Friday, July 16, 2021

பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 

  பொதுக்காலம் 16 -ஆம் ஞாயிறு -ஆண்டு 2

 

 இன்றைய வாசகங்கள் :

ஏரேமியா 23:1
எபேசியர் 2:13-18
மாற்கு 6: 30-34

 திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
வெகுநாள்களுக்கு பின் பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு  திருப்பலியில் பங்கேற்க ஆலயத்தில் குடும்பமாக இணைந்து வந்துள்ள அனைவருக்கு இறைஇயேசுவின் பெயரால் அன்புவாழ்த்துக்கள்.

இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்கு இல்லை. இன்றைய மக்கள் உண்மையான தலைவர்களைத் தேடுகிறார்கள். ஆனால், அவர்கள் சந்திக்கும் தலைவர்கள் உண்மையும் நேர்மையும் பரிவும் பாசமும் இல்லாத பாசாங்குகாரர்களாக இருக்கிறார்கள்! இன்றைய எதார்த்தம் மட்டுமல்ல; அன்றைய நிலையும் இதுதான் என்பதைக் காட்டுகிறது இன்றைய வாசகங்கள்.

இறைவாக்கினர் எரேமியாஸ் ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். இறைவாக்கினர் முன்னறிவித்ததைப்போல ஆயனில்லா ஆடுகளாக அலைந்த மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது மனமிரங்குகிறார். அவர்களுக்கு நெடுநேரம் போதிக்கிறார். சிதறிப்போன ஆடுகளிடமே செல்லுங்கள் என்று தம் சீடர்களுக்குக் கட்டளை தருகிறார்.

இயேசுவின் வாழ்வுக்கும் வார்த்தைக்கும்  அடித்தளமாக அமைந்தது அவரது செபவாழ்வு. செபத்தின் மூலமே தந்தையோடு ஒன்றித்தார். வல்லமையோடு  போதித்தார் ! வல்ல செயல்களை நிகழ்த்தி மக்கள்  பணியாற்றினார். எனவே தான் தன் சீடர்களையும்  இன்றைய நற்செய்தியில் தனிமையான இடத்திற்கு சென்று ஓய்வெடுக்கப் பணிக்கிறார். இயேசு குறிப்பிடும் ஓய்வு இறைவனோடு செபத்தில் ஒன்றித்திருப்பதாகும்.  அந்த ஒன்றிப்பு இன்றைய இறைமக்கள் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். ஒன்றிணைந்து செபிப்போம் தொற்று நோயை வென்றிட....  வாருங்கள் இயேசுவின் பாதையில் பயணிப்போம். புதியதோர் நலமும் வளமும் கொண்ட உலகம் படைப்போம்....

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை :

முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாஸ் மக்களை நன்னெறியில் வழிநடத்தும் ஆயர் பணியைச் சரிவர நிறைவேற்றாத அரசர்களுக்கு எதிராக இறைவாக்குரைக்கிறார். ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் உண்மையற்ற அக்கறையற்ற ஆயர்களை இடித்துரைத்துச் சாபமிடுகிறார். ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். போலி ஆயர்களை நீக்கிவிட்டுப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம் என்று கடவுள் பெயரால் அறிக்கையிட்டு வரவிருக்கும் மெசியாவை முன் குறிக்கிறார். அவர் வார்த்தைகளின் உள்ளார்ந்த இறைஅன்பைச் சுவைத்திடுவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6

பல்லவி:  ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை .

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்; சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

தொலையில் இருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டுள்ளோம். பிரித்து நின்றப் பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து அனைவரையும் ஒன்றுபடுத்தினார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க அவர் செய்த அருங்கொடைகளால் நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுல் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!  என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன . அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. தொற்று நோய் காலத்தில் இல்லத்திலிருந்து இயந்திரமாக இயங்கும் இந்தச் சமுதாயவாழ்க்கை முறையில் வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்கவும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை உணர்ந்து, நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

