Monday, October 26, 2026

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 1.11.2026

 பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 1.11.2026

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா


திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் விண்ணகத்தில் கடவுளின் திருமுன் மகிழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.

திருச்சபையினால் அதிகாரப்பூர்வமாகப் புனிதர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, மண்ணுலகில் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி, இன்று விண்ணகப் பேரின்பத்தில் இணைந்திருக்கும் எண்ணற்ற புனிதர்களை இன்று நாம் நினைவு கூர்கிறோம். அவர்கள் நமக்காகப் பரிந்து பேசுவதுடன், நாமும் புனித வாழ்வு வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள்.

இன்றைய நற்செய்தியில், இயேசு வழங்கிய 'மலைப்பொழிவு' அல்லது 'பேறுபெற்ற நிலைகள்' புனித வாழ்விற்கான வரைபடமாகும். ஏழ்மை, இரக்கம், தூய்மை, அமைதி மற்றும் நீதிக்காகத் துன்புறுத்தப்படுதல் ஆகியவையே விண்ணகத்திற்குச் செல்லும் வழிகள் என்பதைப் புனிதர்கள் நமக்குக் காட்டியுள்ளனர். நாமும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையோடு புனிதத்தை நோக்கிப் பயணம் செய்ய வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:

விண்ணகத்தில் அரியணையின் முன்பும், ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் முன்பும் நின்றுகொண்டிருக்கும் எண்ணற்ற புனிதர்களைப் பற்றிய காட்சியைத் திருத்தூதர் யோவான் விவரிக்கிறார். அவர்கள் பெரும் துன்பங்களிலிருந்து கடந்து வந்தவர்கள் என்றும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தங்கள் ஆடைகளை வெண்மையாக்கியவர்கள் என்றும் விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 .

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

2. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

3.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நாம் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய அன்பு என்பதைப் புனித யோவான் வியப்புடன் கூறுகிறார். நாம் இப்போது கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்; கிறிஸ்து வெளிப்படும்போது நாமும் அவரைப் போலவே இருப்போம் என்ற நம்பிக்கையோடு, நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. புனிதர் அனைவரின் திருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில், திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். புனிதத்தின் பாதையில் நாங்கள் எந்நாளும் பயணித்து, வாகை சூடியவர்களாய் வானக வீட்டை அடையும் பேற்றினை பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்களுக்கும் விண்ணக பேரின்பத்தில் பங்கு தரத் திருவுளம் கொண்ட இறைவா, இவ்வுலகில் அமைதி நிலவ வேண்டுமென்றும், தலைவர்களும் குடிமக்களாகிய நாங்களும், நீதியின் பாதையில் பயணித்து ஒன்றுபட்ட உலகை உருவாக்க       வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறந்த அடியார்களை நினைவு கூர்ந்து ஜெபிக்கிற இம்மாதத்தில், எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலும் மரித்த ஆன்மாக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியையும், முடிவில்லா பேரின்பத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்” என்பதை எடுத்தியம்பும் யோவானின் திருமடலின் கூற்றை உணர்ந்தவர்களாக, நாங்களும், எங்கள் குடும்பமும், இளையோரும், குழந்தைகளும், இவ்வுலகில் வாழ்கிறபோதே உம்மைப்போலவே இருக்கவும், நீர் தூயவராய் இருப்பது போல் நாங்களும் தூயவராக வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஏழையரின் உள்ளத்தோராகவும், கனிவுடையோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும், இரக்கமுடையோராகவும், தூய்மையான உள்ளத்தோராகவும், அமைதி ஏற்படுத்துவோராகவும் துலங்கி, இவ்வுலகிலும், மறுவுலகிலும்   பேறுபெற்றோராய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment