Tuesday, January 25, 2022

பொதுக்காலம் ஆண்டின் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் நான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா: 1:4-5,17-191
1கொரி 12:31-13:13
லூக்கா 4:21-30

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் நான்காம் ஞாயிறுத்  திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.. அன்பே கடவுள்! இன்றைய வழிபாட்டின் மையக்கருத்து அன்பு. நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு துன்பங்கள்  நிறைந்தது என்றும், ஓரு உண்மையான இறைவாக்கினருக்கு அளவற்ற பிறரன்பு  தேவைப்படுகின்றது என்பதையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. பவுலடியார் அன்பின் பரிமணங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்புத் தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்று விளக்குகிறார்.


எரேமியா இறைவாக்கினரும், இறைமகன் இயேசுவும் இக்கட்டான நேரங்களில் இறைவனின் துணையை இறுதிவரைக் தங்கள் வாழ்வில் உணர்ந்தக் காரணத்தால்தான் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு துணிச்சலோடு தங்கள் பணி வாழ்வில் முன்னேற முடிந்தது. அன்பே உருவான இறைவன் அன்புச் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இந்த அவனிக்கு வந்தார். அவர் இந்த அன்பே எடுத்துரைக்கும் பணியாளராக அன்று போல் இன்றும் திருமுழுக்கு மற்றும் மற்றத் திருவருட்சாதனங்கள் வழியாக நம்மையும் அழைக்கிறார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம்? சிந்தித்து நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல்  வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் வழியாகக் கடவுள் நம்மை எப்பொழுது அறிந்திருந்தார்? எப்பொழுது நம்மைத் திருநிலைப்படுத்தினார்? அவர் நமக்குக் கொடுத்த பணிகள் என்ன? என்று எடுத்துக் கூறி, நம் அனைவருக்கும் விடுக்கும் செய்தி என்னவெனில் இறைவனின் தூதனாய் இறையரசை அறிவிப்பதுதான். இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் அழைப்பையும், அவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் அன்பின் பரிமாணங்களைப் பற்றிக் கூறும் போது அன்புத் தான் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது. அனைத்தும் அன்பின் அடிப்படையில் அமையாமல், போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றின் அடிப்படையில் அமைந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சித்தரித்துள்ள இந்த அன்பின் கவிதையைக் கேட்டு மனதின் ஆழத்தில் பதிவு செய்து மகிழ்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4. 5-6. 15,17

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி

 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.  என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.  பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும்  எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும்  நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.திருப்பொழிவுச் செய்யப்பட்டவர்களை, அனைத்துத் தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பவரே எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரையும் உமது இறைதூதுப்பணியாளராக நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற வேண்டிய நல்ல வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றவரே எம் தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம் நாட்டுத் தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பே உருவான இயேசுவே, இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

                                                                      Print Friendly and PDF

Monday, January 17, 2022

பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின்  மூன்றாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


நெகேமியா 8:2-6,8-10 1
கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21

திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இயேசுவின் முதல் அறிக்கை! அவரின் பொதுவாழ்வில் தனது பணி என்ன? அஃது எப்படிப்பட்டதாக இருக்கும்? தான் யாருக்காகத் தரணிக்கு வந்தார்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு வழியாக வெளிப்படுத்துகிறார். அவர் திருமுழுக்குப் பெற்றுத் தூயஆவியாரின் வல்லமையால் அதிகாரத்தெனியுடன் இறையரசை அறிவிக்கும் பணியின் தொடக்க நிகழ்வுகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.


இன்றைய முதல் வாசகம் கூறும் இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப் போகிறது. அந்த 'ஆண்டவரின் மகிழ்வு' இன்று நம்மிடையே இருக்கின்றதா? திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூயஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார் வார்த்தைகளையும் நம் மனத்தில் பதிவுச்செய்து சிந்தித்து நம் வாழ்வில் மாற்றங்களைக் காண இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் முழு உள்ளத்தோடு கலந்து கொண்டு மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

 முதல்  வாசகமுன்னுரை:

 
இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிலிருந்து அடிமையாக இருந்த இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பெற்று தங்கள் நாட்டிற்கு வருகிறார்கள். நெகேமியா மற்றும் எஸ்ரா தலைமையில் இறைவார்த்தைகளை முதல்முறையாகக் கேட்டார்கள்.  ஆண்டவர் நம் காதுகளில் விழும் வார்த்தையாக மாறிவிட்டார் என்று ஆண்டவர் உடனிருப்பை உணர்ந்ததால் அழுகின்றனர்! ஆண்டவரின் மகிழ்வு அவர்களிடையே இருந்ததை அவர்கள் உணர்ந்தது போல நாமும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது தூய ஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார், உடலும், உறுப்புகளும் என்ற உருவகத்தை முன்வைத்து, திருஅவையில் துலங்க வேண்டிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கொரிந்து நகர மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். நாம் கிறிஸ்துவின் உடல். அதாவது, நாம் அனைவரும் இணைந்து வந்தாலே அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடுகிறது. உறுப்புகளின் ஒருங்கிணைப்பே உடல் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14

பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே! திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும்  கடவுளால் அன்பு செய்யப்படுபவர்களாகவும், நாங்கள் அனைவரும் ஓன்றிணைந்து வாழ்ந்தலே, அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடும் என்பதை உணர்ந்தவர்களாக வாழ வரங்கள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்மைக் கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் இயேசுவின் மறைஉடலில் இணைந்திருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலும், செபத்திலும் தாங்கிக் கொள்ளவும், துன்பங்களில் ஆறுதலாக இருக்கவும், மகிழ்ச்சிப் பெருமையோடு பகிர்ந்துக் கொள்ளவும், குடும்பங்களில் உமதருள் நிறைந்திருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் வருங்காலம் வளமானதாயிருக்கும், உன் நம்பிக்கை வீண் போகாது என்று உறுதி அளித்த எம் இறைவா! எம் நாட்டுதலைவர்களின் சகிப்புத்தன்மை மேன்மேலும் வளர்ந்திடவும், மக்களின் நலத்திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களையும் குறிப்பாக வாழ்வாதரங்கள் இழந்துத் தவிக்கும் ஏழைஎளிய மக்களுக்குச் சென்று அடையவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உமது பணித்திட்ட அறிக்கை, உமது இலக்கின்  தெளிவாகக் காட்டகிறது. இறைக்குலமாகிய நாங்களும் உம்மைப் போல, பணி இலக்குகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த அருள்தாரும். இன்று நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை, நாம் வைத்திருக்கும் இறைவார்த்தையில் இருக்கின்றது. அந்த இறைவார்த்தையை வாசிக்கவும், கேட்கவும் நாங்களும் முயற்சி செய்ய இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நலமளிக்கும் இறைவா! புதிய தொற்று நோயின் தாக்கத்திலிருந்து  உம் மக்களை காப்பாற்றும். குழப்பமான இந்நேரத்தில் மருத்துவருகளுக்கு எமத ஞானத்தை கொடுத்து அவர்கள் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்து காத்திட வேண்டுமென்ற இறைவா அருள் லரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

Monday, January 10, 2022

பொதுக் காலம் ஆண்டின் 2ஆம் ஞாயிறு

  பொதுக் காலம் ஆண்டின் 2ஆம் ஞாயிறு



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



எசாயா 62:1-5
1கொரிந்தியர் 12:4-11
யோவான் 2:1-12

 திருப்பலி முன்னுரை


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் முதல் புதுமை! அவரின் பொதுவாழ்வில் அன்னை மரியாளின் கரிசனை அன்பால் ஓர் இனிய சுவையாகப் புதுமையுடன் வெளிப்படுகின்றார். அடுத்தவரின் துயரம் அறிந்த அன்னையாக "அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்று அழைக்கின்றார். ஆம் அன்னையின் அழைப்போடு இயேசுவும் தன் பொதுவாழ்வைத் தொடங்குவதாக இந்த நிகழ்வு அமைகின்றது. அதைப்போல் மரியாள்  பேசிய கடைசி வார்த்தைகளும் இதுவே

வெறும் தண்ணீரை, குணம் மணம் இல்லாத் தண்ணீரை இரசமாக மாற்றி மகிழ்ச்சி நிறைந்தோட செய்கிறார். இயேசுவின் வருகைச் சோகத்தை இன்பமாக மாற்றுகிறது. நம் உப்புச் சப்பற்ற வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தால் மட்டும் போதும் அதை இரசனையுள்ள வாழ்வாக, மகிழ்ச்சி நிறைந்த, குறிக்கோள் நிறைந்த வாழ்வாக மாற்றுவார். இயேசு வந்தால் நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நிறைவாகக் கலந்து கொண்டு மன்றாடுவோம். மாற்றத்தைக் காண்போம். வாரீர்.
 

 வாசகமுன்னுரை :


 முதல் வாசகமுன்னுரை

சீயோன் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அதன் மீட்பும், வெற்றியும் மீட்பின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும் வரை கடவுளின் மௌனம் வெளிப்படுகின்றது. அந்த மீட்பினால் வரும் மகிழ்ச்சியைப் பிற இனத்தார் மன்னர் அனைவரும் காண்பது பற்றியும், கடவுளின் திருக்கரத்தில் மணிமகுடமாய் விளங்குவது பற்றி ஒரு நாளும் கைவிடப்பட்ட நிலையால் இருக்கப்போவதில்லை என நலம் நல்கும் நம்பிக்கையின் வாக்குறுதியைத் தரும் முதல் வாசகமான எசாயாவின் இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
 

இரண்டாம் வாசகமுன்னுரை

இறைவன் தூயஆவியின் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். அவைகள் வலுக்குறைந்த நமக்கு வலிமையூட்டுகின்றன. நம்பிக்கைத் தருகின்றன. பல்வேறு அருள்கொடைகளைத் தூய ஆவி வழங்குவது திருஅவையின் பொது நலனுக்காகவே, அதன் வளர்ச்சிக்காகவே. எனவே இவ்வரங்களைப் பெற்ற எவரும் இறுமாப்புக் கொள்ளவோ, தம்மைத்தாமே உயர்ந்தவராகக் கருதவோ கூடாது என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வெளிப்படுத்தப்பட்டும் கருத்துகளைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

 பதிலுரைப் பாடல்
திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10

 பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப்  போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;  மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.  ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே  கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திகக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலுயா அல்லேலுயா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலுயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.அருளும் இரக்கமும் கொண்ட இறைவனே! திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் விழுமிங்களையும், வார்த்தைகளையும் அவரவர் வாழ்க்கையில் கடைபிடித்து இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிக்கும் பணியில் இணைந்து பயணம் செய்யவும், மாமன்ற செயல்பாடுகள் எந்தவிதத் தயக்கமின்றித் தொடர்ந்து செயல்படவும் வேண்டியவரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2.எங்களை உமது உரிமை சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்றுத் திகைத்து நிற்பவர் தெளிவுப் பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் இறைவனே, எம் நாட்டுத் தலைவர்களை நல்வழிப்படுத்தி, மக்களின் நலன்களைப் பேணவும், நாட்டின் இயற்கைச் செல்வங்கள் பாதுகாத்திடவும், தீவிரவாதம் ஒழிந்துச் சகிப்புத்தன்மை நிறைந்திடவும், மக்கள் அனைவரும் ஓரே சமூகமாகச் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. முன்னும் பின்னும் எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாகப் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று

5. அன்பின் இறைவா, கொடைகள், தொண்டுகள், செயல்பாடுகள் பலவாயினும் இவையாவும் உமது மாட்சிமையை வெளிப்படுத்தவே செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அதற்கேற்ப எங்கள் பணிகளையும், கடமைகளையும் செய்யும் வரத்தையும் மனதையும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, January 5, 2022

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

  ஆண்டவரின் திருமுழுக்கு விழா




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்கு விழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.

திருமுழுக்கு பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்து திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


இரண்டாம்  வாசகமுன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்ற இறைஇயேசுவின் இரக்கத்தைப் பதிவுச் செய்யும் திருத்தூதரின் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 பதிலுரைப் பாடல்:


திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். -பல்லவி
2. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!    காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். -பல்லவி
3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. -பல்லவி
4. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. -பல்லவி
5. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.  உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;  மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.கருணையே வடிவான எம் இறைவா! கிறிஸ்துவத்திற்கு
எதிராய் உலகெங்கும்  செயல்படும் மக்களைக் கண்ணோக்கும். அவர்கள் மனமாறி தங்கள் வன்முறையிலிருந்து விடுபட்டு, தனிமனித உரிமைகளை மதிக்க, அவர்களுக்கு நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
 

 
 WWW.ANBINMADAL.ORG

                                                                      Print Friendly and PDF

Thursday, December 30, 2021

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

 ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

 

 இன்றைய வாசகங்கள் 

எசாயா 60: 1-6
எபேசியர் 3: 2-3அ, 5-6
மத்தேயு 2: 1-12  

 திருப்பலி முன்னுரை


ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
மத்தேயு நற்செய்தியில் மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 21 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.

உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.

தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு வந்த மூவரைப்போல் இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்..

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை

மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன் மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!   பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.   பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.   பல்லவி 

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்த்துகிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா!  ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 
1. உம் மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எங்கள் வாழ்வின் இன்பமே இறைவா! பணம், சொத்து, சுகம் அல்ல.  நீரே எங்கள் உண்மையான இன்பம் என்பதை அறிந்து நீர் மட்டும் போதும் என்ற மனநிறைவுடன் வாழக்கற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org

Print Friendly and PDF 

புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி

  புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்


1. எண்ணிக்கை 6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

 திருப்பலி முன்னுரை  


அன்பு இறைமக்களே!

புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.

பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாள் என மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.

ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…

இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இறையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!

ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நலமும், வளமும், நிறை அமைதியைப் பெற்றுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!

 வாசக முன்னுரை

 முதல் வாசகம்

 புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில், அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1-2, 4, 5,7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

 இரண்டாம் வாசகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம் தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட் தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளும் இன்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

4. உம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துத் தொற்றுநோயிலிருந்து விடுதலை தந்து இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

Wednesday, December 22, 2021

திருக்குடும்பப் பெருவிழா

திருக்குடும்பப் பெருவிழா

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52

திருப்பலி முன்னுரை:

குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பது அல்ல. மாறாகப் பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பது தான் குடும்பம். இதற்கு அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரியப் பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட தன்  மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார்.  தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளுடன் இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்:


திபா 128: 1-2,3,4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன்  செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், தொற்று நோயினாலும், மழையினாலும் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! பெற்றோர்கள் தங்களது வாழ்க்கை முறையால் தங்களது குழந்தைகளுக்கு உன்னதமான ஆசிரியர்களாகத் திகழ்ந்திடவும், குழந்தைகள் பெற்றோர்க்கு உரிய மதிப்பையும் அன்பையும் வழங்கி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் வரமருளு வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF