அனைத்துலக அரசராகிய கிறிஸ்து பெருவிழா 22/11/2026
(வழிபாட்டு ஆண்டின் 34-ஆம் மற்றும் இறுதி ஞாயிறு)
திருப்பலி முன்னுரை
பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை அனைத்துலக அரசராகிய கிறிஸ்து பெருவிழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.
இன்று நாம் போற்றும் அரசர், உலக அரசர்களைப் போல அதிகாரத்தாலும் ஆயுதங்களாலும் ஆள்பவர் அல்ல; மாறாக, சிலுவையில் தம் உயிரைத் தந்து, அன்பினாலும் சேவையினாலும் ஆள்பவர். இன்றைய திருவழிபாடு கிறிஸ்துவை ஒரு "நல்ல ஆயராகவும்", "நீதியுள்ள நடுவராகவும்" நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
நற்செய்தியில், இறுதித் தீர்ப்பின் காட்சியை இயேசு விளக்குகிறார். "மிகச் சிறியவர்களாகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்று கூறும் ஆண்டவர், அண்டை இருப்பவருக்குச் செய்யும் சேவையே அரசராகிய கிறிஸ்துவுக்குச் செய்யும் வழிபாடு என்பதைத் தெளிவுபடுத்துகிறார். நாம் கிறிஸ்துவின் அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக, ஏழை எளியோரிடம் அன்பு காட்டுகிறோமா? எனச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அன்பு ஆட்சி எங்கும் நிலவ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை :-
ஆண்டவராகிய கடவுள் தாமே ஒரு நல் ஆயராக வந்து தம் ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பார் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் கூறுகிறார். காணாமல் போனதைத் தேடி, காயப்பட்டதற்குக் கட்டுப்போட்டு, நலிந்ததைத் திடப்படுத்தும் அன்பு நிறைந்த அரசராகிய இறைவனை இவ்வாசகத்தில் காண்போம்.
பதிலுரைப்பாடல் :-
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்து, எல்லா வல்லமைகளையும் அதிகாரங்களையும் அழித்து, தந்தையாம் கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார் என்று புனித பவுல் விளக்குகிறார். இறுதியில் கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார் என்ற நம்பிக்கையைத் தரும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. நல்லாயனாகிய இறைவா, திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறாகிய இன்று, தாயாம் திருஅவைக்காகவும், அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், ஆகிய அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்” என்கிற முதல் வாசக மனநிலையோடு அவர்கள் எங்களை வழிநடத்தவும், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் அவர்களுக்குப் பணிந்து நடக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் எனும் விழாவினைக் கொண்டாடுகிற வேளையில், உலகாளும் தலைவர்களுக்காகவும் எம்நாட்டினையும், மாநிலத்தையும் ஆட்சி செய்வோருக்காகவும் மன்றாடுகிறோம், நீதியுடனும், நேர்மையுடனும், அனைவருக்குமான அரசுகளை நடத்தி, அனைத்து மக்களும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், மனநிம்மதியுடனும் வாழ்ந்திட வகைசெய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை’ என்றும் ‘என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்’ என்றும் சொல்லவும், சொல்வதை நம்பவும், நம்பிக்கைக்கு ஏற்ப அச்சமின்றி வாழவும், எங்கள் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர் இளம்பெண்களுக்கும், குழந்தைகள் அனைவருக்கும் திடம் தர வேண்டுமென்றும், நீர் தாமே ஆயனாய் இருந்து, பசும் புல்வெளி, அமைதியான நீர்நிலை போன்ற தெளிந்த எதிர்காலத்திற்கும் வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இறந்துபோன அடியார்களுக்காகவும், மரித்த ஆன்மாக்களுக்காகவும் சிறப்பாக ஜெபிக்கிற இந்த மாதத்தில், எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும் இருந்து மறைந்து போன அனைவரும் ‘ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்’ என்கிற சங்கீதக்காரரின் கூற்றுப்படி நிலைவாழ்வை அனுபவிக்கவும், யாருமே நினையாத ஆன்மாக்களும் உம் பேரிரக்கத்தால் ஈடேற்றம் பெறவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும் ‘‘தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிற உமது ஆசிமொழியினை கேட்கின்ற வகையில், இறைபக்தியாலும், இரக்கச் செயல்களாலும் எங்கள் வாழ்க்கையை செம்மையாக்கி, உம்மை வந்தடைய வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment