Monday, August 3, 2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 அரசர்கள் 19:9அ,11-13அ
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராமல் வரும் புயல்களையும், போராட்டங்களையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? இன்றைய திருவழிபாடு இக்கேள்விக்கு விடை தருகிறது. முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் கடும் காற்றிலோ, நிலநடுக்கத்திலோ, நெருப்பிலோ இறைவனைக் காணவில்லை; மாறாக, மென்மையான தென்றல் காற்றில் இறைவனின் பிரசன்னத்தை உணர்கிறார்.
நற்செய்தியில், சீடர்கள் கடலில் புயலால் அலைக்கழிக்கப்படும்போது, இயேசு நீரின் மேல் நடந்து வருகிறார். பயத்தினால் சீடர்கள் அலறும்போது, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கூறுகிறார். பேதுருவின் விசுவாசம் தடுமாறும்போது, இயேசு தம் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றுகிறார். நம் வாழ்வின் புயல்கள் நம்மை மூழ்கடிக்கப் பார்க்கும்போதெல்லாம், ஆண்டவர் அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய மறைவாக்குகள் நமக்குத் தருகின்றன. புயலின் நடுவே அமைதி தரும் அந்த இறைவனைச் சந்திக்க, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 19: 9a, 11-13a)

இறைவாக்கினர் எலியா தன் உயிருக்கு அஞ்சி ஓடி, ஒரு குகையில் தஞ்சம் புகுகிறார். ஆர்ப்பரிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் அல்ல, மாறாக அமைதியான, மென்மையான ஒரு தென்றல் காற்றில் இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார். இறைவன் ஆரவாரத்தில் இல்லை, அமைதியிலேயே இருக்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 9: 1-5)

தன் சொந்த இனமாகிய இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதது குறித்து புனித பவுல் அடியார் பெரும் மனவேதனையோடு பேசுகிறார். அவர்களின் மீட்பிற்காகத் தான் சாபத்திற்கு உள்ளாகவும் அவர் தயாராக இருக்கிறார். கிறிஸ்துவின் வழியாகக் கிடைத்த உன்னதப் பேறுகளை விவரிக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், உம் பேரன்பையும், மீட்பையும், நிறைவாழ்வையும் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் வாக்களிக்கிறீர் என்பதை உணர்ந்து, இன்றைய பதிலுரை பாடலில் சொன்னது போல, ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டு எம்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்றைய தியானப் பாடலாக அமைந்த திருப்பாடல் எண்பத்து ஐந்து கூறுவது போல, இவ்வுலகிலும், எம்நாட்டிலும், ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளவும், பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கவும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடவும், மண்ணினின்று உண்மை முளைத்தெழவும், நல்விளைவை எம்நாடு நல்கவும், தலைவர்களும் குடிமக்களும் இவற்றிற்காகப் பொறுப்புடன் செயலாற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தன் சொந்த இனத்தைச் சேர்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக எந்தத் தியாகத்தையும் பழியையும் ஏற்கத் தயாராக இருந்த பவுலடியாரை பின்பற்றி, மதவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளில் வேகமும் அதிகரித்திருக்கும் இன்றையச் சூழலில், எம் இந்திய தேசம் உண்மை ஒளியாம் உம்மை ஏற்கவும், அதற்காக நாங்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்பட்டு, எங்கள் சாட்சிய வாழ்வின் மூலமும், துணிவான அறிக்கையிடுதல் வழியாகவும் மீட்பிற்கான வழியைப் பறைசாற்ற  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புயல் சூழ்ந்த துன்பச்சூழல்களால் எங்கள் வாழ்க்கைப் படகு அலைக்கழிக்கப்பட்டு, நாங்கள் திகிலுற்று தவிக்கும்போது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்கிற உமது உடனிருப்பை உணர்ந்து கொள்ளவும், இன்றைய முதல் வாசகத்தில் வருகிற இறைவாக்கினர் எலியா, மெல்லிய தென்றலில் உம து குரலொலியை கேட்டது போல, நாங்களும் பிரமாண்டங்களுக்காகக் காத்திராமல், எங்களது தினசரி வாழ்வின் எதார்த்தங்களிலும், அமைதியான எங்கள் தனிப்பட்ட இறைவேண்டலிலும் உம்மைக் கண்டுணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்று கூறி, படகிலிருந்து இறங்கி, கடல்மீது நடந்து உம்மை நோக்கி வந்த பேதுருவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எதற்கும் அஞ்சாமல் உம்மையே நம்பி வாழவும், உம்மையே நோக்கி வரவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 27, 2026

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55:1-3
உரோமையர் 8: 35,37-39
மத்தேயு 14: 13-21

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருவழிபாடு இறைவனின் எல்லையற்ற தாராள குணத்தையும், அவர் நம் மீது கொண்டுள்ள பிரிக்க முடியாத அன்பையும் பறைசாற்றுகிறது. "தாகமாய் இருப்பவர்களே, நீர்நிலைகளுக்கு வாருங்கள்; காசில்லாதவர்களே, வந்து வாங்கி உண்ணுங்கள்" என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் அழைப்பு விடுக்கிறார். இது இறைவன் தரும் இலவசமான, நிறைவான வாழ்விற்கான அழைப்பு.

நற்செய்தியில், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இயேசு உணவளிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம். திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். நம்மிடம் உள்ள மிகச் சிறிய காரியங்களைக் கடவுளிடம் ஒப்படைத்தால், அவர் அதனை ஆசீர்வதித்துப் பலமடங்காக மாற்ற வல்லவர் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்ற பவுல் அடியாரின் நம்பிக்கையை இரண்டாம் வாசகத்தில் கேட்கிறோம். அந்தப் பேரன்பில் திளைக்கவும், பிறரோடு பகிர்ந்து வாழவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 1-3)

இறைவன் தரும் அருட்கொடைகள் விலையற்றவை. தாகத்தோடும் பசியோடும் இருப்பவர்கள் இறைவனிடம் வந்து தாராளமாக அருளைப் பெற்றுக்கொள்ள ஏசாயா இறைவாக்கினர் அழைக்கிறார். அழியும் உணவுக்காக உழைப்பதை விடுத்து, நிலைவாழ்வு தரும் இறைவார்த்தைக்குச் செவிசாய்க்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 15-16. 17-18. (பல்லவி: 16)
பல்லவி: ண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 35, 37-39)

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை யாரால் பிரிக்க முடியும்? துன்பமோ, வறுமையோ, அச்சுறுத்தலோ அல்லது சாவோ எதுவுமே நம்மை இறை அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று புனித பவுல் உறுதியாகக் கூறுகிறார். எதிலும் வெற்றி வாகை சூடச் செய்யும் அந்தத் தெய்வீக அன்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாம் தெரிந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தாரோடு “என்றுமுள 
உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்” என்றுரைத்த தந்தையே! தாயாம் திருஅவையை வழிநடத்த நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ அவர்கள்மீதும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவர்மீதும், மாறாத பேரன்பை காட்டிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மீண்டும் மீண்டும் தலைதூக்கும் போர்களாலும், அடுத்தடுத்து நடக்கும் வன்முறைகளாலும், இடைவிடாது நடைபெறும் தீச்செயல்களாலும் துயருறும் இவ்வுலகிற்கும், எம்நாட்டிற்கும் அமைதிநிறை நல்வாழ்வை அருள வேண்டுமென்றும், தலைவர்களுக்கும், குடிமக்களாகிய எங்களுக்கும் சரியானதை தேர்வு செய்து, நேரிய வழியில் நடந்திடும் ஞானத்தை தந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகத்தின் உட்பொருளை உணர்ந்து, நிறைவு தராத ஒன்றிற்காய் எங்கள் உழைப்பை வீணாக்காமல் இருக்கவும், கண்டவற்றின் மீது தாகம் கொண்டு அலையாமல் இருக்கவும், உமக்குக் கவனமாய் செவிகொடுத்து, உமது வார்த்தை எனும் நல்லுணவை உண்டு, வாழ்வடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பெருந்திரளான மக்கள்மீது பரிவு கொண்டு, உடல் நலமற்றோருக்கு குணம் தந்து, பசித்திருந்தோருக்கு உணவைப் பகிர்ந்தளித்து, உமது பேரன்பையும் கருணையையும் எண்பித்த இறைவா, நாங்களும் பசித்தோருக்கு உணவளித்து, நலிந்தோருக்கு உதவி புரிந்து, தனிமையில் தவிப்போருக்கு துணையிருந்து, எங்கள் அறச்செயல்களாலும், பிறரன்புச் செயல்களாலும், எங்களையே நல்ல கிறித்தவ மக்களாக எண்பிக்க  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பவுலடியாரின் நம்பிக்கையைப் பகிர்ந்தவர்களாக, வேதனையோ நெருக்கடியோ, இன்னலோ, பட்டினியோ ஆடையின்மையோ, இடரோ, சாவோ, எதுவும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முடியாது என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டு வாழவும், எம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாங்கள் வெற்றிமேல் வெற்றி அடைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 20, 2026

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 26-07-026

 பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 

What does Matthew 13:45-46 mean? | Bible Art

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு 'ஞானம்' மற்றும் 'மதிப்புமிக்கத் தேர்வு' குறித்த சிந்தனைகளை நமக்கு முன்வைக்கிறது. முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் இறைவனிடம் செல்வத்தையோ அல்லது நீண்ட ஆயுளையோ கேட்காமல், நீதியோடு ஆட்சி செய்யத் தேவையான 'ஞானத்தை' மட்டுமே கேட்கிறார்.
நற்செய்தியில் இயேசு, விண்ணரசை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கும், விலைஉயர்ந்த முத்துக்களுக்கும் ஒப்பிடுகிறார். அந்தப் புதையலைப் பெறுவதற்காகத் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்கத் துணிந்த அந்த மனிதனைப் போல, நாமும் இறைவார்த்தையையும் இறையாட்சியையும் நமது வாழ்வின் முதன்மையான செல்வமாகக் கருத அழைக்கப்படுகிறோம். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சியை விட, இறைவனின் அன்பு தரும் நிலையான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ஞானம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 3: 5, 7-12)

இளம் வயதில் அரசராகப் பொறுப்பேற்ற சாலமோனிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று ஆண்டவர் கேட்கிறார். சாலமோன் உலகச் செல்வங்களைக் கேட்காமல், நன்மை தீமை எதுவென்று ஆய்ந்தறியும் 'ஞானத்தை'க் கேட்கிறார். சாலமோனின் இந்தத் தாழ்மையான வேண்டுதலால் மகிழ்ந்த ஆண்டவர், அவருக்கு நிகரற்ற ஞானத்தை வழங்கியதை விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 28-30)

கடவுளிடம் அன்புகூருபவர்களுக்கும், அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் எல்லாமே நன்மைக்கே நடக்கும் என்று புனித பவுல் உறுதி கூறுகிறார். நாம் அவருடைய மகனின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாம் முன்குறித்து வைத்தோரை அழைப்பவரும், தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்குபவருமான கடவுள், தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. சாலமோன் அரசனுக்கு நீர் அருளியதுபோலவே, உலகாளும் தலைவர்களுக்கும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களுக்கும் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்துள்ள மறைப்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும், தம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வை மேற்கொள்வும், மேலும் பல இளைஞர், இளம்பெண்கள் இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, பணிவாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் அனைவரும் எத்தகைய இடர்கள் நிறைந்த சூழலில் இருந்தாலும், இடுக்கண் நிறைந்த வாழ்வை மேற்கொண்டாலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக, நம்பிக்கையுடனும் துணிவுடனும் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நிலத்தில் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பவர் போலவும், விலை உயர்ந்த ஒரு முத்தைத் தனதாக்க  அனைத்தையும் இழக்கத் தயாராயிருப்பவர் போலவும், விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள உம்மையும், உமக்குரியவற்றையும் மட்டுமே நாடுகின்ற நல்லுள்ளம் பெற்றவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 13, 2026

பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு 19-07-2026

 பொதுக்காலம் ஆண்டின்  16-ஆம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்:-

சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
உரோமையர் 8: 26-27
மத்தேயு 13: 24-43

