Tuesday, April 26, 2022

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19


திருப்பலி முன்னுரை:


அன்புச் சகோதரர் சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின் போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடியச் சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பைத் தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்குப் பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதைச் சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகமுன்னுரை:


தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:
திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:


இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! எங்கள் திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா! இறை அழைத்தலின் மேன்மையை, அனைத்து மாந்தரும் உணர்ந்து, சுயநலம் கருதாமல் குருத்துவத்தின் மேன்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித் திருச்சபைக்குப் பணிச் செய்திடத் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா! இன்று உலகில் நடைபெறும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள், துறவற வாழ்வை மேற்கொண்டவர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள், மதத்தின் பெயரால் ஆங்காங்கே நடைபெறும் செயல்களை இனம் கண்டு, மனித வாழ்வின் மேன்மையை இவர்கள் உணரவும், உம் ஆவியின் ஆற்றலை இவர்களும் உணர்ந்துச் சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எல்லாம் வல்ல இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், நோயாளிகள் ஆகியோருக்கு உமது அன்பையும், இரக்கத்தையும், அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறத் தேவையான உதவிகளைச் செய்யும் நல்மனதை எங்களுக்குத் தருமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் நல்லாயனை! இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, April 18, 2022

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-11அ,12-13, 17-19
யோவான் 20:19-31

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. இறைஇரக்கத்தை நாடி ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாகத் தன் சீடத்தத்தி மதலா மரியாவின் வழியாகத் தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டுக் கலிலேயாவில் தன் சீடர்களைச் சந்திக்கச் செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்கத் துணிவோடு வெளியே சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிடச் செய்கிறார். நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டு கொண்ட தோமையார் மூலம் காணாமல் இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறு பெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.

இயேசுவைச் சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றத்தை அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக்கொண்டு அவரின் பேரிரக்கத்தைப் பெற்று அவரின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டங்களில் நிறைவாய் பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்றுப் பகர்ந்தத் திருத்தூதர்களின் வாழ்க்கை முறைப் பற்றிப் பதிவுச் செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாகப் பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோலக் கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகளின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:2-4, 22-24, 25-27அ
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

2.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!  ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

3.ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை:

பத்முதீவுக்கு நாடு கடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின் மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவருதலால், நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, எங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலைப் போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையில் ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களை எங்கள் மேல் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது  இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட  உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களைப் பராமரித்துப் பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! தங்கள் பள்ளிப்படிப்புக்களை முடித்து விட்டு மேற்படிப்பிற்காகக் கல்லூரிகளில் இடம் தேடி அலையும் எம் இளையோர், சிறந்த வழிகாட்டிகளின் மூலமாகத் தாங்கள் விரும்பும் கல்வியினைப் பெற்று, பெற்றோருக்கும், திருஅவைக்கும், நாட்டிற்கும் உவந்தவர்களாகத் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Saturday, April 9, 2022

  


ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம்

 



 

 
இராவுணவு

 

 

திருப்பாடுகளின் வெள்ளி

 

 
பாஸ்கா திருவிழிப்பு/பாஸ்கா ஞாயிறு

 


அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன்.

 


Tuesday, March 29, 2022

 தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11

திருப்பலி முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றைக் கொண்டாடுகிறோம்.  தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று நம் அகவாழ்வைச் சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவறுவது மனித இயல்பு. ஆனால் தவறுக்குப்பின் திருந்தி எழுவதுதான் மனிதனின் மாண்பு. அது தான் கிறிஸ்தவனின் பண்பு என்பதை இன்றைய இறைவாக்குகள் அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது

முதல் வாசகத்தில் இதோ, நாம் புதியனச் செய்கிறோம் என்ற எசாயா இறைவாக்கினின் முழக்கமும், இரண்டாம் வாசகத்திலும் நான் விரும்புவது எல்லாம் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற திருத்தூதர் பவுலின் கூற்றும்,  இயேசுவின் பாணியில் நாம் பிறருக்குத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது. அவரில் ஓப்புறவு கொண்டு நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.


வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:


பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூத மக்களை விடுதலைச் செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களித்தார் இறைவன், எகிப்தின் அடிமைத்தனம் மிகப்பெரிய வடுவை இஸ்ரயேலரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கலாம். 'என்னை அவன் அடிமையாக வைத்திருந்தான்' என்பதை அவர்களால் எப்படி மறக்க முடியும். ஆனால், மறந்தால் தான் இறைவனின் புதிய அற்புதங்களை இரசிக்க முடியும். இறைவனின் புதிய செயல் என்னவென்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க நாம் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


'கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் முன் இவை யாவும் குப்பை அல்லது இழப்பு'. 'கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்டுகொண்டு' என்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குப் பவுலடியார் இங்கே பயன்படுத்தும் ஓர் உருவகம் தான், 'பந்தயத்தில் ஓடுவது.' நாம் இதுவரை ஓடிவந்த வழி எப்படி இருந்தாலும், இன்றுமுதல் சரியான பாதையில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்து வைத்து வாழ்வோம். இவ்வாறு இயேசுவைப் பற்றிக் கொள்ள அழைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்:

திருப்பாடல்126: 1- 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது.  பல்லவி

உன் "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்:


இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றித் தாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்காலப் பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எளியவர்க்கு இரங்கும் இறைவா! எங்கள் இடுக்கண்களையும் பலவீனங்களையும் நீ நன்கு அறிவீர். நாங்கள் எவ்வளவுக்கு வலுவற்றவர்களாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு நீர் உறுதுணைத் தந்து எங்களை வலுப்படுத்துகிறீர். உமது கொடையாக நாங்கள் பெற்றுள்ள இந்த ஒப்புரவு காலத்தை நன்றியுடன் பயன்படுத்தி எங்கள் வாழ்வைப் புதுப்பிக்க வேண்டிய வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஆண்டவருடைய கட்டளைகளை இதயத்தில் இருத்திக் கொள்பவர் நீட்டிய ஆயுளையும், நிலையான நலன்களையும் பெற்றுக் கொள்வார் என்ற மொழிந்த எம் இறைவா! கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். நம்மீது அவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அதே இரக்கத்தையும் அன்பையும் நாம் பிற மனிதர்களுக்கும் காட்ட எங்களுக்கு அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அரசர்களுக்கெல்லாம் அரசராகிய எம் இறைவா! எம் நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அணிகள் சேர்த்துக் கொண்டு அடுத்தவர்களை வெறுத்து ஒதுக்காமல் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவருக்கும் சேவைச் செய்யவே தெரிந்துக் கொள்ளப்பட்டோம் என்பதனை உணர்ந்திடக் கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் வாழ்வின் வழிக்காட்டியான இறைவா! எம் இளையோர் தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்து கொள்ள நல்ல வழிக்காட்டிகளின் துணையோடு தங்களுக்கான பாடத்திட்டங்களை ஏற்றுச் சிறந்த கல்வி நிலையங்களில் இடம் பெற்றுச் சிறப்பாக வெற்றிப் பெறத் தேவையான ஞானத்தையும், நுண்மதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, March 23, 2022

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

  தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

 யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே,/ இறைவனை நோக்கிய, / பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்து அதனை செயலாக்குவோம்.

பதிலுரைப் பாடல்:

திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை என்பது அருட்பணியாளரும், பொது நிலையினரும் இணைந்த செயல்பாடுகளே. இவை திருஅவையில் நிலவிட, திருத்தந்தை முதல் பொதுநிலையினர்கள் வரை அனைவரும் உம் இறைஇரக்கத்தின் கருணையினால் நல்ல மாற்றங்கள் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா! உலக நாடுகளில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள், ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்தால், நல்ல தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் அன்புத் தந்தையே, இறைவா! நீண்ட இடைவெளிக்கு பின் தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்து, ஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையைப் பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பு இறைவா! உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம், பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மனமாற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்க்கும் இறைவா! அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் பரந்த மனப்பான்மையும், உமது அன்பு, கருணை, மன்னிப்பு, அரவணைக்கும் பண்பு, மனமாற்றத்தில் மகிழ்ச்சி, பிறர் சுதந்திரத்தை மதித்தல் ஆகிய பண்புகளை எமதாக்கிக் கொள்ள அருள் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, March 15, 2022

 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

விடுதலைப் பயணம் 3:1-8அ, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12:17-4:1
லூக்கா 13:-1-9

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்!

முதல் வாரம் நமது கண்களின் தூணை அகற்றி,  பார்வையை விரிவடையச் செய்த தேவன், இரண்டாம் வாரம் அந்த பார்வைக்கு வாழ்வு தரும் விதமாக தன்னையே முழுமையாக ஒளிவெள்ளத்தில் இறை வல்லமையை வெளிப்படுத்தி காணும்‌ வாய்‌பைத் தந்து  நானே உன் தேவன் என்றார். இந்த வாரம் ஐக்கியத்தின் வேரான‌ மனமாற்றத்தை பெற்று அவரில் நிலைத்திருக்க அழைப்பு விடுகின்றார்.

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டு விடக்கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம்.  அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வு உள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

'கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். 'எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்



நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

அன்புத் தந்தையே! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இறைஇயேசுவின் பணிவாழ்வைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் அனைத்து மாந்தருக்கும் வேறுபாடின்றி, இறைவனின் இரக்கத்தை அனைத்து மாந்தருக்கும் சான்றுப் பகர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலாலோசனைக் கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்கத் தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசாரச் சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரைப் பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களைப் புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

ஞானத்தின் இருப்பிடமே இறைவா! உலகெங்கும் ஏற்பட்டுள்ள போர்கள், பயங்கரவாதங்கள், மீண்டும் தொற்று நோயின் தாக்கத்தினால் புதியதாய் வரும் நோய்கள் ஆகியவற்றால் மக்கள் படும் துன்பங்களிலிருந்து அனைவரையும் காத்தருளும். தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அவதிபடும் மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத் தேவையான எல்லா வசதிகளைப் பெற்றிடத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, March 9, 2022

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36

திருப்பலி முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!. புயலுக்குப்பின் அமைதி, இரவுக்குப்பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப்போல் இயேசுவின் பாடுகளுக்குப்பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்..

மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பது இல்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

 புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன்  இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல். இவ்வாறு  கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின் கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார். நாம் நமது தன்னல வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழமுடியும். தன் மக்கள் மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 27: 1,7-8,9-13-14

பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி

ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

 
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்கு செவிசாயுங்கள்"


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா! இத் தவக்காலத்தில் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும், எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தைப் பயன்படுத்த வேண்டி வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப் போல் வாழ்ந்திடவும், விண்ணகதே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும் இறைமகன் இயேசுவிற்காகக் காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின் உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா! அரசியல் தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள் காக்கும் தன்னலமற்ற போக்கைக் கடைப்பிடிக்கவும், உக்ரைன் நாட்டில் நடைப்பெற்று வரும்  விரைவில் முடிவுக்கு வந்து அனைத்து மக்களுக்கும்  நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களின் நாயகனே! எம் இறைவா! தொற்று நோயினால் ஏற்பட்ட மாற்றங்களினால் அவதியுறும் எம் மாணவ, மாணவிகள் அனைவரும் தேவையாக உடல், உள்ளச் சுகமும், தேர்விற்குத் தேவையான ஞானத்தையும் மனத் தைரியத்தையும் கொடுத்து, பெற்றோர்களின் அன்பும், தேற்றவும் பெற்றுத் தங்களின் எதிர்கால வாழ்வில் வெற்றிப் பெறவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5, ஏழைகளுக்கு இறங்குபவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்று கூறிய எம் இறைவா! உலகமுழுவதும் உணவின்றி, உடையின்றி, வாழ்வை இழந்து உம்மையே நம்பி இருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள், வறுமையில் வாடுவோர் தனிமையில் தவிப்போர் போன்ற இவர்களின் தேவைகளைச் சந்தித்து, தங்கள் அன்பையும், அரவணைப்பையும் பகிர்ந்தளிக்கத் தேவையாக நல்ல மனப்பக்குவத்தை எமக்கு இத்தவக்காலத்தில் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF