ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!
நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.
பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்க வேண்டும்” என்கிறார்.
அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப் போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...
வாசக முன்னுரை
முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின்போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். பாபிலோனிய அடிமைத் தளையாலே அழிந்துபட்ட எருசலேமுக்கும், அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும் ஆறுதல் மொழிகளாக எழுதப்பட்டவை. எருசலேம் புத்துயிர் கொள்ளும் என்று நம்பிக்கையூட்டும் இன்றைய வாசகம் இயேசுவின் இறைக் காட்சியால் அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர் என்பதைக் காட்டுகிறது. கவனமுடன் செவிமெடுப்போம் இவ்வாசகத்தை.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.
1. கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி.
2. அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி.
3. தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி.
4. தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி.
இரண்டாம் வாசகம்
கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைக் கண்டு ஆராதித்தது ஒரு அடையாளம், ஒரு மறைபொருள். யூதருக்கு மட்டும் இயேசு அரசரன்று, மக்களினத்தார் அனைவருக்கும் அவர் மன்னர் என்பதைச் சுட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத் 2:1-12). பவுல் அடியாரும் இம்மறைபொருளின் கருத்தை அறிந்து, புறவினத்தாருக்காகப் பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது இன்றைய வாசகம். இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவினை கொண்டாடுகிற இந்நாளில், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவையின் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். “எருசலேமே! எழு! ஒளிவீசு! ஆண்டவர் உன்மீது எழுந்தருள்வார், அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்” என்கிற எசாயாவின் இறைவாக்கு புதிய எருசலேமாகிய திருஅவையில் மெய்ப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “கடவுளே, நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” என்கிற திருப்பாடல் வரிகள், நாங்கள் வாழுகிற இக்காலக்கட்டத்தில் உலகாளும் தலைவர்களுக்கும், நாடாளும் ஆட்சியாளருக்கும் பொருந்துவனவாக. நீதியும், மிகுந்த சமாதானமும் செழிக்கும் பூமியாக, இந்தப் பூவுலகை மாற்றிட, மாந்தர் அனைவரும், பிரிவினையைத் துறந்து, ஒற்றுமையாய் இணைந்து, உழைத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. விண்மீன் எழக்கண்ட ஞானியர், அதனைப் பின்தொடர்ந்து, இயேசுவை வந்தடைந்தது போல, எம் இளையோரும், பிள்ளைகளும், உண்மை ஒளியாகிய உம்மை வந்தடைய வேண்டுமென்றும், காலத்தின் அறிகுறிகளையும், அறிவியல் முன்னேற்றங்களையும், தவறாகக் கையாண்டு, அவைகளுக்கு அடிமைகளாகாமல், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறவும், ஒளிமயமான எதிர்காலத்தை இவ்வுலகில் மட்டுமன்றி, நிலைவாழ்விலும் கண்டடைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாதான், இந்தியர்களாகிய எங்களுக்கும், யூதரல்லாத அனைத்து இன மக்களுக்கும் உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவாக அமைந்திருந்தது. யாம் பெற்ற விசுவாச ஒளிக்காக நன்றி செலுத்தும் வேளையில், இன்னும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும், இனங்களுக்கும், நாங்கள் நற்செய்தியின் தூதுவர்களாய் அமையவும், மறைபரப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோர் உமது ஆற்றலை முழுமையாய் உணர்ந்து தொடர்ந்து பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஆண்டவரால் கனவில் எச்சரிக்கப்பட்டதால், வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய ஞானியரைப் போலவும், யோசேப்புவின் தலைமையிலான திருக்குடும்பம் போலவும், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இயேசுவின் உடனிருப்பை உறுதி செய்யும் வகையில், இறை ஏவுதலுக்குப் பணிந்து. எம்வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைதித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:
Post a Comment