பொதுக்காலம் ஆண்டின் 22 ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா 14: 1,7-14
திருப்பலி முன்னுரை:
பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
தாழ்ச்சியே தலையாய புண்ணியங்களுள் முதலாவது. இறை அருளைப் பெற்றுக் கொள்ள மிக முக்கியமான, முதன்மையான பண்பான தாழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கின்றது.
தாழ்ச்சி என்பது தன்னையே இழிவாக நினைப்பதைக் குறிப்பது அன்று; மாறாக இறைவனுடைய திருவுளத்திற்குக் கீழ்படிவதற்கு வேண்டிய பணிவைக் குறிப்பிடுகிறது. நான் ஆண்டவரின் அடிமை என்று தன்னையே தாழ்த்திக் கொண்ட அன்னை மரியா பெண்களுக்குள் பேறுபெற்றவராகவும் எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறுபெற்றவர் என அழைக்கவும் இறைவன் திருவுளம் கொண்டார்.
இறைமகன் இயேசுவும் தம்மையே தாழ்த்தி அடிமைநிலையை ஏற்று நம் பாவங்களுக்காக இறந்ததால், இறைவன் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியுள்ளார். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்ற வாழ்தொலி நம் ஒவ்வொருவரையும் இயேசுவிடமிருந்து கனிவையும் தாழ்ச்சியையும் கற்று வாழ அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சி என்ற அருளைப் பெற இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் ”குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர்.” என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள்போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்: 68: 3-10
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி
கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்…
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை” என இரண்டாம் வாசகத்தில் விவரிக்கப்படும் நிலை உருவாகும்வரை, பயணிக்கும் திரு அவையாகிய எம்மை வழிநடத்தி வருகிற திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய இறையியல் பண்புகளோடு வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது” என்கிற ஞான நூலின் வார்த்தைகள் உண்மையாகிவருகிற இக்காலக்கட்டத்தில், அகந்தை மற்றும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை விட்டொழித்து, பணிவும், சாந்தமும், அமைதியை நாடுகிற நல்லுள்ளமும் கொண்டவர்களாய், இவ்வுலகின் தலைவர்களையும், எம்நாட்டின் தலைவர்களையும் மாற்றிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. முதன்மையான இடங்களைப் பெறுவதற்கும், பெருமை பாராட்டுவதற்கும் எதையும் செய்யத் துணிகிற இக்காலத்தில், போட்டி மனப்பான்மையுடன், பிறரை அழித்தேனும் முன்னேறத் துடிக்கும் கயமையைத் துறந்து, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய விழுமியங்களின்படி வாழ்ந்து, நேரிய வழியில் உயர்வை எய்துகிற நல்ல மனதினை, எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்ற உம் அருள்வாக்கை மனதில் நிறுத்தி, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும், பிறருக்கு முன்னுரிமை அளித்து, புரிதலும் பகிர்தலும் மிகுந்த அன்புறவை வளர்த்திட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், எமக்குக் கைம்மாறு செய்ய இயலாதவர்களையும் நாங்கள் பரிவுடன் கண்ணோக்கி, பணிவிடை செய்தால், இவ்வுலகில் பேறுபெற்றவர் ஆவதோடு, நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது கைம்மாறும் பெறுவோம் என்பதை புரிந்துகொண்டு, தன்னலமற்ற அறச்செயல்களில் ஈடுபடுகிற அருளினை, இங்கே கூடியுள்ள எங்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.