந்தையை வழிநடத்தும் உந்து சக்தியாகும். சேர்ந்து உண்பது, சேர்ந்து செபிப்பது, பகிர்ந்து வேலை செய்வது குடும்பங்களில் உறவை வளப்படுத்தும். அன்பின் வெளிப்பாடான சகிப்புத்தன்மை கொண்டு பெற்றோரை, நோயுற்ற வயோதிகரை சுமையாகப் பார்க்காமல், பாசத்தோடு பேணிக் காப்பதில் புண்ணியம் நிறைந்துள்ளது. விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை உணர வேண்டும். ஆபிரகாம் - சாராள், ஈசாக்கு ரெபேக்கா, தொபியா சாரா, செக்கரியா எலிசபெத், மரியா யோசேப்பு இவர்களின் குடும்பங்களைப் போன்று நற்பண்புகள் நிறைந்த குடும்பங்களாக நம் குடும்பங்கள் திகழ அருள்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை:
பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2,3,4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.
1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
குடும்பம் குறித்தும், குடும்ப உறவுகள் குறித்தும், தூய பவுலடியாரின் அறிவுரைகளை இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது. அன்பு நிறைந்த வாழ்வு, குடும்ப தலைவன் தலைவி பிள்ளைகள் ஆகியோரின் கடமைகள்குறித்து ஆழமாக எடுத்துரைக்கும் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக ! அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. திருக்குடும்ப பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், எம் அனைவருக்கும் பொதுவான குடும்பமாய்த் துலங்கும் திருஅவைக்காகவும், திருத்தந்தை 14ஆம் லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். நாங்கள் எல்லோரும் ‘கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள்’ என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாக, எம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்க்கையை மேற்கொள்ள அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒரு கொடியவனின் ஆட்சியில் இறைமகனுக்குக்கூட பாதுகாப்பில்லை என்பதைச் சித்தரிக்கும் இன்றைய நற்செய்தி, எம் உலகில் இன்றும் நிலவுகிற அவல நிலையை உணர்த்துகிறது. சண்டைகளற்ற சகஜநிலையும், சமாதானமும், சமத்துவமும், சமூக நீதியும், சமயச்சார்பின்மையும், மனித மாண்பும் செழிக்கும் ஒரே குடும்பமாக, எங்கள் தேசமும் இந்த உலகும் திகழ்ந்திட வேண்டுமென்றும், அதற்காக எம்தலைவர்களும் நாங்களும் உழைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவருக்குப் பணிந்து நடப்போராகவும், தந்தையரை மதிப்போராகவும், அன்னையரை மேன்மைப்படுத்துவோராகவும், கணவருக்குப் பணிந்திருக்கும் மனைவியராகவும், மனைவியரிடம் அன்பு செலுத்தும் கணவராகவும், பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் குழந்தைகளாகவும், பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாத பெற்றோர்களாகவும் வாழ்ந்து, எம்குடும்பத்தைத் திருகுடும்பமாகக் கட்டியமைத்து, ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தும் குடும்பங்களாக மாறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ள எம்பங்கு மக்களும், அன்பியங்கள் அனைத்தும், நாங்கள் ஒவொருவருமே, பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் எங்களை அணிசெய்து. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டும். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னித்தும். அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும் அன்புடன் வாழவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. உலகெங்கும் வாழ்கிற வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட பெற்றோர், மற்றும் புறக்கணிக்கப்பட்ட முதியோர், கைவிடப்பட்ட மனைவியர் மற்றும் கணவர்கள், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், அகதிகளாக்கப்பட்ட மக்கள் போன்ற அனைவரும் இந்த உலகம் என்கிற குடும்பத்தில் தங்களுக்கான இடத்தைக் கண்டடைய, நீர் தாமே அருள்கூர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment