Sunday, January 11, 2026

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 


இன்றைய  வாசகங்கள்

எசாயா 49:3,5-6
1கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34

திருப்பலிமுன்னுரை

இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.
இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.
பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்’ (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என இறைவாக்கினர் எசாயா. நாம் நம் வாழ்வில் இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கம் மினிமின்ப் பூச்சிகளாகத் திகழ்கின்றோமா?  இவ்வாசகத்தின் மனதில் பதித்துச் சிந்திப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி

என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி

என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கொரிந்து திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராகச் சண்டையிட்டுக்கொண்ட மனிதர்களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுல் அவர்களைத் "தூயவர்கள்’ என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்… 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தூய பவுலடியாரின் மடலின்படி, இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். “உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்” என்கிற இறை அழைப்பை உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகின் பாவத்தைப் போக்க வந்த கடவுளின் செம்மறியாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக அருளும் அமைதியும், இந்த உலகிற்கும், அனைத்துலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும், உலகாளும் தலைவர்களும், எம் இந்திய தேசத்தை ஆட்சி புரிவோரும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய விழுமியங்களின்படி ஆட்சி புரியவும், மக்கள் யாவரும் ‘ஒரு தாய் பிள்ளைகள்’ என்கிற உணர்வோடு வாழ்ந்திடவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குழந்தைப்பருவத்திலேயே கைவிடப்பட்டோரும், இளமையிலே தம் வாழ்வையும் எதிர்காலத்தையும் தொலைத்தவர்களும், குடும்பத்தின் பாசமிழந்து தவிப்போரும், முதுமையில் தனிமைப்படுத்தப்பட்டோரும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்- பட்டோரும், அனைத்துவகையான விளிம்பு நிலை மக்களும், மனம் சோர்ந்து போகாமல், ‘ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்’ என்கிற உத்வேகத்துடன் தொடர்ந்து போராடி வெற்றிவாகை சூட, நீர்தாமே துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எனக்குப் பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” என்கிற மனத்தாழ்மையோடு நடந்துகொண்ட திருமுழுக்கு யோவானைப் போல, குடும்பம், நிறுவனம், சமுதாயம், பங்கு, திருஅவையெனப் பல்வேறு நிலைகளில் பொறுப்பில் இருப்போர், எந்த ஒரு சூழலிலும், தங்களை முன்னிறுத்த முயலாமல், இறைவனையும் பிறரையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிற நற்பண்புடன் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்’ என்கிற திருப்பாடல் பதிலுரையை உதட்டால் உச்சரிப்பதோடு நில்லாமல், எம்வாழ்விலும் பிரதிபலித்து, எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளையும், பணிகளையும், சீரிய செம்மனதுடனும், உள்ளத்து உவகையுடனும் நிறைவேற்றி, எம் இறைப்பற்றையும், பற்றுறுதியையும், வாழ்க்கையில் நிரூபிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment