Tuesday, January 27, 2026

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு - முதலாம் ஆண்டு

 பொதுக் காலம் நான்காம் ஞாயிறு
 
Matthew 5:1–12

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

செப்பனியா2:3, 3:12-13
1கொரிந்தியர் 1:26-31
மத்தேயு 5:1-12

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் ஞாயிறுத் திருவழிப்பாட்டின் நாயகனாம் இறைஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்.

இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.

ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில், வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

செப்பனியா, யோசியா காலத்தில்‌ இறைவாக்கு உரைத்தவர்‌. சமய வாழ்வின்‌ மறுமலர்ச்சிக்காக உழைத்தவர்‌. சீர்‌ கெட்ட மக்களை இறைவன்‌ தண்டிப்பார்‌ என்று எச்சரித்தவர்‌. எனினும்‌ இறைவனுக்கு அஞ்சி நல்வழி நடப்போர்‌ அவரது அன்பையும்‌ அருளையும்‌ பெறுவர்‌ என்று ஆறுதலும்‌ கூறியவர்‌. எஞ்சியுள்ளோரின்‌ எழில்மிகு வாழ்வு இங்குச்‌ சித்தரிக்கப்படுகிறது.  இறைவனின்‌ கோபாக்கினைக்குத்‌ தப்பிக்க கூடியவர்‌ இறைவனுக்கு அஞ்சி நடக்கும்‌ எளியோரே என்ற ஆறுதலான மொழியையும்‌ நாம்‌ கேட்கிறோம்‌. இறைவனது எச்சரிப்பு எனக்கு எட்டுகிறதா?  இவ்வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: 146: 7. 8-9a. 9bc-10
பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பெறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

1. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

2. 
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

யூதமக்கள் கிறிஸ்துவின் சிலுவை மீட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிலுவை அவமானத்தின் சின்னம். ஆனால் அதன் மூலமாக வெற்றிக் கொண்டார். கிரேக்கர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர்ப்பின் மூலம் மீட்பைத் தந்தார். நம்மை மீட்க மடமை என்று கருதியதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இறைமகன் தாழ்ச்சி கொண்டார். உலக ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமையைப் பாராட்டாமல் மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின் பெருமைப் பாராட்ட அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், ஆண்டவரைத் தேடுகிற, நேர்மையை நாடுகிற, மனத் தாழ்மையை விரும்புகிற மக்களாக வாழவும், எங்களது வாழ்க்கை நிலை, செல்வம், செல்வாக்கு, பதவி, படிப்பு என எதிலும் பெருமை கொள்ளாமல், ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டும் இறைக்குலமாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்’ விழாவினை நாளைய தினம் கொண்டாடவிருக்கும் வேளையில், அர்ப்பண வாழ்வினை மேற்கொண்டுள்ள துறவியர் அனைவரும், “நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்” என்கிற பவுலடியாரின் நினைவூட்டலை உள்வாங்கி, தங்கள் அழைத்தலின்   மேன்மையை உணர்ந்து, தங்களது அர்ப்பணத்திலும், பணிவாழ்விலும் சிறந்து விளங்கி, பிரமாணிக்கத்துடன் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அவர்கள் “கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்” என்கிற நிலையை இந்தப் பூவுலகு அடைவதற்கு ஏதுவாக,   உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கடவுள், ஞானிகளை வெட்கப்படுத்த, மடமையென உலகம் கருதுபவற்றையும், வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவையென உலகம் கருதுபவற்றையும், உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் தேர்ந்துகொண்டார் என்கிற பேருண்மையை உணர்ந்தவர்களாய், இறைமக்களாகிய நாங்களும், குறிப்பாக இளைஞர் இளம்பெண்களும், எங்கள் கல்வியறிவு, திறமைகள், ஆற்றல்கள் ஆகியவற்றை வளர்க்கும் அதே வேளையில், இறைஞானத்திலும், மனத்தாழ்மையிலும் வளர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
       
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இயேசுவின் மலைப்பொழிவின் சாரத்தை உள்வாங்கி, ஏழையரின் உள்ளத்தோராகவும், கனிவுடையோராகவும், தூய்மையான உள்ளத்தோராகவும், இரக்கமுடையோராகவும், அமைதி ஏற்படுத்துவோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும், அதன்பொருட்டு துன்பத்தை ஏற்க துணிவுள்ளவர்களாகவும் விளங்கி, பேறுபெற்றோராகவும், விண்ணரசுக்கு உரிமை பெற்றோராகவும் மாறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

No comments:

Post a Comment