பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-
எசாயா 9:1-4
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23
திருப்பலி முன்னுரை:-
பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார்.
மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும். இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.
அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்!
வாசகமுன்னுரை:-
முதல் வாசக முன்னுரை:-
செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம்மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்:-
பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.
திருப்பாடல்: 27: 1,4, 13-14
1. ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
2. நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி
3. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதி கொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:-
கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்க கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-
1. இறைவாக்கு ஞாயிறை சிறப்பிக்கும் இந்நாளில், தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், இறை வார்த்தை ஒளியில் எங்கள் வாழ்வை அமைத்து, உலகிற்கு ஒளியாகவும், சுவை சேர்க்கும் உப்பாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர் பதட்டங்களும், வன்முறைப் போக்குகளும், பொருளாதார நெருக்கடிகளும் இந்த உலகை இருட்டிற்குள் இழுத்துச் செல்லும் இன்றைய சூழலில், “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என்கிற இறைவாக்கு நிறைவேற வேண்டுமென்றும், ஆட்சி புரிவோரும், அனைத்து மக்களும், அமைதியின் பாதையில் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எம்நாட்டின் குடியரசுத் தினத்தை நாளைய தினம் சிறப்பிக்கவிருக்கும் இந்தியர்களாகிய நாங்களும், எம்நாட்டின் தலைவர்களும், குடிமக்களும், சாதி மத பேதமின்றி, உயர்ந்தோர் - தாழ்ந்தோர், கற்றோர் - கல்லாதோர், இருப்போர் – இல்லாதோர், ஆடவர் – பெண்டிர், சிறியவர் – பெரியவர், என்கிற எந்தவொரு பாகுபாட்டையும் பெரிதாக்காமல், ‘ஒரு தாய் மக்கள் நாமெல்லாம்’ என்கிற உணர்வோடு வாழ, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அறுவடைத் திருநாளாம் பொங்கல் பெருநாளை கொண்டாடி மகிழ்ந்த நாங்கள் எல்லோரும் “ஆண்டவரே! அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்” என்கிற இறைவாக்கின் அனுபவத்தை, எம் அன்றாட வாழ்வில் சுவைக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்’ என்கிற பவுலடியாரின் அறிவுரைக்கும், ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற இயேசுவின் போதனைக்கும் செவிசாய்த்து, ஒற்றுமையில் பயணிக்கும் தூய மக்களாகத் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment