ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா

இன்றைய வாசகங்கள்
எசாயா: 42:1-4,6-7
திருத்தூதர் பணிகள்: 10:34-38
மத்தேயு: 3:13-17
திருப்பலி முன்னுரை:
திருவழிபாடு ஆண்டின் பொதுக் காலத்தின் முதல் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர் இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்குப் பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தெளிவாக இன்றைய வாசகத்தின் வழியாகப் பதிவுச் செய்கிறார். இதோ என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது என்ற ஆண்டவர் பெருமிதம் கொள்கின்றார். அவர் வழியாக நாம் அடையவிருக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்டுச் சிந்தித்து ஆண்டவரில் பூரிப்படைவோம்.
பதிலுரைப் பாடல்
திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1. இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கு ஏற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி
2. ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி
3. ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம்
இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் அருள்வளங்களை எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. அலகையின் சோதனைகளிலிருந்து நம்மை விடுவித்து என்றும் நன்மை செய்துகொண்டே இருக்கின்றார். இறைவாக்கினார் எசாயாவைப் போல் புனித திருத்தூதர் பேதுருவும் ஆண்டவரின் அருள்கொடைகளை ஆழமாக நம் உள்ளத்தில் பதிவுச் செய்யும் இவ்வாசகத்தைக் கவனித்து இறையருள் பெறுவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவை சிறப்பிக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், திருமுழுக்கு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு ஏற்ற வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றும், எங்கும் நன்மை செய்துகொண்டே சென்ற இயேசுவிடம் இருந்த மனநிலையோடு, நாங்கள் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகாளும் தலைவர்களும், எம்தாய்த்திருநாட்டை ஆட்சி புரிவோரும் “நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது” என்று கடவுளும், தேர்ந்தெடுத்த மக்களும் பூரிக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தவும், நேர்மையாகச் செயல்படுபவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும், அமைதியை நாடுவதிலும், அனைவருக்குமான நலத்தில் முனைப்பாய் இருப்பதிலும், தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ‘இதோ! என் ஊழியர்!’ என ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட குருக்களும், துறவியரும், மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இருந்து, பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரை மீட்கவும், இன்னபிற தொண்டுகளை ஆற்றவும், நீர் தாமே ஆசி அருள வேண்டுமென்றும், இன்னும் பல பேர், தேவ அழைத்தல் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளின் பிள்ளைகளாய் நாங்கள் இருந்து, இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை நம்பும் மக்களாகவும் திகழ்ந்து, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், உழைக்கும் இடங்களிலும், வாழும் சமுதாயத்திலும், அமைதியின் தூதுவர்களாகவும், இறைவனுக்கும், மனிதருக்கும் ஏற்புடையவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் ஒருவரைப் போல் திருமுழுக்குப் பெற்ற இயேசுவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் தமிழ்ச் சொந்தங்களோடு சேர்ந்து, நன்றி பாராட்டுதல், உழவரையும் உழைப்பவரையும் மதித்தல், பிற உயிரனங்களையும் மாண்புடன் நடத்துதல், காண்போரை எல்லாம் மனம் நிறைய வாழ்த்துதல் ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடி, பிறக்கின்ற தை முதல், பொங்கும் மகிழ்வுடன், வாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment