Wednesday, December 18, 2024

திருவருகையின் நான்காம் ஞாயிறு - 3ஆண்டு

 திருவருகையின் நான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

மீக்கா 5:1-4
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45

திருப்பலி முன்னுரை:

இன்று திருவருகையின் நான்காம் ஞாயிறு. இந்த ஞாயிறை அன்பின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம்.

இறைவனைத் தேடியவர்கள் மரியாவும், எலிசபெத்தும்... அவர்களுக்கு இறைவன் வெகுவாகத் தேவைப்பட்டார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த எலிசபெத்து, தன் சொந்த வாழ்வின் குறையைத் தீர்க்க இறைவனை இரவும் பகலும் தேடினார். இறைவனிடம் வேண்டினார். மரியா என்ற இளம்பெண்ணும் இறைவனைத் தேடினார். தன் சொந்தத் தேவைகளைக் காட்டிலும், சமுதாயத்தின் தேவைகளுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை, இவ்விரு பெண்களின் வாழ்க்கை மூலமாக நமக்குக் கூறுகிறதே இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த மொழிகள் மனிதர் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய, சொல்லவேண்டிய அழகான ஆசி மொழிகள்... "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை உள்ளார்ந்த அன்பில் வாழ்த்தினால், ஆசீர்வதித்தால் இந்தப் பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம்.

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி நமது முழு நம்பிக்கையை நாம் கடவுள்மீது வைப்போமானால், நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்து கடவுள் நம்மை வியப்பில் ஆழ்த்திடுவார் என்பது திண்ணம். அரும்பெரும் செயல்களை நமக்குச் செய்வதற்காகவே கடவுள் வருகிறார். இதனை உணர்ந்தவர்களாக இத்திருப்பலியில் இறையருள் வேண்டிடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா இஸ்ரயேல் மக்களைப் புதிய நம்பிக்கைக்கு அழைக்கின்றார். அரண்களின் நகரமாகவும் மக்களின் வழிபாட்டு மையமாகவும் இருந்த எருசலேமை இறைவன் ஒதுக்கிவிட்டு, ஒரங்கட்டப்பட்ட, சிறியதாய் இருந்த பெத்லகேம்மை தேர்ந்தெடுத்துள்ளார் மெசியா தோன்றுவதற்கு! இவ்வாறு மக்கள் அச்சமின்றி வாழ்வர் என்று அறிக்கையிடும் இவ்வாசகத்தைக் கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மரியா நம்பினார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை தான் தன்னில் இறைமகனைத் தாங்கிக் கொள்ள வைத்தது. மரியாவைப் போலவே இயேசுவும் இறைதந்தையின் திட்டத்திற்கு ஆகட்டும் என்று சொன்னதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நினைவு கூறுகிறார். இவ்வாசகத்தைக் கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

பதிலுரைப் பாடல்:

திபா 80: 1-2. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.


1. இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

2. படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி
3. உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கைக்காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
-பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. எல்லாம் வல்லைறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலக மீட்பரின் வருகையை எல்லோருக்கும் அறிவிக்கவும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை அதற்காக ஆயத்தப்படுத்தவும் தேவையான அருளைத் தரமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லக் கடவுளாகிய ஆண்டவரே! வியாதி, வறுமை, வருத்தம் ஆகியவகையால் வாடுவோர் அனைவரும் கிறிஸ்துவின் வருகையால் உடல் நலமும், மன நலமும் பெறவும், எளியோர் நற்செய்தி கேட்டிடவும், உள்ளம் உடைந்தோர் மன ஆறுதல் பெற்றிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுவோம்.

3. அனைவரையும் தேற்றுபவரை எம் இறைவா! எம் இளைஞர், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கிறிஸ்துமஸ் விழாவைத் தூய உள்ளத்துடன், கிறிஸ்துவ, மனமகிழ்ச்சியோடும் கொண்டாட அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மைத் தேடிவந்த தெய்வமே! என் இறைவா! உமது முதல் வருகையை நினைவுகூர்கின்ற நாங்கள் அனைவரும், உமது விண்ணக வருகைக்காக எம்மைத் தகுந்த விதமாகத் தயாரிக்க அருள்புரியும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பின் இறைவா! மரியாளைப் போல நாங்களும் அடுத்தவர் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு செய்திட நல்ல மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, December 4, 2024

திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு - 3 ஆம்ஆண்டு

  திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

செப்பனியா 3:14-17
பிலிப்பியர். 4:4 -7
லூக்கா 3:10-18

திருப்பலி முன்னுரை:

இன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு.  இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

பேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்தப் பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும்  நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டுமில்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்த தீயகாலம்  மறைந்துவிட்டது.“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும்  இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்துக் கவனமுடன் செவிமெடுப்போம். அவர் ஆசீரால் நம்மை நிரப்பி அருள்வாராக.

பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3, 4, 5-6
பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்  மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில்  குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “ஆண்டவரோடு இணைந்த என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் நன்றியோடு கூடிய  இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள்  விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். ஆண்டவர் அண்மையில் உள்ளார். கிறிஸ்தவர்கள்  கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி  நம்மை ஆட்கொள்ளும் என்பதனை பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க, பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் எங்கள் குடும்பங்களில் ஒற்றுமையும், அன்பின் மகிழ்ச்சியும் நிறைந்திட, விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல; இருப்பினும், விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் - திருத்தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் வாழ அமைய வேண்டி வரங்களை அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தைக் கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம் என்பதை உணரும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 3ஆண்டு

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

பாரூக் 5:1-9 ;
பிலிப்பியர் 1:4-6, 8-11 ;
லூக்கா 3:1-6

முன்னுரை:

இறைஇயேசுவின் பிரியமானவர்களே, இன்று திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இது அமைதியின் ஞாயிறு.
பாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.
வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில்/ நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடை பகர்கின்றன.
இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:
“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”
எனவே, இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், நாம் அவர் தரும் அமைதியை பெற்றிடவும் இத்திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்

அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள் புதிய வாழ்வுக்கு அழைக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கிறது. அவர்களிடம் எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் பலரின் முகங்கள் துயரக் கோலத்தில் இருந்தது. ஆனாலும் இறைவனின் இருப்பை அவரது அரசாட்சியை, அவரது விண்ணக மகிமையை எருசலேம் கண்டுணரும் என்று நம்பிக்கையைத் தரும் இறைவாக்கினர் பாருக்கின் வார்த்தைகள் அவர்களை ஊக்கமளித்தது. இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி
உன் ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி
ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க" அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுல். இயேசு வரும் நாளை எதிர்நோக்கி குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு இத்திருவருகைக் காலத்தை மனமாற்றத்திற்கு பயன்படுத்துவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:

1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப்போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன் போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம்  எங்களுக்கு நீர்  உரைத்தது போல் நாங்கள் நேரியப் பாதையில் செல்லவும், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும்  அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    

5. அனைவரையும் அரவணைக்கும் இறைவா! நற்கருணை வழியாக எங்கள் இளைய சழுதாயம் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் அருள்வரங்களையும், திறமைகளையும் பெற்று, திருஅவையின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

www.anbinmadal.org


Print Friendly and PDF

Friday, November 29, 2024

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

 திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

       

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 33:14-16
தெசலோ. 3:12 - 4:2
லூக்கா 21:25-28. 34-36

திருப்பலி முன்னுரை:

இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு. இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தைத் திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். இது நம்பிக்கையின் ஞாயிறு. அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியாப் பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்கக் காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காகக் காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

எனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்துக் கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்குப் புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 25: 4-5. 8-9. 10,14
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;  உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.  உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி
2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;  அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!” என்று நம்மை வாழ்த்துகின்றார். நம்பிக்கையோடும், விழிப்போடும் இருந்து அவர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:

1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நீதியின் ஒளியே எம் இறைவா! இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராகப் பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, ஏற்றத்தாழ்வுகள் நீக்கி ஒற்றுமையுடன் வாழத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனௌளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்துத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா! இளையோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்றுக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
www.anbinmadal.org


Print Friendly and PDF

Friday, November 22, 2024

கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37

திருப்பலி முன்னுரை:

கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே!
இன்று திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துஅரசரின் பெயரால் நல் வாழ்த்துக்கள்!
உலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
பிலாத்துக் கிறிஸ்துவிடம் 'நீ யூதர்களின் அரசரா?' என்று கேட்டப்போது அவர் 'என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்று கூறினார். அவர் உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்துச் செல்லவே வந்தார்.
அவர் நம் அரசர். ஆம்! ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர்! பணிவின் அரசர்! தாழ்ச்சியின் அரசர்! எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவிப் பிறர்க்குப் பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார். அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்துப் போகாது.
மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்கமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம். இந்த வழிபாட்டு ஆண்டில் நாம் பெற்ற ஆசீர்களுக்காக நன்றி கூறுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்டக் காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது? யாருக்குரியது? அஃது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார். இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 93: 1. 1-2. 5

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி
உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில் இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின் தலைமை என்பது அன்பின் வழி விடுதலைப் பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர் தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்கிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! உம் நற்செய்தியை வாழ்வாக்கிய எம்புனிதை தெரேசாவைப் போன்று நாங்களும் ஏழைகளை வெறும் வேடிக்கைப் பொருளாகப் பார்த்திடாமல் அவர்களும் எம்சக உடன்பிறப்புக்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நல் மனம் வேண்டுமென்று கிறிஸ்து அரசா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலாயனே எம் இறைவா! எம்சிறுவர்கள், இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும் அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, November 12, 2024

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் வாரம் - ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின்  33ஆம் வாரம் - ஞாயிறு

திருப்பலி முன்னுரை

“எல்லாவற்றிற்கும்‌ முடிவு நெருங்கிவிட்டது. எனவே இறைவனிடம்‌ வேண்டுதல்‌ செய்யுமாறு கட்டுப்பாட்டோடும்‌ அறிவுத்‌ தெளிவோடும்‌ இருங்கள்‌” (1 பேது 4:7). விண்ணும்‌ மண்ணும்‌ ஒழிந்து போகும்‌ என்‌ வார்த்தைகள்‌ ஒழியவே மாட்டா என்ற இறை இயேசுவின்‌ வார்த்தைகளைக்‌ கேட்க அழைக்கப்பட்டிருக்கும்‌ அன்பு இறைமக்களே !

இன்று நாம்‌ வாழும்‌ வாழ்க்கை என்பது ஒரு பயணம்தான்‌. யாரும்‌ இவ்வுலகில்‌ நிரந்தரமாகத்‌ தங்கிவிட முடியாது. வழிப்போக்கர்‌ போல சில காலம்‌ தங்கி, பின்‌ விண்ணக வாழ்வை நோக்கிப்‌ பயணிப்பதுதான்‌ நம்‌ வாழ்வின்‌ நோக்கம்‌. விண்ணக வாழ்விற்கான ஒரு முன்னோட்டம்தான்‌ இவ்வுலக வாழ்க்கை. இன்றைய வாசகங்களும்‌ நமக்கு இறுதி நாளில்‌ நிகழவிருக்கும்‌ அடையாளங்கள்‌ பற்றி எடுத்துக்‌ கூறுகின்றன. முதல்‌ வாசகத்தில்‌, நாம்‌ இவ்வுலகில்‌ வாழும்‌ வாழ்க்கைக்கேற்பவே நமது விண்ணக வாழ்வும்‌ அமையும்‌ என்று இறைவாக்கினர்‌ தானியேல்‌ எடுத்துக்‌ கூறுகிறார்‌. ஒரு வேளை நாம்‌ பாவம்‌ செய்தாலும்‌ நம்‌ பாவங்களுக்கான கழுவாய்‌ நம்‌ இயேசுவின்‌ கல்வாரி பலியே என்பதை இரண்டாம்‌ வாசகத்தில்‌ சுட்டிக்காட்டப்படுகிறது.

இதுவரை தம்‌ துன்பங்களோடு மட்டுமே இணைக்கப்பட்டிருந்த “மானிட மகன்‌” என்ற பெயர்‌. இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌ வெற்றியுடனும்‌, மாட்சியுடனும்‌ இணைக்கப்பட்டிருக்கிறது. “மானிட மகன்‌” தம்‌ வல்லமையை வெளிப்படுத்தும்‌ இந்நிகழ்வு இயேசுவின்‌ இறுதி உரையாகப்‌ பார்க்கப்படுகிறது. இத்தகைய சவாலான நாள்களில்‌ நம்‌ உள்ளம்‌ சோர்ந்து போகாமல்‌ இருக்க, இறுதி நாள்களை எதிர்கொள்ள நாம்‌ தயாராக இருக்க வேண்டும்‌. இயேசுவின்‌ மதிப்பீடுகளான அன்பு, அமைதி, உண்மை, சகோதரத்துவம்‌ நீதி போன்றவற்றைக்‌ கடைபிடித்து வாழ்பவர்களுக்கு இறுதி காலம்‌ பற்றிய பயம்‌ இருக்காது. இயேசு காட்டும்‌ வழியில்‌ வாழும்‌ காலத்தைப்‌ பொறுப்புடன்‌ பயன்படுத்தும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ வேண்டுவோம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

நிறைய ஆச்சர்யங்களாலும்‌, வியப்பூட்டும்‌ நிகழ்வுகளாலும்‌, குறியீடுகளாலும்‌ நிறைந்திருக்கும்‌ தானியேல்‌ நூலில்‌ இருந்து இன்றைய முதல்‌ வாசகம்‌ எடுக்கப்பட்டிருக்கிறது. நாம்‌ வாழும்‌ காலமே நம்‌ இறுதி நாளைத்‌ தீர்மானிக்கும்‌ என்ற தானியேலின்‌ வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
1.ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

2.என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி

3.வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம்‌ வாசகமானது எபிரரயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. கடவுளின்‌ வலப்பக்கம்‌ அமர்ந்துள்ள இயேசுவின்‌ மாட்சி குறித்தும்‌ அவரே நம்‌ பாவங்களைப்‌ போக்கும்‌  வழி என்பதையும்‌ எடுத்துக்‌ கூறுகிறது. இவ்வார்த்தைகளுக்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌  

1. அனைத்தையும்‌ படைத்தாளும்‌ இறைவா ! எம்‌ திரு அவைக்காக நீர்‌ தந்த எங்கள்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, அருள்பணியாளர்கள்‌, துறவிகள்‌, பொதுநிலையினர்‌ அனைவரும்‌ நீர்‌ விரும்புவதை நிறைவேற்றுவதே தங்கள்‌ பணி என்பதை உணர்ந்து எவ்விதச்‌ சூழ்நிலையிலும்‌ மன உறுதியோடு பணியாற்ற அவர்களுக்குத்‌ தேவையான ஞானத்தை அளித்துக்‌ காத்திட வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்புத்‌ தந்தையே எம்‌ இறைவா ! ஒரே திருமுழுக்கினால்‌ உமக்குச்‌ சொந்தமான நாங்கள்‌, முழுமையான நம்பிக்கையால்‌ இணைக்கப்‌ பெற்று ஒரே குடும்பமாக, உமது அழைப்பிற்கேற்ப வாழவும்‌, உண்மைக்குச்‌ சான்று பகர்ந்து வாழவும்‌ உமது ஆவியின்‌ அருளைப்‌ பொழிய வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

3. விண்ணும்‌ மண்ணும்‌ ஒழிந்து போகும்‌, என்‌ வார்த்தைகளோ ஒரு போதும்‌ ஒழியாது என்று மொழிந்த எம்‌ இறைவா ! உம்‌ வார்த்தைதான்‌ எங்கள்‌ வாழ்விற்கு விளக்கு என்பதை உணர்ந்தவர்களாய்‌, இயேசுவின்‌ மதிப்பீடுகளைப்‌ பின்பற்றி விண்ணுலக வாழ்விற்கு எங்களைத்‌ தயார்‌ படுத்த உம்‌ அருளைப்‌ பொழிய வேண்டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

4. உண்மையின்‌ இறைவா ! எங்கள்‌ தொழில்‌ முயற்சிகளுக்கு ஆசியளித்தருளும்‌. எங்கள்‌ உழைப்பிற்கேற்ற நல்ல பலமசை யும்‌ எங்களுக்குத்‌ தேவையான வளங்களையும்‌ தந்து ஆசியளிக்க வேண்‌டும்‌ என்று உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, November 6, 2024

பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

1அரசர்கள் 17:10-16;
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார். நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளத்திலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள்.
இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கடவுள் சாரிபாத்திலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசிப் பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக உயர்த்தினார்.
இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அன்பால் உள்ளத்திலிருந்து, உள்ளதையெல்லாம் கொடுத்தால் இரு ஏழைக் கைம்பெண்களும், அன்னை மரியாளும் இறைவனால் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்பட வேண்டும். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கையுடன் நாம்  வாழ இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை

பழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதிக்கப்பட்டைஸ்ரயேல் மக்கள் சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள்  கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார்.  தன்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் கடவுளின் வார்த்தைகளை நம்பினாள். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சாரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது. இறைவார்த்தை நம்மில் நிறைவேற இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

அன்று மோசே இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; . இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறைத் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார் என்று எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு அவரின் வருகைக்காகக் காத்திருப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.எம் அன்புத் தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலை திருஅவையில் மலரவும் உம் ஆவியாரின் கொடைகளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி, கடின உழைப்பின் மூலம் எங்கள் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து உமக்குரியவர்களாகத் தேர்ந்துக் கொள்ளப்படவும், உம் பணியாளராக வாழவும் வேண்டிய வரங்களைத் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வர வேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி,  உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயில் உள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding