Wednesday, September 16, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 20-09-2015



ஆண்டின் 25ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.





முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் பிறப்பால் நல்லவர்கள்தாம். ஆனால், காலப்போக்கில் நம் செயல்களால் இந்த கடவுளின் பிள்ளை என்ற நிலையில் இருந்து, கடவுளை அறிந்து கொள்ளும் நிலையிலிருந்து, கடவுளிடமிருந்து உதவிபெறும் நிலையிலிருந்து நாம் தள்ளிச்செல்லும் அபாயம் ஒட்டிக்கொண்டே இருக்கின்றது. ஆக, நல்லவராக அல்லது நீதிமானாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இன்று அல்லது இப்போது என நிகழும் ஒருபொழுது நிகழ்வு அன்று. இந்த நிலையைத் தக்க வைக்க நமக்கு நிறைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், சோர்வற்ற நிலையும் தேவை.



என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மை தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் உங்களிலும் இருக்கிறது! என்னிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன்  இத்திருப்பலி கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..





வாசகமுன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் போரட்டம் இயேசுவின் வாழ்வில் மட்டுமல்ல, நம் வாழ்விலும் நடக்கலாம். நாமும் மற்றவர்களின் கைகளில் ஒப்புவிக்கப்படலாம். நாமும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். நாமும் நிராகரிக்கப்படலாம். நம்மையும் மானிடர்கள் வெறுத்து ஒதுக்கலாம். இந்த நேரங்களில் நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?   கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்  இருப்பதே மேன்மை. இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்! இவற்றையே எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.



இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு  தங்கள் கொள்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பவர்கள் மட்டுமே நாட்டங்களைத் தள்ளிப்போட முடியும். மற்றவர்கள் வெறும் காற்றில் அடித்துச் செல்லப்படும் காகிதம் போலத்தான். பறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், எங்கே போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், நாட்டங்களைத் தள்ளிப்போடுபவர்கள் கற்பாறை போன்றவர்கள். அவர்கள் என்றும் உறுதியாக நிலைத்து நிற்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் அமைதியும், பாதுகாப்பும் இருக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கிறார்.  இவ்வாசகத்தின்  கவனமுடன் செவிமெடுப்போம்.





 

பதிலுரைப் பாடல்

திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;
உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி

                                     

மன்றாட்டுகள்


திருச்சபைக்காக:


ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடை பெறுவதைவிட பணி புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


நம் குடும்பங்களுக்கா:


அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா!

நேர்மையானவாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும் அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..



நாட்டு தலைவர்களுக்காக:


முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா!

பேராசையும் பொறாமையுமே சண்டை சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..



இளையோருக்காக :


வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே!

மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Thursday, September 10, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 13/09/2015

ஆண்டின் 24ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


1.    எசாயா 50:5-9
2.    யாக்கோபு 2:14-18
3.    மாற்கு 8:27-35


முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். துன்பம் வழி மெசியாநிலை! இன்றைய நற்செய்தி மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருந்தாலும், மூன்றும் சொல்வது ஒன்றுதான். மெசியாவின் பாடுகள் பட்டு மானுடம் மீட்பு பெறும் என்றும் அவரின் பாடுகள் எத்துணை கடினமானது என்றும், ஆண்டவரின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையைப் பற்றியும் இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கின்றார். செயலில் வெளிப்படாத நம்பிக்கை செத்ததே என யாக்கோபு தெளிவாகச் சொல்கின்றார்.

]
'சேர்ந்தே இருப்பது?' என்ற திருவிளையாடல் கேள்விக்கு, இயேசுவின் பதில், 'சிலுவையும், மெசியாவும்' என்றுதான் இருக்கும். இயேசு தன் மெசியா நிலை மட்டுமல்ல, தன்னைப் பின்பற்றும் எவரும் துன்பத்தின் வழியாக சீடத்துவத்தை அடைய முடியும் என மக்கள்கூட்டத்திற்கு அறிவுறுத்துகின்றார். ஆக, இழப்பவர் மட்டும்தான் பெற முடியும். இதுதான் இயேசுவின் சீடத்துவ லாஜிக். இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை? இவைகளை உணர்ந்து செயல்படும் நம்பிக்கையை, வாழ்வில் வாழ்ந்துக் காட்டிட வேண்டிய வரங்களைப் பெற இத்திருப்பலி கொண்டாடத்தில் திறந்த மனதுடன் பங்கேற்போம்..



வாசகமுன்னுரை:


முதல் வாசகத்தில் இந்த மெசியாவின் துன்பத்தைத் தான் துன்புறம் ஊழியன் என்ற உருவகம் வழியாக எசாயா முன்னுரைக்கின்றார். இந்த துன்புறும் ஊழியன் இயேசுவின் முன்னோட்டம் என்று நாம் சொல்கின்றோம். மெசியாவும் துன்பமும் சேர்ந்தே இருக்கும் என்றும், ஆண்டவர் மேல் அவரின் நம்பிக்கையைப் பற்றியும்  தம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இறைவாக்கினர் எசாயாவின் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு  செயலில் படதாத நம்பிக்கை பயன் அற்றது. தீமைக்குப் பதில் நன்மை செய்து அன்பினார் இறைஅரசை இவ்வுலகில் வரச்செய்வது. செய்ய செயலில் விளங்கும் விசுவாசம் அவசியம். செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் தேட இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.




 

பதிலுரைப் பாடல்


திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9


பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.


ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்;  ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.  அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். –பல்லவி

 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.  நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.   எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி
என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;  என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.  உயிர் வாழ்வோர் நாட்டில்,
நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். –பல்லவி



மன்றாட்டுகள்



திருச்சபைக்காக:


உண்மை உணர்வைத் தூண்டியெழுப்பும் ஒப்பற்ற இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் துன்பங்கள் வருவதைக் கொண்டு துவண்டு விடாமல் துணிந்து நிற்கவும், துன்பத்திற்கு பின் இன்பமும், உயிர்ப்பும் உண்டு என்ற நம்பிக்கையில் செயல் பட வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



நம் குடும்பங்களுக்கா:

 

இடர்பாடுகள் நீக்கும் இணையற்ற தலைவா!  இயேசு யார்? என்பதை உணர்ந்து அவரின் சீடத்துவ பணிகளை எம் வாழ்வில் செயலாகவும், இறைப்பற்று வார்த்தையினால் மட்டுமல்ல வாழ்க்கையினாலும் என்று நிருபிக்க எமக்கு தேவையான ஞானத்தையும், துன்பங்களை தாங்கும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:


ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா!  எல்லாருக்கும் எல்லாம் பெற எம் நாட்டுத் தலைவர்கள் எந்த ஒருபாகுபாடு பார்க்காமல் மனித நேயம் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்திடவும், நாட்டில் அமைதி நிலவிடவும், மக்களிடையே சமத்துவம் காணவும் வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..



இளையோருக்காக :


வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும்,  அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 





பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Saturday, September 5, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 06/09/2015

ஆண்டின் 23ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.    எசாயா 35:4-7
2.    யாக்கோபு 2:1-5
3.    மாற்கு 7:31-37

முன்னுரை:

 

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அன்புநேசர் இயேசுநாதரின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். “முழு மனித வாழ்வே இறைவனின் மகிமை” என்பதை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு எடுத்து காட்டுகின்றன. கடவுளின் கட்டளைகளை மீறி அருள்வாழ்வை இழந்தபோது அறிவுரையோடு இரக்கம் காட்டிய யாவே கடவுள்., தன் மக்களாகிய இஸ்ரயேலரை “அஞ்சாதே. நான் உன்னோடு” என்று திடப்படுத்துகின்றார் எசாயா இறைவாக்கினர் மூலமாக. 


ஊனங்களே நம் வாழ்வுக்கு தடையாக இருப்பதையும், அவற்றை தனி கவனத்துடன் குணப்படுத்து இறைமகன் இயேசுவை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஊனமுற்றோரை ஒன்றுமில்லாதவராக, ஒன்றுக்கும் உதவாதவராக இந்தச் சமுதாயத்தால் ஒதிக்கி வைக்கப்பட்ட அவருக்கு இயேசு முக்கியத்துவம் தருகிறார். அவரைத் தொட்டுக் குணமளிக்கின்றார். மாற்றுத்திறனாளிகள் மட்டில் நாம் கொண்டிருக்க வேண்டிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் செயல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. எனவே நம் இதயங்களை ஆண்டவருக்கு திறந்து வைப்போம். இரக்கத்தோடு உண்மையைப் பேசி நன்மையைச் செய்யும் பண்பை நமதாக்கிட இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

 

1முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் “அஞ்சாதே! நான் உன்னோடு” என்று ஆறுதல் கூறித் திடப்படுத்துகிறார்.  பாலைநிலத்தில் நீரூற்றுகள் பெருகச் செய்தும், வாய்பேசாதோர் பேசுதையும், காதுகேளாதோரின் காதுகள் திறக்கப்படுவதும், ஊனமுற்றோர் குணமடைவதையும் குறிப்பிட்டு மெசியாவின் வருகையை அம்மக்களுக்கு எடுத்துரைப்பதை விளங்கும் இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.


2முழு மனித வாழ்வுக்குத் தடையாக விளங்கும் பண்பு என்னவென்றால் பிறரின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது, அவர்களிடமிருக்கும் பணத்தை வைத்து பிறரை நடத்துவது. இந்த அவலத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடிந்துக்கொள்வதை இவ்வாசகத்தின் மூலம் மனதில் பதிவு செய்வோம். மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ள நாம் எப்படி செயல்படவேண்டுமென்று கற்றுக்கொள்வோம்.

 

பதிலுரைப் பாடல்

 

திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;  சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். –பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.  ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி


அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.  சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி


மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:

 

அன்புத்தந்தையே இறைவா, உம் இறைபணியில் தம்மையே இறைவாழ்வில் இணைத்துக் கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் உம் விண்ணகக் கொடைகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காத்து, ஒளியின் மக்களாக வாழ தேவையான அருளை நிறைவாக பெற வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று தேவனே உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

 

மண்ணுலகில் மனித நேயத்தை வளர்த்த எம் அன்புத் தந்தையே இறைவா, உம்மிடம் நல்லவற்றைப் பெற்றுக் கொண்டு வாழ விரும்பும் நாங்கள் மண்ணில் மனித நேயம் மலரவும், மனித மாண்பு தழைத்தோங்க உமது தூய ஆவியின்  கனிகளை பெற்று மக்களாக வாழ வரம் அருள வேண்டுமென்ற இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:

 

காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்துணர வைக்கும் எம் இறைவா! எம் நாட்டில் அமைதி நிலவ, நிலையான நல்லாட்சி தேசத்தில் மலர, தகுதியுள்ள நல்உள்;ளம் படைத்த புதிய தலைவர்கள் உருவாகி, ஏழைகளின் வாழ்வு மலரவும், ஏழை விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்தும் நல் உள்ளம் படைத்த தலைவர்கள் உருவாகிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

ஆசிரியர் சமுதாயத்திற்காக :

 

எல்லாரும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், சிறந்த நல்சான்றோர்களை  இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிட தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 



பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Saturday, August 29, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 30-08-2015

ஆண்டின் 22ஆம் ஞாயிறு 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.    இணைச்சட்டம் 4:1-2, 6-8
2.    யாக்கோபு 1:17-18,21-22, 27
3.    மாற்கு 7:1-8, 14-15, 21-23

முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை அருளாளர் இயேசுவின் பெயரால் வரவேற்கிறோம். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே  மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம். 




பதிலுரைப் பாடல்


திபா 15: 2-3. 3-4. 5

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

3 தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;
இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி


மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக:

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..

நம் குடும்பங்களுக்காக:

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

சமுதாயத்தால் கைவிடபட்ட மக்களுக்காக :
எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

Thursday, August 20, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-08-2015


ஆண்டின்  21ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1.  யோசுவா 24:1-2,15-17,18.  
2.  எபேசியர் 5:21-32.    
3.யோவான் 6:60-69

முன்னுரை:

இறைமகன் இயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். இயேசுவின் உண்மையான வார்த்தைகளின் மீது நம்பிக்கைக் கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. தங்களை வழிநடத்தும் ஒரே கடவுளுக்கு மட்டும் ஊழியம் செய்ய யோசுவாவும் மக்களும் உறுதிமொழி கூறுகிறார்கள்.. கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து வாழ பவுலடிகளார் நம்மை அழைக்கிறார்.
ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவிடம்; மட்டுமே வாழ்வுதரும் வார்த்தைகள் உள்ளன. அவர் இன்றி எவராலும் நிறைவாழ்வு தரமுடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை பேதுருவிடம் இருந்தது போல நம்மிடையே இருத்தல் அவசியம். விட்டு விலகிப்போன சீடர்களைப் போல் அன்றி, நாம் அழியாத நிறைவாழ்வுக்கு இயேசு தரும் ஆவியை நாட்டிச் செல்வோம்.. வாழ்வு தரும் அவரது வார்த்தைகளுக்கு தடையாக இருப்பவைகளை களைந்து விட்டு புதியதேர் படைப்பாய் இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. வாருங்கள் இறைமக்களே!



வாசகமுன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இன தெய்வங்களையும் வழிபட்டு இருமனத்தோராய் வாழ்ந்தனர். ஆனால் யோசுவா அவர்களிடம் தாம் உண்மையான இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யப்போவதாகக் கூறி அவர்களை நல்வழி நடத்தியதை யோசுவா நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து திருச்சபையை எவ்வாறு அன்பு செய்தார் என்பதை எடுத்துரைத்த பவுலடிகளார் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து ஓரே உடலாய் ஒன்றித்து வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக கிறிஸ்துவுடனும் திருச்சபையுடனும் நமது  கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிட்டு கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.




பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;
அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;
நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி



மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:
இனிய வார்த்தைகளயால் எம்மை வாழ்வை வளமாக்கும் அன்பு இறைவா! உம் திருச்சபையும் அதனை நடத்திச் செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் உம் வார்த்தைகளால் ஒன்றிணைந்து வாழவும், உமக்கு மட்டுமே ஊழியம் செய்து எம்மை நேசிக்கும் கடவுளாய் அறிக்கையிடவும் இறைவா உறுதியான மனதினைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நாட்டு தலைவர்களுக்காக:
முன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..
நம் குடும்பங்களுக்கா:
வார்த்தைகளால் நிறைவாழ்வு தரும் வள்ளயே! நற்கருணை நாதரே! நாங்கள் எங்கள் குடும்பங்களில் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, எமது குடும்பவாழ்வில் உண்மையான உறவு மலரவும், இறைப் பிரசன்னத்தின் அவசியத்தை நிலைநாட்டவும் போதுமான வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..
துயருறும்  முதியோர்கள் நலன்களுக்காக:
எம் பெயரை உள்ளங்கையில் பொறித்துள்ள இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...