3. இன்று உலகில் நடைபெறும் பருவக்காலமாற்றங்களும், பொருளாதரமாற்றங்களும் நலிவடையும் என் விவசாயப் பெருமக்களை உம் முன் வைக்கிறோம். அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்புச் சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்றப் பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சிக் கண்டு இன்புறவும்,அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பையும், உம்மேல் உறுதியாக நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நாங்கள் தூயவராக வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுவே எங்களுக்கு உமது திருவுளம் என்பதைத் திருத்தூதர் பவுல் வழியாக எங்களுக்கு எடுத்துரைத்தீரே! நாங்கள் தூயவராக வாழ்ந்து உமது திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்குத் தூயதோர் உள்ளத்தைப் பெற ஆவியாரின் கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Friday, July 9, 2021

பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

     பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 

See the source image

இன்றைய வாசகங்கள்


ஆமோஸ் 7: 12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6: 7-13

திருப்பலி முன்னுரை


இறைஇயேசுவில் அன்பார்ந்தவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு ஆன இன்று நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் என்று உணர்த்துகின்ற இன்றைய வாசகங்கள், நம் அனைவருக்குமே தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.

போலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்க்கைப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்துச் செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை.

காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியுடன்....

வாசக முன்னுரை


முதலாம் வாசக முன்னுரை

 
 முதல் வாசகத்தில் தகுதியற்றவர் இறைஅழைப்பை ஏற்றக்கொண்டபின் அவருக்குக் கிடைக்கும் ஞானத்தையும் ஆற்றலையும் துணிவையும் இறைவன் அவர்களுக்கு அளித்துப் பணிவாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், ஆடுமேய்ப்பவனையும் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினராக மாற்றிய அற்புதத்தையும் ஆமாஸ் இறைவாக்கினர் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


பாமரமக்களே கிறிஸ்துவுடன் இணைந்தபின் ஆற்றலும் திறைமையும் உடையவர்களாக மாறினார்கள். நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றும் முன்னே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். இவ்வார்த்தைகளே மனதில் பதிவு செய்து இன்றைய இரண்டாம் வாசகம் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!  அல்லேலூயா.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

   
திருச்சபைக்காக:
பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டு ஆற்றலும், திறமைகளும் நிறைந்தவர்களாக மாறப் போதுமான வல்லமை இவர்களுக்கு பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:
உலக நாடுகளின் இராஜாதி ராஜனே! எமது நாட்டு அரசியல் தலைவர்கள் ஊழலை ஓழிப்பபதாகக் கூறி வந்தவர்கள் அனைவரும் ஊழலில் மூழ்கி மக்களை மறந்துத் தங்களைப் பற்றியே நினைக்கும் நிலை மாறிப் புதிய சமுதாயத்தை எம் நாட்டில் உருவாக்கிடவும், தொற்றுநோயிலிருந்து விடுவிக்கவும், மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திடவும் அவர்களுக்கு நல் மனம் தந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:
எமக்குப் புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப மனமாற்றத்தை ஏற்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய் இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று அதன்படி இன்றைய சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.
 
இளைய சமுதாயத்திற்காக :
கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவீசிடத் தடையாக உள்ள தொற்றுநோய் உலகமெங்கும் நிறைந்து, சிறுகுழந்தைகள் தொடங்கிச் சமுதாயத்தின் அனைத்து மக்களை ஆட்டிப்படைக்கும் வேளையில் தங்கள் வாழ்க்கையில் நிலைத் தடுமாறும் நிலை உள்ள இன்றைய இளைய சமுதாயம் காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில் பயணித்திடவும், அனைவரும் நோயிலிருந்து காக்கப்படவும்  இறைவா உமை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Friday, July 2, 2021

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - ஆண்டு 2


இன்றைய வாசகங்கள்

 
எசேக்கியல் 2:2-5
2 கொரிந்தியர் 12: 7-10
மாற்கு 6:1-6

திருப்பலி முன்னுரை


ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு, புறக்கணிப்பு! மற்றும் தொற்றுநோய் தாக்கங்கள்....

மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு, புறக்கணிப்பு. அதிலும், காரணங்கள் எதுவும் இல்லாமல், அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார்.

அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி, முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதலாம் வாசக முன்னுரை


ஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம்.

பதிலுரைப்பாடல்

 திபா 123: 1. 2. 3-4
பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். -பல்லவி

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். -பல்லவி

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


புறக்கணிப்புகள், துன்பங்கள், துரோகங்கள், காயங்கள், வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:


1.வாழ்வின் ஊற்றே இறைவா! நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம். எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கருணைக் கடலே இறைவா! நிராகரிப்பு, புறக்கணிப்பு, நோயின் தாக்கம் போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள், கைவிடப்பட்ட பெற்றோர்கள், அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும், புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா! இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும், துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தோற்றுநோயில் மரித்த யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 www.anbinmadal.org


Saturday, June 26, 2021

பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு - ஆண்டு 2


 இன்றைய வாசகங்கள்  


சாலமோனின் ஞானம்  1:13-15; 2:23-24
2 கொரிந்தியர் 8: 7, 9, 13-15
மாற்கு 5:21-43
 
 

 திருப்பலி முன்னுரை


இறைமகன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு பெண்கள் நலமடைந்த புதுமைகளை கேட்கவிருக்கிறோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இரு புதுமைகள் நிகழ்கின்றன.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது, எவ்விதத் தொடர்பும் இல்லாத இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இருபெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வருபவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிர் இழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

இந்நிகழ்வை நம் ஆழ்மனதில் பதிவுசெய்து நாம் எப்பொழுதும் இறைமகன் இயேசுவை மையமாக கொண்டு நம் வாழ்வை வளமாக்கவும், தொற்றுநோய் விரைவில் மறைந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

 

 முதல் வாசக முன்னுரை


ஊடகங்கள் தரும் உலகையும், விவிலியம் தரும் உலகையும் இணைத்துச் சிந்திக்கும்போது, , இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில் கவிதை வரிகளாய் இன்றைய முதல் வாசகம் ஒலிக்கிறது: "கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது" என்பது தான் இவ்வரிகள். முதல் வாசகமாக வரும் சாலமோனின் ஞானம் இப்பகுதியை கவனமுடன் கேட்போம்.

 பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11,12
 பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் சேமிப்பைப் பற்றியும் பகிர்வைப் பற்றியும் திருத்தூதர் பவுலடியார் "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! என்ற எடுத்துக்காட்டுடன் இயேசுவின் அன்பை அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசு அவர் செல்வராயிருந்தும் ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். பவுலடியாரின் இக்கருத்துக்களை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா!  நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.  அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டு


1.உயிரினும் மேலான பேரன்பு கொண்ட தந்தையே எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்க தங்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் சாட்சியம் பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2.எம் நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் அனைத்தும் உம்மையே மையமாகக் கொண்டு, உம் மேல் முழு நம்பிக்கை வைத்து எங்கள் வாழ்க்கையை உமக்கு உகந்ததாக வாழவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், நிலைவாழ்வைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.எல்லாரும் தஞ்சம் தரும் எம் இறைவா! புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4.என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! இந்திய திருநாட்டில் தொற்று நோயின் காரணமாக அருள்பணியாளர்களை இழந்து தவிக்கும் உம் திருஅவையைக் கண்ணோக்கும். அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியை அருளும். புதிய தேவஅழைத்தல் தந்து உம்மை வழிநடத்திட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவரையும் ஆதரிக்கும் தந்தையே எம் இறைவா! ஏழைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோரை கண்டு அவர்களுக்கு உதவிட தங்கள் உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் வாழ்வில் மகிழ்வு, உடல்நலமும் பெற்று அமைதியான வாழ்க்கை அளித்திட இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களை பாதுகாக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org




Thursday, June 17, 2021

பொதுக்காலம் 12 ஆம் ஞாயிறு - ஆண்டு 2


பொதுக்காலம்  12 ஆம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள்:

முதல் வாசகம்: யோபு 38:1.8-11
இரண்டாம் வாசகம்:  2கொரிந்தியர் 5: 14-17
நற்செய்தி: மாற்கு 4:35-41
 

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று பொதுக்காலம் 12ம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் ஆழ்ந்த உறுதிப்பாடு நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். துன்பங்கள் புயல் போல எழலாம். கவலைகள் கடல் அலைபோல நம்மை மூழ்கடிக்க வரலாம். தொற்றுநோயின் தாக்கம் நம்மைப் பயத்தில் முழ்கடிக்கலாம். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அந்த ஆபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இது உறுதி.

திருஅவை என்னும் மாபெரும் கப்பல் பயணம் போகின்ற வேளையில் புயற்காற்றும் அலையும் எழுந்து அதைப் பயமுறுத்தலாம். ஆனால் அதை எல்லாம் வென்று திருஅவை இன்றும் அமைதியாகப் பயணிப்பதற்குக் காரணம் இயேசுவின் உடனிருப்பு மட்டுமே என்பதை நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம். அந்த நம்பிக்கை என்றும் எல்லோரையும் வழிநடத்தும்.

அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் என்ற இயேசுவின் அழைப்பை ஏற்று நிலைவாழ்வு என்று அக்கரைக்கு நம்பிக்கையுடன் பயணிப்போம். வாரீர்.


வாசக முன்னுரை:

முதல் வாசகம்

  இறைவனே பெருமிதம் கொண்ட யோபுவின் நம்பிக்கையே கொஞ்சம் ஆட்டம் கண்டபோது ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளியப் பதிலே முதல் வாசகம். வாழ்வினில் இழப்புகள், இடர்பாடுகள், விபத்துக்கள், வேதனைகள் போன்ற சூழலில் இறைவனின் அன்பை, ஆற்றலை, உடனிருப்பை மறந்து விடக்கூடாது என்பதே இன்றைய வாசகம் சொல்லும் செய்தி. யோபு இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட செய்தியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 107: 23-24. 25-26. 28-29. 30-31

சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.  அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். பல்லவி

அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.  அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. பல்லவி

தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. பல்லவி

அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.  ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துப் போவதில்லை: குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை: துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை: வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. கிறிஸ்துவோடு ஒன்றிணைக்கப்பட்டு நாம் புதுப் படைப்பாக இருக்கிறோம் என்ற ஆழமான மன உறுதி இருந்த புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா

நம்பிக்கயாளரின் மன்றாட்டு:


பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசுப் பணியைச் செவ்வனே ஆற்றிடப் போதுமான ஆற்றல்களையும், நல் ஆரோக்கியத்தையும் அவர்கள் மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என் அன்புத் தந்தையே! இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சிப் புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திடவும், தொற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் எல்லாப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உன்னதரே! எம் இறைவா! மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம் மீது நம்பிக்கைக் கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராகச் செயல் பட்டுக் கடலின் இறைச்சலைக் கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத் தர வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா! திடத்துடன் வாழவும், வாழும் திருச்சபையாக வாழவும், இந்தத் தொற்றுநோயை வெற்றிக்கொள்ளவும் யோபுவின் துன்பங்களை நாங்களும் படித்துணர்ந்து, சோதனைகளில் துவண்டுப் போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவைப் போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

 

www.anbinmadal.org

Thursday, June 10, 2021

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு -ஆண்டு 2

 பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு -ஆண்டு 2


 இன்றைய வாசகங்கள்


எசேக்கியேல் 17: 22-24  |  2 கொரிந்தியர் 5: 6-10  |  மாற்கு 4: 26-34


 திருப்பலி முன்னுரை :


இயற்கையுடன் இணையாமல் இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே இயற்கைப் பாடங்கள் சொல்லித் தருகின்றார் இறைவன்.

இயற்கை என்ற பள்ளியில் இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த இயற்கை வளங்களை இழக்கும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கிவிட்டு, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று உலகநாடுகள் அனைத்தும் மாநாடுகள் நடத்தி வருகின்றது.

மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமையே இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் "தானாக வளரும் விதை" என்ற உவமை.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள் நாம் வாழும் அவசர உலகில் பெருமளவு காணாமற் போய்விட்டன.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் தாம் நாம். பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இறைவார்த்தைகள் உரமாக இருந்து, அருள்கொடைகள் எனும் நீர் ஊற்றி, விதை முளைத்து, செடியாக, மரமாக வளர்ந்து நிற்கும்போது, நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம்மால் நல்ல கனியைக் கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அக்கனிகள் வளரக் கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைவனின் நற்கனிகளாய் உருபெறச் சிறப்பாக மன்றாடுவோம்.

