Tuesday, July 19, 2022

பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு: 24-07-2022

  பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு:


இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 18:20-32
கொலோசையர் 2:12-14
லூக்கா 11:1-13

திருப்பலி முன்னுரை:

 பொதுக்காலம் ஆண்டின் 17 ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்குக்கொள்ள ஆர்வமுடன் ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் அன்பர்களை அன்புடன் வாழ்த்துகின்றோம். நல்ஆசானாக இருந்து செபிக்கக் கற்றுத்தருகிறார் நம் இயேசு. இறைவேண்டல் என்பது இறை-மனிதத் தொடர்பு சாதனமாகும். செபமே கிறிஸ்துவ வாழ்வின் அடிப்படையும் ஆணிவேருமாகும். இதனைச் சரியாகப் புரிந்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவுகின்றன. ஆபிரகாமின் இறைவேண்டுதலைக் கேட்ட இறைவன் நல்லவர்களுக்காகத் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவைக்க முன்வருகிறார். நம்மைப்போலப் பழிவாங்கும் உணர்வு இறைவனிடம் இல்லை. தயாளமுள்ள இறைவனிடம் நம் செபங்களுக்கு எதிர்ப்பார்ப்பதைக் காட்டிலும் சிறப்பாக நம்மை நன்மைகளால் நிரப்புகிறார்.
 கிறிஸ்துவின் வழியாக மாந்தர்க்கும் இறைவனுக்கும் இருந்த இடைவெளி நீங்கியது. தந்தை என்று அழைத்துச் செபிக்கக் கற்றுத் தந்த இயேசு நம் வாழ்வில் எது நடந்தாலும் மனநிறைவோடு வாழும் வரம் தான் சிறந்தது என்று உணர்த்துகின்றார். இதையே புனிதப் பவுலடிகளார் நாமனைவரையும்” இடைவிடாது செபியுங்கள். என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே! என்று அழைக்கின்றார். இதனை உணர்ந்தவர்களாக இணைந்துச் செபிப்போம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில், நிறைவாழ்வு நம் உள்ளத்தில் இல்லத்தில் நிறைந்திட....

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமைச் சந்தித்த மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம், குறிப்பாக பாலியல் பிறழ்வு பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க் கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், அந்நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசுவதே இன்றைய முதல் வாசகம். ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்ற இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2. 2b-3. 6-7. 7-8
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.  நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:

ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்து பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டு விட்டது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் . 'கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு' பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர் பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, 'இறப்பு', 'கடன் பத்திரம்' என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார். இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. மேன்மையானவராக இருக்கும் எம் வானகத் தந்தையே!இறைவா! உம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருவர் ஒருவருக்காய் பரிந்துரைத்துச் செபிக்கவும், உம் திருப்பணியின் நிமித்தம் தீவிரவாதிகளிடம் துன்புறும் எண்ணற்ற எம் திருஅவையின் திருப்பணியாளர்களுக்கு உறுதியாக விசுவாத்தையும், பாதுகாப்பையும் நல்கிடவும், இறையாட்சி அனைவர் உள்ளத்திலும் நிறைந்திடத் தேவையான வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எமக்காய் எப்பொழுதும் கரம் விரித்துக் காத்திருக்கும் என் இறைவா! செபம் என்பது உமக்கும்  எமக்கும் உள்ள உன்னத உரையாடல். அதில் கேட்டும் கிடைக்காமல் போனதும் உண்டு. கேட்காமல் நீர் வாரிவழங்கியது பலவும் உண்டு என்பதனை உணர்ந்து என்ன நேர்த்தாலும் நன்றியோடு உம்மைப் போற்றிட, தன்னலம் பாராமல் அனைவருக்குமாய் செபித்திட நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நாம் இயேசுவைப் பின்பற்றி, தூய ஆவியாரின் துணையோடு, தந்தையைப் போல் இரக்கமுள்ளவராக மாறவும், ஏழைகள், தேவையில் இருப்போர் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்குத் தேவையான பிறரண்புப் பணிகளைப் புரியும் நல் மனதையும், எம் இளையோர் மனங்களில் விதைத்திடவும், தாம் பெற்றத்திறமைகளை நல்வழியில் பயன்படுத்தி நீர் விரும்புப் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத்தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகும் அருளை எங்களுக்குத் தந்து கிறிஸ்துவின் ஒளியில் நடக்க எங்களை அழைத்துள்ளீர். பொய்மை என்னும் இருளில் நாங்கள் சிக்கிக் கொள்ளாமல், உண்மையின் பேரொளியில் நிலைத்து நின்றிட எங்களுக்கு அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத்தந்தையே எம் இறைவா!  வயது முதிர்ந்த எங்களின் பெற்றோரின் பெற்றோர்களை உம்மிடம் ஓப்படைக்கின்றோம். அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட எல்லா நன்மைகளுக்கும் நன்றி கூறுகின்றோம். அவர்கள் மூப்பின் காரணமாக சந்திக்கும் நோய்களிலிருந்தும், தனிமையால் ஏற்படும் மனஉளச்சளிலிருந்தும் விடுதலையையும் கொடுத்தருளும். அவர்களை அன்புடன் அரவணைக்கும் நல்மனதினை எங்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, July 12, 2022

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு 17/07/2022

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:-

தொடக்கநூல் 18:1-10
கொலோசையர் 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 16ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு விருந்தோம்புதல் பற்றிக் கூறும் அதேவேளையில் நாம் முதலில் நிலைவாழ்வுக்குத் தேவையான நல்லதை நம்மில் பெற்றுக்கொள்வது என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். தொடக்கக் காலச் சமூகத்தில், 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. இங்கு விருந்தோம்புதலை ஆபிரகாமும் சாராளும் இணைந்துப் பகிர்ந்துக் கொண்டார்கள். இந்த உலகிற்கு விருந்தினராக வந்த இயேசு கிறிஸ்து இந்த உலகின் மக்களுக்காகத் தாமே விருந்தாகின்றார். விருந்தினராக வந்தவர் தன் சிலுவைப் பாடுகள் மற்றும் இறப்பின் வழியாக விருந்தோம்புதலை நிறைவேற்றுகிறார். தன் உயிரையே கொடுக்கும் அளவிற்குத் துணிந்து நிற்கிறது இயேசுவின் விருந்தோம்பல்.

'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்புச் செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' இந்த உலகிற்கு வெறுங்கையராய் வரும் நாம் அனைவருமே விருந்தினர்கள் தாம். நமக்கு விருந்துப் படைக்கும் இயேசுவிடம் இவ்வுலகில் நல்விருந்தினராய் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

இன்றைய முதல் வாசகத்தில் “ஆபிரகாமின் காத்திருத்தல்“ பற்றி வாசிக்கின்ற நமக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (1) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (2) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது. ஆபிரகாம் தன்னிடம் வந்த விருந்தினர்களுக்கு  விருந்தளித்தார். ஆனால், வந்திருந்த இறைவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்து விருந்தோம்பலுக்குப் பதில் தருகின்றார்.  ஆபிரகாம் வாழ்வில் நடைப்பெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 15: 2. 3-4. 5
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். -பல்லவி
தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்;தம் அடுத்தவரைப் பழித்துரையார்.நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலைக் கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்தநேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதியை தருகின்றார். இவ்வாறாக, கிறிஸ்துவின் விருந்தோம்பல் அவரின் தற்கையளிப்பிலும், அவர் தன் மக்களுக்குத் தரும் மாட்சிமையிலும் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நம்பின்னையாளரின் மன்றாட்டுகள்:-


1. இறைத்தந்தையே எம் இறைவா! முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நீர் செய்த அனைத்துவியத்தகுச் செயல்களை நினைவு கூர்ந்துத் திருஅவை, புதிய ஆற்றலோடு அனைத்து மாந்தருக்கும் உம் இறையரசை வழங்கிடத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.   விருந்தோம்பல் என்பது 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் செய்யப்படும்' ஒரு செயல். இந்த நான்கில் ஒன்று தவறினாலும் விருந்தினர் முகம் சுளிக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து எங்களை நாடி வரும் எங்கள் உறவினர்களையும், விருந்தினரையும் அன்புடனும், மகிழ்ச்சியுடன் நடத்திக் செல்லத் தேவையான பரந்த மனதினை அருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்ற அனுபவமொழியினை மனதில் ஏற்று ஏழை,பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் இருப்பவர்களுக்குப் பரந்த உள்ளத்தோடு தன்னலமற்ற சேவைப் புரியவும்,இதையே இயேசுவின் சவாலாக ஏற்று வெற்றிப் பெற இறைஇரக்கத்தின் ஆண்டில் சிறப்புடன் பணிப் புரிய உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.  இக்காலத்தில் நாங்கள் படும் துன்பங்கள் , எதிர்காலத்தில் வரப்போகும் மாட்சிமைக்காக என்பதனை உணர்ந்து நாங்கள் உலகில் நிலவும் சாதி, இனம், மொழி, சமயம் இவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து மனுக்குலம் முழுவதும் சமத்துவம், சகோதரத்துவம் நிலவிட வேண்டி உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5.பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்து பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, July 4, 2022

பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு 10/07/2022




இன்றைய வாசகங்கள்:-

இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

திருப்பலி முன்னுரை:-


பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக் கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.

அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை": ஒரு தேவையான விடயத்தை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட, நாம் ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையோடு இல்லாமல் இருப்பது தான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும். நாம் கடவுளை நமது முழு உள்ளத்தோடும், நமது முழு ஆற்றலோடும் அன்பு செய்தோமானால், தாமாகவே மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் புதியவர்கள் ஆக இருந்தாலும், அல்லது நாம் நமக்கு பிடிக்க தேவையில்லை என்று இருந்தாலும், அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.

திருச்சட்ட அறிஞர் இயேசுவை சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையிலுள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார் ஆண்டவரை, அடுத்தவரை, என்னை - இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும் அந்த அன்பு. இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

வாசக முன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே “ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!” என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் போது, கட்டளை என்பது “புரியாததோ” அல்லது “வெகு தொலைவில் இருப்பதோ,” “விண்ணிலோ” அல்லது “கடலுக்கு அப்பாலோ” இருப்பது அல்ல, மாறாக, “உனக்கு மிக அருகில்,” “உன் வாயில்,” “உன் இதயத்தில்” இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இணைச்சட்ட நூலிருந்து வரும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!
திபா. 69: 13,16,29-30,35,36
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் திருத்தூதர் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவே திருச்சபையின் தலை' என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்தநெருக்கத்தை, 'ஒப்புரவாதல்' என்ற இறையியல் கருத்துகள் வழியாக முன்வைக்கிறார் திருத்தூதர் பவுல். விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கிறிஸ்துவில் கைகோர்த்து நிற்கின்றன என்று விவரிக்கும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
 

 நம்பிக்கயாளரின் மன்றாட்டுகள்:-

1.மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டாற்றுவதற்கே என்று கூறிய எம் இறைவா, இன்றைய காலக்கட்டத்தில் திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் தங்களை அயலானைக் கண்டுகொண்டு உணர்ந்து அவர்களுக்குத் தொண்டாற்றத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.  நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற எம் இறைவா இன்று உலகில் நிலவும், தீவிரவாதம், மனிதநேயமற்ற, செயல்கள், இனக்கலவரங்கள், சாதி, மதப் பேதமின்றி அனைத்து மாந்தர்க்கும் இப்புவிச் சொந்தம் என்ற பரந்த மனநிலையை அளித்து இவர்கள் அனைவரும் உண்மையான மனமாற்றமடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளுக்கு இறங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்று இறைவார்த்தைக்கு ஏற்ப, ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் உழல்வோருக்கு தேவையான உதவிகளைச் செய்திடவும், ஆதரவற்றோர்க்கு ஆதரவளித்திடவும் எல்லோரும், எல்லாம் நிறைவாகப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உன்னைப் படைத்தவனை உன் வாலிபநாட்களில் நினை என்று கூறிய எம் இறைவா, எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, June 28, 2022

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 3
03/07/2022


இன்றைய வாசகங்கள் :

எசாயா 52: 7-10
எபேசியர் 2: 19-22
யோவான் 20: 24-29

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு. நம் இந்திய திருநாட்டின் பாதுகாவலர் திருதூதர்  தோமையாரின் பெருவிழா. இவ்விழாவைச் சிறப்பிக்க  ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
மிகவும்‌ அன்பு செலுத்திய தம்‌ தலைவரை, நண்பராகப்‌ பாவித்த இறைமகனை இழந்த சோகத்திலிருந்த சீடர்கள்‌ இயேசுவை உயிருடன்‌ கண்டதால்‌ பேருவகை கொண்டு இருந்திருக்க வேண்டும்‌. அந்நேரத்தில்‌ அங்கில்லாத தோமையார் வந்ததும்‌ “ஆண்டவரைக்‌ காணோம்‌” என்ற வார்த்தை தோமையாரின் உள்ளத்தில்‌ ஆவலை தாகத்தை ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்‌.  
“தழும்பைப்‌ பார்த்து, அதில்‌ விரலை இட்டு, விலாவில்‌ என் கைகளை இட்டாலன்றி” என்ற வார்த்தைகள்‌ இயேசுவைப்‌ பார்க்க வேண்டும்‌ அவரைத்‌ தொட வேண்டும்‌ என்ற தோமையாரின்‌ ஏக்கத்தையும்‌ தாக்கத்தையும்‌ வெளிப்படுத்துகின்றது. ஆனால் தோமையார் தான் கேள்வியின் மூலம் முக்காலத்திற்கும் விடை தேடுகின்றார். இதனை உணர்த்தியவரும் தந்தையே ஆவார்.
தாகமுள்ளவர்களைத்‌ தேடி வருகின்ற நம்‌ இயேசு மீண்டும்‌ சீடர்களுக்குத்‌ தோன்றி தோமையாரின்‌ விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்‌. அப்போது தோமையார் கூறிய “நீரே என்‌ ஆண்டவர்‌! நீரே என்‌ கடவுள்‌” என்ற வார்த்தை நம்பிக்கையின்‌ உறுதியை பறைசாற்றுகிறது. தோமையார் நம்பிக்கையின்‌ அடையாளமாகிறார்‌. ஆம் சகோதரர்களே! இன்று நாம் கண்ணுக்கு புலபடாத இறைவனை கண்டோம், கேட்டோம், அவரில் மகிந்தோம் என்பவை நமது உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான நிறைவோடு இத்திருப்பலியில் நம் நம்பிக்கையை உறுதிபடுத்துவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றி பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளை காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்க வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதை காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1,2 (பல்லவி: மாற் 16: 15)
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1.பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2.ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் அன்னியர் அல்ல. கடவுளால் கட்டப்பட்ட மாபெரும் குடும்பம். இயேசுவே இதன் மூலைக்கல்லாகக் திகழ்கிறார். இயேசுவுடன் இணைந்து தூயஆவியாரின் வழியாக நம் கட்டப்படுகிறோம் என்பதனை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடிகளாரின் வார்த்தைக்கு கவனமுடன் செவிமெடுப்போம். அதனையே நம் வாழ்வாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்பு தன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளில் நிலைத்து நின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எல்லாம் வல்ல இறைவா! புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ள எம் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குச் சாலமோன் ஞானத்தையும், தாவீதின் தைரியத்தையும், தூயஆவியாரின் கொடைகளையும் கொடுத்துத் தாங்கள் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் வென்றிடத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, June 21, 2022

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 26/06/2022


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

I. 1 அரசர் 19:16,19-21
II. கலாத்தியர் 5:1,13-18
III. லூக்கா 9 : 51-62

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை பொதுநிலையினரின் ஞாயிறாக் கொண்டாட திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு.

கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். கலப்பை களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின்  நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல. நம் சிந்தனையில் இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய ஈடுபாடு உள்ள கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. எலிசா, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும் என்று கேட்க  'சென்று வா!' என அனுமதிக்கின்றார் எலியா. எலிசா தான் செய்த விவசாயப் பணியை அடியோடு ஒழித்து தன் இறந்தகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார். இறைஅழைத்தலை ஏற்ற நம்மை அழைக்கும் இந்த முதல் வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1.இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி
2.எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
3.என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி
4.வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இறந்த காலத்தையும், ஊனியல்பையும் கழுத்தை அமுக்கும் நுகம் என்று உருவகிக்கும் பவுல், 'மீண்டும் அடிமைத் தளை என்னும் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்'  எனக் கட்டளையிடுகின்றார். கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  அருட்பணியாளர்களும், பொதுநிலையினரும் இணைந்து செயல்பட்டால் அங்குத்  திருச்சபை நிறுவப்படுகின்றது என்ற மொழிக்கேற்ப எம் திருஅவையில் அருள் வாழ்வில் பொதுநிலையினர், குருநிலையினர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும் இறையாட்சி பணியினை தமது சொல்லாலும், செயலாலும் சான்று பகிர்ந்திட வரமருள வேணடுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ அச்ச உணர்வற்ற இக்ககாலத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற சில மாயைகளை மனத்தில் கொண்டு உம்மோடு ஒப்புறவாக தூய மனச்சான்றுடன் எங்கள் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட எங்களை நல்வழி கொணர வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா இக்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய் உலகம் போக்கிலான வழிகாட்டுதலில் தங்கள் வாழ்வை இழந்த  எம் இளையோர் சிறுவர், சிறுமிகள் ஆகிய அனைவரும் உண்மையை உணர்ந்தவர்களாக இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர், இளம் பெண்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதைனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்த்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, June 13, 2022

ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 19-06-2022

ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா 19-06-2022

 
 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தொடக்க நூல் 14:18-20  
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

 திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நாம் ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளில் கிறிஸ்து கூறிய வார்த்தைகளான "எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." என்பதை நினைவு கூர்ந்திடுவோம். உலகில் உள்ள கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் தகுந்த ஆயத்தமுடன் திருவிருந்தில் பங்குபெறும்போது நம்மில் கிறிஸ்து வாழ்கின்றார் என்ற உண்மையின் உச்சக்கட்டமே இந்த திருவிருந்து ஆகும்.

இது என் உடல், இது என் இரத்தம் என்று அப்பரச வடிவில் நான் உம்மில் கலந்து விடுகின்றேன். நான் உம்மிலும், நீர் என்னிலும் இணைந்து உடன்பயணிக்கும் எங்களின் இவ்வுலக வாழ்வை ஒளிரச் செய்யும் உன்னதமான விருந்தே இன்றைய விழாவின் மையப்பொருள். அதனை உணர்ந்து இன்றைய வழிபாட்டில் கலந்து கொள்ள இப்பெருவிழாவில் நம்மை அழைக்கின்றது. வாரீர் இறைகுலமே!

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கநூலின் பதிவாகிய  ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்தவர்களையும் வென்று வந்ததிற்கு நன்றி பலியாக உன்னத குருவும், இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசெதேக் அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்த நன்றிப்பலியைப் பற்றி வாசிக்க, அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி..
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி..
4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி..

இரண்டாம் வாசக முன்னுரை:

 நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். எனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் தான் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைக்கிறது. இக்கருத்துகளை ஏடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு  அன்புடன் செவிமெடுப்போம்.
 

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அன்புத் தந்தையே எம் இறைவா, உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உம் சீடர்களோடு இருந்தது போல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகையினை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவற்றிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உறவுகளின் ஊற்றான இறைவா! தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Sunday, June 5, 2022

மூவொரு இறைவன் பெருவிழா

 மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நமது தாய்திருச்சபை மூவொரு இறைவன் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. மூவொரு இறைவன் என்றால் தந்தை படைப்பாளராகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி எந்நாளும் நம்மை பராமரிப்பவராகவும் நாம் விவிலியத்தின் அடிப்படையில் இம்மறைபொருளை உணர்கிறோம். அதன்படி வாழ்கின்றோம். மூவொரு கடவுளும் மூன்று கடவுளா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் படைத்தவர் தந்தை. அகரமும் னகரமும் நானே என்றவர் மகன். நீரில் அசைவாடிக் கொண்டிருந்தவர் தூயஆவி.

மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. தந்தை படைப்பவராகவும், மகன் மீட்பவராகவும், தூய ஆவி அர்ச்சிப்பவராகவும், சாதாரண முறையில் நாம் புரிந்துக் கொண்டாலும் எந்த ஒரு பணியையும் எந்த ஓர் ஆளும் தனித்துச் செய்வதில்லை. மூன்று ஆட்களும் எல்லாவற்றிலும் இணைந்துச் செயல்படுகின்றனர்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாளமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

 
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை “நமது இறுதி நியத்தீர்ப்பின் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும், நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன், அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார்” என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றுரைத்த எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசே! எம் இறைவா! 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கேற்ப அடுத்திருப்பவருடன் அன்பும், சுயநலமில்லாத சேவை மனப்பான்மை மனம் கொண்டவர்களாகவும், உலகமெங்கும் உம் அன்பின் சாட்சிகள் வலம் வர உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லாம் வல்ல இறைவா! நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF