Sunday, November 29, 2026

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு B)6-12-2026

 திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு B)6-12-2026

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய வழிபாட்டின் மையப்பொருள் "ஆயத்தம் செய்தல்" என்பதாகும். நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருடைய பாதைகளைச் சீராக்குங்கள்" என்று பாலைவனத்தில் குரல் எழுப்புகிறார். இந்தத் தயாரிப்பு என்பது சாலைகளைச் சீரமைப்பது அல்ல, மாறாக நமது இதயத்தைச் சீரமைப்பதாகும்.
முதல் வாசகத்தில், இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்; ஒரு நல்ல ஆயனைப் போலத் தம் ஆடுகளைத் தூக்கிச் சுமக்கிறார். இரண்டாம் வாசகத்தில், ஆண்டவருடைய வருகை தாமதிப்பதற்குக் காரணம், நாம் அனைவரும் மனம் மாறி மீட்படைய வேண்டும் என்ற அவருடைய பொறுமையே என்று புனித பேதுரு விளக்குகிறார். நமது வாழ்வில் இருக்கும் கர்வமாகிய மலைகளைத் தாழ்த்தவும், சோம்பலாகிய பள்ளங்களை நிரப்பவும் நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் மன்னிப்பைப் பெற்று, தூய ஆவியால் திருமுழுக்கு அளிக்கும் கிறிஸ்துவை வரவேற்கத் தயாராக இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை 

பாலைவனத்தில் ஆண்டவருக்காக வழி ஆயத்தப்படுத்துங்கள் என்ற இறைவாக்கோடு ஏசாயா இன்றைய வாசகத்தைத் தொடங்குகிறார். ஆண்டவர் தம் மக்களைத் தேற்றி, அவர்களை ஆடு மேய்ப்பவரைப் போலக் கனிவுடன் வழிநடத்தி வருகிறார். இறைவனின் மாட்சி வெளிப்படப் போகிறது என்ற நம்பிக்கையைத் தரும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: திபா. 85: 8ab-9. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.

1. ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
2. பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
3. நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவருடைய நாள் ஒரு திருடனைப் போல வரும். அந்த நாளில் உலகம் அழிந்து, புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் தோன்றும். எனவே, நாம் குற்றமற்றவர்களாகவும், அமைதி உள்ளவர்களாகவும் ஆண்டவரைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களும், அருட்பணியாளர்கள் துறவியர் அனைவரும், இறைமக்களாகிய நாங்களும், ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குவதில் கருத்தாய் இருந்து, எம்மையே கிறிஸ்துவின் பிறப்பு விழாவிற்கு மட்டுமல்லாமல், அவரது இரண்டாம் வருகைக்கும் தகுதியாக்கிக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் மெழுகுதிரியை ஏற்றித் திருவருகைக் கால இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்ற நாங்கள், உலக அமைதிக்காகவும், எங்கள் நாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மன்றாடுகிறோம். எமையாளும் தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், சீராக்கவேண்டியவற்றை சீராக்கி, செம்மையான பாதையில் நடந்திட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளாகவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகவும் திகழ்கின்ற இன்று சமூக மற்றும் சமய நல்லிணக்கத்திற்காக மன்றாடுகிறோம், நலிவுற்ற பிரிவினர் உயர்வு பெறவும், சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படாமல் இருக்கவும், குறிப்பாகத் தலித் கிறிஸ்தவர்களின் நலன்கள் காக்கப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்” என்கிற முதல் வாசகக் கூற்று, தலைமை பொறுப்புகளில் உள்ள அனைவர் மனதிலும் தங்க வேண்டுமென்றும், குடும்பங்களில், அன்பியங்களில், பங்குகளில், பணிபுரியும் அலுவலகங்களில், மற்றும் பரந்துபட்ட சமுகத்தில், பிறரை வழிநடத்துகிற அனைவரும், திருமுழுக்கு யோவானிடமிருந்த தாழ்ச்சி நிறை மனதுடன், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை பரிவுடன் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “ஆண்டவருடைய நாள் திருடனைப் போல வரும்” என்பதை உணர்ந்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் வாழ்வில், கோணலானவற்றை    நேராக்கவும், கரடு முரடானவை சமதளமாக்கவும். ஆண்டவரை சந்திக்கிற நாள் வருகிறபோது, அவர் எங்களை மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்து வாழ வரமருள.வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment