பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு - 19.10.2025
அகில உலக நற்செய்தி அறிவிப்பு ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8
திருப்பலி முன்னுரை:
அன்பு உள்ளங்களே ! தளரா மனத்துடன் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டல் நிச்சயமாகக் கேட்கப்படும் எனப் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறுத் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.
கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.
இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று! நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.
முதல் வாசக முன்னுரை:
இஸ்ரயேலர் இறைவன்மீது நம்பிக்கைக்கொண்டு தளரா மனத்துடன் மன்றாடியபோது இறைவன் அவர்கள் பக்கம் இருந்து வெற்றி அளித்தார். நாமும் இறைமீதான நம்பிக்கையுடன் தளரா மனம் கொண்டு வாழவும் செயல்படவும் வரம் வேண்டி முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
பதிலுரைப் பாடல்:
திபா 121:1-2, 3-4, 5-6, 7-8
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவை எந்தச் சூழ்நிலையிலும் தளரா மனத்துடன் இறைவார்த்தையை கற்றுக்கொண்டு, அதில் நிலைத்து நின்று, நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. உலகளாவிய மறைபரப்பு ஞாயிறாகிய இன்று, இரண்டாம் வாசகம் கூறுவதுபோல “மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்கவல்ல திருமறையை” அறிக்கையிடுதலிலும், சான்று பகர்தலிலும், முதன்மையாய் விளங்குகிற எம்திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், அதே அழைத்தலில் பங்குபெறுகிற பொதுநிலையினராகிய நாங்களும், உறுதியாய் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “மோசே தம் கையை உயர்த்தியிருந்த போதெல்லாம் வெற்றியடைந்த இஸ்ரயேலரின்” அனுபவம், இறை அருள் இல்லாமல், தீமைமீது வெற்றியும், நிலையான அமைதியும் சாத்தியமில்லை என்பதை உணர்த்துகிறது. உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், குடிமக்களாகிய நாங்களும், இறைவனை நாடுகிற, இறைஅரசுக்குரிய விழுமியங்களைப் பின்பற்றுகிற மனிதர்களாக, விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவி” எனத் திமொத்தேயுவுக்குத் திருத்தூதர் பவுல் எழுதிய வார்த்தைகளையே, தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு, மறைப்பணித் தளங்களிலும், வேதபோதக நாடுகளிலும், துன்புறுத்தலும் வேதனைகளும் நிறைந்த இடங்களிலும், துணிவுடன் அருள் பணியாற்றும், குருக்கள், துறவியர், மற்றும் நற்செய்தி பணியாளர்கள் அனைவருக்கும், நீர்தாமே அரணும் கோட்டையுமாக இருந்து, திடமும் பலமும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; போகும்போதும், வரும்போதும், இப்போதும், எப்போதும் காத்தருள்வார்” என்கிற திருப்பாடல் வரிகளால் திடம்பெறுகிற நாங்கள் அனைவரும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, எம்வாழ்க்கை முழுவதுமே, எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் காண விரும்புகிற, நம்பிக்கையைக் கொண்டவர்களாய் விளங்கவும், கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாகத் திகழுகிற இறைவார்த்தையை, நாங்களும், எங்கள் பிள்ளைகளும் குடும்பங்களும், உறுதியாய் பற்றிக்கொண்டு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.