 வாசக முன்னுரை :

 முதல் வாசக முன்னுரை :


இறைவனின் உன்னத கொடையே நம் உயர்வும், வளர்ச்சியும் ஆகும்.  மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல். வளர வைப்பதும், வளர்ந்ததை உலர வைப்பதும் இறைவனின் வல்லமை. இறைவனின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

  பதிலுரைப் பாடல்


திபா 92: 1-2. 12-13. 14-15
 பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். - பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை :


நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும்.ஆம் இறுதிநாளில் இயேசுவின் நீதிமன்றத்தில்  நாம் தோன்றும் போது நாம் உடல் வாழ்க்கையின் போது நாம் செய்த நற்செயல்கள், தீச்செயல்களுக்கு உரிய   பலனைத் தரும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா!  இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.  அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியாகத் திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்து கொள்ளப்பட்ட திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட அழைப்பிற்கேற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. எம்மைப் படைத்தாளும் எம் இறைவா! அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும் சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கி நீர் படைத்த இயற்கையோடு ஒன்றித்துவாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுவோம்.

3. அன்பு இறைவா, நல்ல பெற்றோர்களாக நாங்கள் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல முன் மாதிரியாகத் திகழ்ந்து, ஆன்மிக வாழ்விலும், அருள் வாழ்விலும் எங்கள் குழந்தைகள் வளர்ந்திட உமதுஅருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பிறரின் சுமைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட இறைவா! துன்பத்தில் பங்கேற்ற சீமோனைப் போன்ற நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பிறருடன் அவரவர் தேவைக்கேற்ப எங்கள் உடைமைகளையும், உணர்வுகளையும், ஆறுதல் தரும் வார்த்தைகளையும் பகிர்ந்து வாழக் கூடிய நல் மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org 

Friday, June 4, 2021

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா - ஆண்டு 2

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா



இன்றைய வாசகங்கள்

 
விடுதலைப்பயணம் 24:3-8;
எபிரேயர் 9:11-15;
மாற்கு 14:12-16, 22-26

திருப்பலி முன்னுரை:

 இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.

அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக  மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது. ஆனால் காலப்போக்கில் அவர்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்து பிறஇனத் தெய்வங்களை வழிபட்டு உடன்படிக்கையின் அன்பை முறித்தனர். எனினும் இறைவன் இறைவாக்கினர்  எரேமியா வழியாக புதியதோர் உடன்படிக்கையை முன் அறிவித்தார்.  இந்த புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர்  இயேசுவிறிஸ்துவே என்பதை உணர்ந்து விடுதலைநூலிலிருந்து வாசிக்கப்படுவதைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். -பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டிற்கு கிறிஸ்துவே தலைமைக் குரு. அவர் திருப்பலி செய்யும் கூடாரம் பெரியது. நிறைவு மிக்கது. அவர் பலியாகப் படைத்த இரத்தம் அவரது சொந்த இரத்தமே. அவரது தூய இரத்தத்தையே ஒரே ஒரு முறை சிந்தி மானிடரை மீட்டார் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றபப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது என்று உரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா,  உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலை பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமை படைத்துப் பராமரித்து ஆளும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் பல நிலைகளில் பிளவுபட்டும், ஒருவர் மற்றவரைக் குறை கூறியும் வாழும் போக்கினை நன்கு அறிவீர். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற உமது தாக்கம் எம் நாட்டு தலைவர்களிடையே மேலோங்கி நீவீர் விரும்பும் இறையரசு மலர்ந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. இன்றைய உலகலாவிய மனித பேராசையினால் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! தொற்றுநோயால் எம் இந்தியத் திருஅவை இழந்துள்ள 300 மேற்பட்ட அருள்பணியாளர்களையும், அருள் சகோதரிகளையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியை அருளும். பணியிலுள்ள
அருள்பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல உடல் வளமும் பாதுகாப்பையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.