Friday, October 29, 2021

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு -ஆண்டு 2

 பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு

 


இன்றைய வாசகங்கள்


இணைச்சட்டம் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்றுக் கட்டளைகளைக் கூறுகிறார்.

இறைவனை அன்புச் செய்! தன்னையும் அன்புச் செய்! பிறரையும் செய்!

மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், ஈர் அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்புக் கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

எனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்புக் கட்டளையை யூதர்கள் தங்களது கதவு நிலைகளில் மட்டுமல்ல தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தாங்கி வாழ்ந்தனர். இக்கட்டளைகளில் கடவுளை மனிதர்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும் என்று அழைக்கின்றது. கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பதுபோல உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு அவரைத் தேடி அன்பு செய்ய மோசேயின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நம்மை அழைப்பதைக் கவனமுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 18:1-2, 2-3. 46,50
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி

என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


மனிதர்கள் சாவுக்கு ஆளாவதால் தங்கள் குருத்துவப் பணியில் நிலையாய் இருக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; நம் தலைமைக் குருவும் அவரே! தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி நம்மை மீட்டுள்ளார். என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். என்று இயேசுவின் குருத்துவ மேன்மையை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர் காலக் கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உம் பேரன்பால் பூவுலகை நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போலப் பணிகளைச் செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, அவரின் உடனிருப்பை உணர்ந்து வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3.எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org

Tuesday, October 19, 2021

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு - ஆண்டு 2
 மறைபரப்பு ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. நம் திருஅவை மறைபரப்பு ஞாயிறு கொண்டாடுகிறது,  இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய வாசகங்களின் மூலமாக யாவே இறைவனும், இறைமகன் இயேசுவும் சிதறடிக்கப்பட்ட எல்லா இஸ்ரயேலரைக் கூட்டிச் சேர்த்து ஒரு நாடாக, ஓர் இனமாகக் கூட்டிச் சேர்க்கின்றார்கள்! மீட்டுருவாக்குகிறார்கள்! மீண்டும் நிறைவாழ்வை மலரச் செய்கிறார்கள்! இயேசுவுக்கு அழைப்புக் கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்துக் கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார். அவர்களிடம் முழுமையாகத் திரும்புவோம். 


'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்குப் பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்குப் பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்து தான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வைப் பெறுவதற்கு முன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்குத் தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்றத் தன் மக்களை இறைவன், மோசேயின் தலைமையில் ஒன்றிணைத்துப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்குப் புது வாழ்வுத் தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.  அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.  ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

3  ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.  கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

4 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:

 மறைபரப்பு ஞாயிறு சிறப்பு மன்றாட்டுகள்:

  ஒவ்வொரு மன்றாட்டிற்குப் பிறகும், 'ஆண்டவரே!  எம் மன்றாட்டைக் கேட்டு எம் மறைபரப்புப் பணியை  வலிமைப்படுத்தியருளும்' என்று சொல்லவும்.
 
அகில உலக திருஅவைக்காகவும் அவர்தம் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம்.  

1. கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக வாழும் பேரார்வத்தை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் நமது திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர்  மற்றும் பொதுநிலையினருக்காக மன்றாடுவோம்.  இவர்கள் ஒளிக்கு சான்று பகிர்ந்திட தேவையான  உதவியினையும் நல் உடல் உடல்நலத்தையும்  தந்து அவர்களை வலிமைப்படுத்த இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்புப் பணியாளர்களுக்காகவும், மறைப்பணித்  தளங்களுக்காகவும் மன்றாடுவோம்.


2. ஒவ்வொரு மறைத்தூது தளத்திலும் மறைத்தூதுப்  பணியை மேற்கொள்கின்ற மறைத்தூதுப்  பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம்.  அவர்கள் உமது வார்த்தையை முதல்  முறையாக கேட்பவர்களிடம் உம்மிடமிருந்து  பெற்றுக்கொண்ட அன்பையும் இரக்கத்தையும்  கருணையையும் அனுபவிக்கவும் பகிரவும்  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.  
 
மறைபரப்பு பணிக்கு உதவிபுரியும் அனைவருக்காகவும்  மன்றாடுவோம்.  

3. எங்கள் நல்லாயனே! மறைத்தூது  பணிக்காக தாராளமாக பங்களிப்புச் செய்யும்  அனைவருக்காகவும் மன்றாடுகிறோம்.  ஆரோக்கியத்தையும் அன்பு, அமைதி,  மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வையும் அவர்கள்  அனுபவிக்கும்பொருட்டு அவர்களை மேன் மேலும்  ஆசிர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம். மேலும்  எல்லாவிதமான அடக்கமுறைகள், தீமைகள்  மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாத்திடவும்  இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் ப யை வலிமைப்படுத்தியருளும்.

இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நம்  அனைவருக்காகவும் மன்றாடுவோம்.  

4. உமது அன்பையும், இரக்கத்தையும்,  கருணையையும் அனுபவிக்க எங்களுக்கு  உதவிபுரியும். எங்கள் நம்பிக்கையை  ஆழப்படுத்தும்; நாங்கள் புரிகின்ற சின்னஞ்  சிறிய செயல்களிலும், பேச்சிலும் உம்மைப்  பறைசாற்றவும் எமக்கு உதவும். சிறப்பாக வாழ்வின்  இருள் சூழ்ந்துள்ள இடங்களில் உமது ஒளியைத்  தாங்குபவர்களாக எம்மை மாற்றிட இறைவா  உம்மை மன்றாடுகின்றோம்.  

ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

இறந்துபோன மறைபரப்பு பணியாளர்களுக்காக உம்மை  மன்றாடுவோம்.

5:உமது திராட்சைத் தோட்டத்தில்  ப யாற்றும்போது, மரித்த மறைபரப்புப்  பணியாளர்களுடைய, சிறப்பாக, சரியான உணவும்  மருந்தும் எவ்வித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி,  நோய்வாய்பட்டு, சிறையில் இருந்தவர்களுடைய  ஆன்மாக்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.  அவர்களது மறைத்தூதப் பணிக்கான ஆர்வத்திற்கு  கைமாறு அளித்து, உமது வானக அரசில் உம்மோடு  இருக்க, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  


 ஆண்டவரே! எம் மன்றாட்டைக் கேட்டு எம்  மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்
.  

 

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!   எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர்   திருஅவையோடு மறைப்பணியச் சிறப்புடன் செய்ய தேவையான ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிடவும், சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு சேவை புரியவும் வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நமக்கு எதிராக இருப்பவர்களைக் கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவாதேவையான இறைஅழைத்தல் தந்திடவும், அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியை அறிவுக்கும் கருவியாக மாறவும், அதற்குதேவையான ஞானத்தையும், மன உறுதியும் தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


4.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே சுயத்தை இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீயச் சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி உமது சாட்சிகளாய் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, October 12, 2021

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு -ஆண்டு 2

 ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

திருப்பலி முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு. இறைவனின் திருவருள் நாடி ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திப் பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறார். எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்குப் பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

இயேசு தன் பாடுகளைப் பற்றி மூன்று முறை மாற்கு நற்செய்தியில் எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது என்பதையே விவாதித்து வருகிறார்கள். ஆனால் மனுமகனோப் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார்.

தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடைப் புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதலாகத் தன் தோள் கொடுப்பதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயேசுவைத் துன்புரும் ஊழியனாக நமக்கு முன்னறிவிக்கின்றார். எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும் வாயைத் திறவாதிருந்தார். அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் என்ற இயேசுவின் பாடுகளைப்பற்றி முன்னுரைக்கின்றார். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக் கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,  அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று, பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய்  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம் பேரன்பால் பூவுலகை  நிறைந்துள்ள எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கங்களும், சவால்களும் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, ஆறுதல் தேடுவோருக்கு தோள் கொடுத்து தங்கிடவும் அருள் வரம் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. உம் பேரன்பால் உறவுகளை பேணிக்காக்கும்  உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து  மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றி கவனம் செலுத்தவும், ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரின் நோயற்ற நல்வாழ்விற்காக சேவைப் பரிந்திடவும் நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! மாறிவரும் இன்றைய நவீன உலகில் ஏற்படும் கருத்து மாற்றங்களாலும், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகளாலும், இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளை பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நேர்மையின் நாயகனான எம் இறைவா! என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

www.anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, October 5, 2021

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு -ஆண்டு 2


ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30


திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திச் செல்வந்தரின் மனநிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்துச் செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.

இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ 'கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது' என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்குச் செல்லப் பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்துப் பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு 'வந்து பாரும்' என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப்
பரிசாகப் பெற்றுக்கொள்வோம். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளை மனதில் பதிவு செய்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்போம்..



வாசகமுன்னுரை:



முதல் வாசகம்:


பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிடத் தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவித் தன்னிடம் பொழியப்பட்டது என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல் வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். . ஞானம் வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 90: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி

16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

இரண்டாம் வாசகம்:

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்குக் கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதைப் பதிவு செய்கின்றார். நல்லது எது, தீயது என முடிவு செய்பவர் நானோ, எனக்கு அடுத்திருப்பவரோ, நான் சார்ந்திருக்கும் மதம் அல்ல. மாறாக, என்னைப் படைத்தவரே. அவரின் முடிவை நான் எப்படி அறிந்துகொள்வது? அவரின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வழியாகவே என்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. ஞானமென்னும் அருட்கொடைகளை சாலமோனுக்கு கொடுத்த எம் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம் நிலைவாழ்வாகப் பெற்றவும், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால் ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்து தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்க விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றி பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்ற காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


Print Friendly and PDF

Thursday, September 30, 2021

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு


  ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

 


 இன்றைய வாசகங்கள்


1. தொடக்க நூல் 2:18-24
2. எபிரேயர் 2:9-11
3.மாற்கு 10: 2-16

திருப்பலி முன்னுரை:


இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள்  அனைவரையும் ஆண்டின் 27ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். திருமணம் என்னும் திருவருட்சாதனத்தைப்  பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  ஒரு ஆணும் பெண்ணும்  சேர்ந்த வாழ்வதைச் சமூகம் அங்கீகரிக்கும்போது திருமணம். அதே திருமணம்
திருச்சபை அங்கீகரிக்கும்போது அது திருவருட்சாதனம். குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை நலமாக இருந்தால் தான் உலகம் நன்றாக இருக்கும்.

கணவன் மனைவி இவர்களிடையே நிலவும் சமத்துவம் அன்பின் சின்னங்கள்.இறைமகன் இயேச அழகாக தெளிவாக வலியுறுத்துவதும் இதுவே. கடவுள் இணைத்தை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தை தான். எனவே நாம் திருமணத்தில்  நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு இறுதிவரை பிரமாணிக்கத்துடன்வாழவும், சம் குடும்பங்கள்
திருக்குடும்பங்களாக திகழந்திட மாக அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.

வாசக முன்னுரை:

 முதல் வாசக முன்னுரை

முதல் வாசகத்தில்   கடவுள் முதல் படைப்பு நிகழ்வில் மனிதர்களை ஆணும், பெண்ணுமாக கடவுள் தன் சாயலில் படைக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் முதலில் ஆணும்(ஆதாமும்) இரண்டாவதாக பெண்ணும் (ஏவாளும்)
படைக்கப்படுகின்றனர். திருமண உறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது என்றும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவு என்றும், இந்த உறவில் இறைவனே சான்றாக இருக்கின்றார் என்றும், இந்த உறவினால் ஆண்-பெண்  உறவிலே பெரிய மாற்றம் இருக்கிறது என்றும் முன்வைக்கிறது தொடக்க நூல்.இதனை கவனமுடன் வாசிக்க கேட்போம்
 

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2. 3. 4-5. 6

பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
 
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
 
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.  ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
 
4.நீர் உம் பிள்ளைகளின்  காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாம் வாசகத்தில் 'கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.' ஆக, படைப்பு அனைத்தும் கடவுளுக்காக அவரின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகப் படைக்கப்பட்டது.  படைப்புப் பொருளான மனிதர் மற்றவர்கள்மேல் ஆட்சி செலுத்த அல்லது அடிமைப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. 'துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்.' துன்பம் என்பது மனித குலத்தின் குறை அல்லது பலவீனம் அல்ல.  இந்த உணர்வைத்தான் கடவுளின் மகனும் தன்மேல் சுமந்து கொண்டார். இந்த துன்பம் என்ற உணர்வைத்தான் இயேசு மீட்பு கொண்டுவரும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:


1.எம் அன்பு தந்தையாம் இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும்  அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து,  பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல முன்னேற்ற பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பு தந்தையே இறைவா!  இன்றைய நற்செய்தியின் மையமாய் அமைந்துள்ள குடும்ப வாழ்வும், வ்வாழ்விற்கு, மையமாய் விளங்கும் பெற்றோர்களை பேணி பாதுகாத்து,  மறந்தபோன இன்றைய மனிதவாழ்வு திருமணத்தின் புனிதத் தன்மையும் குடும்ப வாழ்வின் மையத்தையும் உணர்ந்தவர்களாக, தொடக்கக்கால கிறிஸ்தவர்களிடத்தில் இருந்த ஒன்றிப்பும் வார்த்தை வழிபாடும், இன்று நம் அனைவரிலும் புதுப்பிக்க தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.

4.எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது  இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட  உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.அனைவரையும் பேணிக் காக்கும் எம் இறைவா!  பதினைந்து வயதில் இறைபணிக்காக தங்களை அர்ப்பணிக்கும் இறைபணியாளர்களின் முதிய பருவத்தில் தகுந்த பாதுகாப்பும், அன்பும், அரவணைப்பும், பராமரிப்பும், நல்ல ஆரோக்கியமும் கிடைத்திட தேவையான அருளை வழங்கிட வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  www.anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, September 22, 2021

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

திருப்பலி முன்னுரை:

 
இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே தடுக்கவில்லை. அஃது அவரின் தாராளக் குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றித் தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.

இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்குக் கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது.  இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்..

வாசகமுன்னுரை:

முதல்வாசக முன்னுரை

முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல் இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றிப் புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரைக் கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7,9. 11-12. 13
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;  எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;  அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.  தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்தப் பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து  நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமக்கு நீர் அளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறோம். அவர் நல்ல உடல் நலம் பெற்று உம் பணிகளைச் சிறப்பாக செய்ய உமது வல்லக்கரத்தால் தாங்கி அவருக்கு வரும் இன்னல்களை் அனைத்திலிருந்த பாதுகாப்பைப் பெற்றிடவும் அவரின் திருப்பயணங்கள் உலகமக்கள் அனைவருக்கு இறைஆசீரை நிறைவாய் அளித்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடி தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்பட  தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

ஆள் பார்த்துச் செயல்படாத அன்பு இறைவா!  இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப்படுகின்றனர். தங்களின்  பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம் தலைவர்கள் அடுத்திருப்பவரின்நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்மைக்கு நாயகனே இறைவா! எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, September 14, 2021

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானநூல் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

இன்றைய நாளில் இறைமகன் இயேசு தனது பாடுகளைப்பற்றி இரண்டாம் முறையாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆனால் சீடர்களோ அவர் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். முதன்மையான மேன்மையான இடத்தில் இருக்க விரும்புபவர் கடைசி இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்களைக் கடிந்துக்கொண்டார். சிறுகுழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கவும், அவர்களை ஏற்றுக் கொண்டால் என்னையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மைத் தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் நம்மிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..அன்பு மற்றும் மனத்தாழ்மையுடன் அவரைப் பின்தொடரும் வலிமையை இறைமகன் இயேசு நமக்கு தந்திடுவார்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல்வாசகத்தில் பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிக வெற்றி அடைந்தாலும், இறுதியில் தோல்வியைத் தழுவுவார். மாறாகப் பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும் இறுதியில் வெற்றி அடைவர். நல்லவர்களின் பொறுமையை நீதிமான்களின் பணியை உலகம் ஏளனம் செய்தாலும் கடவுள் நிச்சயம் அவர்களை உயர்த்துவார் என்று எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி

ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை, வெறுப்பு ஆகியவை கொண்ட மண்ணக ஞானம். விண்ணக ஞானமோ அமைதி, பொறுமை, விட்டுகொடுத்தல் இணக்கம் ஆகிய தெய்வீக பண்புகளில் மிளிர்கிறது எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
                               

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடைப் பெறுவதைவிடப் பணிப் புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அல்லனவற்றை அழித்து நல்லனச் செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

3. முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா! பேராசையும் பொறாமையுமே சண்டைச் சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ, அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! தொற்றுநோயின் தாக்கம் குறைந்து, கல்விமனைகள் திறக்கப்படவும், எங்கள் பிள்ளைகள் மீண்டும் தங்கள் பள்ளி பருவத்தை முழுமையாக அனுபவித்து, கல்வியிலும் பிறர் அன்பிலும், இறை நம்பிக்கையிலும் சிறந்து விளங்கத் தேவையான ஞானத்தையும், மன உறுதியையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும் அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org

Print Friendly and PDF