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமையும் களைகளும் உவமையின் வழியாக இறைவனின் எல்லையற்ற பொறுமையையும் நீதியையும் நமக்கு எடுத்துரைக்கிறார். தீமையை உடனடியாக வேரோடு பிடுங்கி எறியாமல், கோதுமை மணிகள் வளர்ந்து பலன் தரும் வரை இறைவன் காத்திருக்கிறார். இது நாம் மனம் மாற அவர் தரும் வாய்ப்பு.
கடவுள் வலிமை மிக்கவராக இருந்தாலும், அவர் நீதியோடும் கனிவோடும் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நமது பலவீனங்களில் தூய ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். தீய எண்ணங்கள் என்னும் களைகள் நம் இதயத்தில் வளர இடம் கொடுக்காமல், கோதுமை மணிகளாக இறைவனின் களஞ்சியத்தில் சேரத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 12: 13, 16-19)

ஆண்டவர் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரம் கொண்டவர். இருப்பினும், அவர் தம் வலிமையைக் கடுமையாகப் பயன்படுத்தாமல், மிகுந்த கனிவோடும் பொறுமையோடும் நம்மை ஆளுகிறார். நாம் பாவம் செய்தாலும் மனம் வருந்தித் திரும்பி வர அவர் வழிவகை செய்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர். 

என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 26-27)

நாம் எப்படிச் செபிக்க வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும்போது, தூய ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்குத் துணையாக வருகிறார். அவர் சொல்வதற்கரிய பெருமூச்சுகளோடு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்” எனச் சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசக கூற்றுப்படி தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், நன்னம்பிக்கையால் நிரப்பப்பட்டு, எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, அன்புச்செயல்களில் ஈடுபட்டு, இறையரசை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமையிலும் நீதியின் ஊற்ற்றாகிய உமது ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டு, போர்கள் இல்லாத உலகிற்காகவும் ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்கிற்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்கள் நல்லாட்சியை வழங்க நீர் தாமே அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றல் மிக்கவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும் நீர் இருப்பதால்-தான் நாங்கள் மன்னிப்புப்பெற்றவர்களாகவும், ஆசி பெற்றவர்களாகவும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து, நாங்களும், அனைவருடனும் கனிவோடு நடந்துகொள்ளவும், எமது ஆற்றலை, ஆணவச் செயல்களுக்கும், வன்செயல்களுக்கும் பயன்படுத்தாமல் அன்புச்செயல்களுக்காகவும் அறச்செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தவும், வன்கொடுமைகளுக்கு ஆளாவோருக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்கவும் நல்மனம் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. துன்பங்களாலும் துயர்களாலும் நோய்களாலும் தனிமையினாலும், வறுமையினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், பொருளாதார பிரச்சனைகளாலும் கடன் தொல்லைகளாலும், வேதனையுற்று, வலுவற்ற நிலையில் உள்ளோரின் உள்ளங்களைத் துருவி ஆய்பவரும் துணைநிற்பவருமான தூய ஆவியாரை அனுப்பி, அவர்களது வாழ்வை, நீர் தாமே மேம்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சிறு கடுகாகவும், புளிப்பு மாவு போன்றவர்களாகவும் இருந்தாலும், விண்ணரசுக்கு நாங்களும் இன்றியமையாதவர்கள் என்பதை உணர்ந்து செயலாற்றவும், தீயோன் விதைக்கும் களைகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாகவே வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 7, 2026

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

 பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23 
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை :-

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "இறைவார்த்தை" என்னும் விதையைப் பற்றியும், அதை ஏற்கும் "இதயம்" என்னும் நிலத்தைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறது. வானிலிருந்து பொழியும் மழையும் பனியும் நிலத்தை நனைக்காமல் திரும்புவதில்லை என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். அதுபோலவே, ஆண்டவரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் அவரது திருவுளத்தை நிறைவேற்றாமல் அவரிடம் திரும்புவதில்லை.
நற்செய்தியில், இயேசு விதைப்பவர் உவமையைக் கூறி, நம் இதயம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறது எனச் சிந்திக்க அழைக்கிறார். வழி ஓரமா? பாறை நிலமா? முட்செடி சூழ்ந்த இடமா? அல்லது நூறு மடங்குப் பலன் தரும் நல்ல நிலமா? நாம் உலகக் கவலைகளிலும் செல்வம் என்னும் மாயையிலும் சிக்கி இறைவார்த்தையை நசுக்கிவிடாமல், அதை ஆழமாக ஏற்றுப் பலன் தரும் நல்ல நிலமாக மாறத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை 

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 10-11)

மழையும் பனியும் நிலத்தை நனைத்து, பயிர்கள் வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும் உண்பவருக்கு உணவையும் தருகின்றன. அதுபோலவே, இறைவனின் திருவாயிலிருந்து வரும் வார்த்தையும் தமக்குரிய பணியைச் செம்மையாக நிறைவேற்றும் என ஆண்டவர் உறுதியளிக்கிறார். இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல் 

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13 
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 18-23)

இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள், இனி நம்மிடம் வெளிப்படப்போகும் மாட்சியோடு ஒப்பிடத்தக்கவை அல்ல என்று புனித பவுல் கூறுகிறார். படைப்பு அனைத்தும் அழிவுக்கு உட்பட்டிருந்தாலும், கடவுளின் பிள்ளைகளாகிய நாமும், ஒட்டுமொத்தப் படைப்பும் மீட்புக்காகவும் விடுதலையாகவும் ஏங்கித் தவிப்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ளும் எதிர்நோக்கோடு பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றுரைத்த இறைவா, போர்கள் இல்லாத உலகிற்கான ஏக்கக்குரல்களையும், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்துக்கான  பெரு-மூச்சுகளையும், வன்கொடுமை இல்லாத மாநிலத்துக்கான கதறல்களையும், கேட்கச் செவியுள்ளவர்களாக, இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களை மாற்றி, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்க அவர்களுக்கு நீர் தாமே ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அதீத அறிவியல் வளர்ச்சி, எந்திரமயமாக்கல், வணிகவயமாக்கல், நகரமயமாக்கல், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம், நெகிழிப்பயன்பாடு போன்ற செயலகளால் “படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது” என்கிற பவுலடியாரின் கூற்று, இந்த நவீன உலகின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.  மாந்தர் அனைவரும் சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழலைப் பேணுகிற அக்கறையுடனும் செயல்பட்டு, எங்கள் எதிர்கால சந்ததியரும் வாழத் தகுந்த உலகை விட்டுச்செல்ல   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்கிற வான்மழை தவறாது பெய்யவும், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய பிரமாநில தடுப்பு அணைத் திட்டங்கள் தடுக்கப்படவும், வேளாண் பெருமக்கள் வாழ்வு சிறக்க வேண்டுமென்றும், ஏனைய தொழிலாளர்கள், உழைக்கும் வர்கத்தினர், விளிம்பு நிலையில் வாழ்வோர் ஆகிய அனைவருமே நிறை வாழ்வைப் பெற   வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இக்காலத்தில் படுகிற துன்பங்கள் எதிர்காலத்தில் வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்பதை உணர்ந்து, துன்பதுயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், துணிவுடன் செயலாற்றவும், பலன் தராத பாறை நிலமாகவோ, வழியோரமாகவோ, முட்புதராகவோ எங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், நூறு மடங்கு பலன்தருகிற நல்ல நிலமாக நாங்கள் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

வருகின்ற ஞாயிறு 12.07.2026 நற்செய்தி மத்தேயு 13:1-23 விதை விதைப்பவன் உவமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய பாடல்

Monday, June 29, 2026

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

 பொதுக்காலம் ஆண்டின் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

மத்தேயு 11:29-30 (TAOVBSI) - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இரு - Bible App

இன்றைய வாசகங்கள்

செக்கரியா 9: 9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11: 25-30

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகக் கல்வியிலோ அல்லது அறிவிலோ தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொள்பவர்களுக்கு இறை இரகசியங்கள் மறைக்கப்படுகின்றன; ஆனால், எளிய உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு அவை வெளிப்படுத்தப்படுகின்றன.

இறைவன் ஒரு போர் வீரனாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் அமைதியான அரசராக வருகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நாம் ஊனியல்புக்கு அடிமையாகாமல் ஆவியின் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். நம் வாழ்வின் சுமைகளை இயேசுவின் பாதத்தில் இறக்கி வைக்கவும், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (செக்கரியா 9: 9-10)

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரசர், போர் குதிரையின் மேல் ஏறி வரும் அதிகாரியாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் நீதியுள்ள, எளிமையான அரசராக வருவார் என்று செக்கரியா இறைவாக்கினர் முன்னறிவிக்கிறார். அவர் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுவார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 9, 11-13)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஊனியல்புக்கு (உடல் இச்சைகளுக்கு) அடிமைப்படாமல், இறைவனின் ஆவியால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகிறோம். இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய ஆவியானவர் நம்மிலும் குடிகொண்டிருக்கிறார் என்றும், அந்த ஆவியின் வழியாகவே நாம் நிறைவாழ்வு பெறுகிறோம் என்றும் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர் ஆகிய ஏனைய தலைவர்களும், இன்றைய முதல் வாசகம் முன்வைக்கின்ற தாழ்ச்சிநிறை தலைமைப் பண்புடன் வாழவும், பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், எளிமையின் அரசராம் உம்மை, எங்கள் வாழ்வில் பின்பற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சூழ்ந்திருக்கும் போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பலவகை அவலங்களால் அவதியுறும் இவ்வுலகிற்கு, போர்க் கருவிகள் இல்லாமல் போகும். ஆண்டவராகிய அரசரே அமைதியை அறிவிப்பார் என்கிற செக்கரியாவின் இறைவாக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்றும், இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள் பொறுப்புடன் எம்மை ஆளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று மகிழ்ந்த இயேசுவே, கல்வி ஆண்டின் முதல் பருவத்தில் இருக்கும் எம்பிள்ளைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மெய்யறிவையும், நிறைஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும், இளையோருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுரைத்த இறைவா, வறுமை, கடன் தொல்லை, பசி, பிணி, பிணக்கு, பிரிவு, நோய், முதுமை, தனிமை, துன்பம், துயரம் எனப் பல்வேறு சுமைகளினால் அழுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும், நீர் தாமே இளைப்பாறுதலாகவும், அரணாகவும், பலமாகவும் இருந்து துணைநிற்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்கவும், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்து, உமக்கும் பிறருக்கும் ஏற்புடையவர்களாக வாழ்ந்து, கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

Monday, June 22, 2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10:37-42

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருவழிபாடு இரண்டு முக்கியமான கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது: விருந்தோம்பல் மற்றும் சீடத்துவத்தின் விலை. முதல் வாசகத்தில், இறைமனிதர் எலிசாவிற்குத் தாராள மனதோடு விருந்தளித்த சூனேம் ஊர்ப் பெண்மணி, அதன் வழியாகக் கடவுளின் ஆசீரையும் மகப்பேற்றையும் பெறுகிறார். நற்செய்தியில் இயேசு, "தன்னை விட மேலாக எவரையும் அன்பு செய்பவர் எனக்குத் தகுதியற்றவர்" என்று கூறி, ஒரு சீடராக இருப்பதன் ஆழமான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறார்.

அதே சமயம், ஒரு சீடருக்குச் செய்யப்படும் மிகச் சிறிய உதவி கூட (ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் போல) கைம்மாறு பெறாமல் போகாது என்று இயேசு நமக்கு ஊக்கமளிக்கிறார். நாம் கிறிஸ்துவின் பெயரால் பிறரை வரவேற்கிறோமா? நமது விருந்தோம்பல் தாராளமாக இருக்கிறதா? கிறிஸ்துவுக்காகச் சிலுவையைச் சுமக்க நாம் தயாரா? எனச் சிந்திக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. இத்திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்கத் தடையாக இருக்கும் நம் சுயநலங்களைக் களைந்து, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (2 அரசர்கள் 4: 8-11, 14-16a)

சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தப் பெண்மணி, இறைவாக்கினர் எலிசாவைக் கடவுளின் மனிதராகக் கண்டு, அவருக்குத் தாராளமாக விருந்தளித்து, தங்குவதற்கு இடமும் கொடுக்கிறார். அந்த விருந்தோம்பலின் பயனாக, குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திய அந்தப் பெண்மணிக்கு ஒரு மகன் பிறப்பான் என்று எலிசா வாக்குறுதி அளிக்கிறார். பிறருக்குச் செய்யும் உதவி ஒருபோதும் வீண் போகாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 6: 3-4, 8-11)

திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவுடன் இறந்து, அவரோடு புதிய வாழ்வு பெற உயிர்த்தெழுந்திருக்கிறோம் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் இனி பாவத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாகக் கிறிஸ்துவில் கடவுளுக்காக வாழ்பவர்கள் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும், திருத்தந்தை லியோ தொடங்கி, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் வரை, நாங்கள் அனைவருமே, சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக அல்லாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பல வகைகளில் அங்கலாய்க்கிற எம் உலகுக்காக மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், நல்லாட்சி நல்கவும், அமைதி நோக்கி எம்மை வழிநடத்தவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகம் எங்களுக்கு உணர்த்துகிற பாடத்தைக் கற்றவர்களாய், எங்களுக்காக உழைக்கிற இறையடியார்களையும், அருள் பணியாளர்களையும், துறவியரையும், நாங்கள் மாண்புடன் நடத்தி, மகிழ்வுடன் பணிந்து, உவப்புடன் சேவிக்க வேண்டுமென்றும், அதற்குக் கைம்மாறாக உம்முடைய பேரருளை அபரிவிதமாய் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், இறந்த அடியார்கள் அனைவருக்கும் நீர் தாமே நிலைவாழ்வு அருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். அதே நேரம், இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும், பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்களாகவும், எங்களது தினசரி சிலுவைகளை சுமந்து உம்பின்னே நடக்கிறவர்களாகவும் திகழ வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்தையும் அனைவரையும் விட உம்மை அன்பு செய்பவர்களாகவும், உம்மை ஏற்றுக்கொள்வதற்காக அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாகவும், உம் சீடர் என்பதால் மிகச் சிறியோருக்கும் உதவுபவர்களாகவும் இருந்து, உமக்கு ஏற்புடையவர்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 
https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 14, 2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026
12th Sunday in Ordinary Time (A) – Comboni2000 – Duc in Altum

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். "அஞ்சாதீர்கள்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகம் நமக்குத் தரும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. "உங்கள் தலைமுடி எல்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது" என்று சொல்லும் அளவுக்கு இறைவன் நம் மீது அக்கறை கொண்டுள்ளார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இறைவன் தன் பக்கம் "வலிமை மிக்க வீரராக" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில் ஆதாம் வழியாய் வந்த பாவத்தைவிட, கிறிஸ்து வழியாய் வந்த அருள் மேலானது எனப் பவுல் அடியார் விளக்குகிறார். நாம் உண்மையை உரக்கச் சொல்லவும், கிறிஸ்துவை உலகறிய அறிக்கை செய்யவும் அழைக்கப்படுகிறோம். அந்தத் துணிவைப் பெறவும், இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (எரேமியா 20: 10-13)

இறைவாக்கினர் எரேமியா தமக்கு நெருக்கமானவர்களாலேயே அச்சுறுத்தப்படுகிறார். சுற்றிலும் அச்சுறுத்தல் இருந்தபோதும், அவர் கலங்கவில்லை. ஆண்டவர் தம் பக்கம் இருக்கும்போது தம்மைத் துன்புறுத்துவோர் வீழ்வர் என்று நம்புகிறார். ஏழைகளின் உயிரைக் காக்கும் இறைவனைப் போற்றிப் புகழும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34
1.ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 12-15)

ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்” என்கிற உமது வாக்குறுதியில் நிலைத்திருந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், மக்கள் முன்னிலையில் உம்மை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமல்லாமல், உமக்கு ஏற்றவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘சுற்றிலும் ஒரே திகில்!’ எனத்தொடங்கிய இன்றைய முதல் வாசகக்கூற்றை உண்மையாக்குகிற நிலையில் இருக்கும் எம் உலகுக்காகவும், உலகத் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி எங்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.” என்கிற உமது வாக்கின்படி, நாங்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையோடு, அச்சம் தவிர்த்து வாழவும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்கிற நம்பிக்கையோடு வாழ்வை நடத்தவும், வாழ்வின் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பதும்; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒளிவு மறைவற்ற, ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி, இருளின் செயல்களை விட்டொழித்து ஒளியின் மக்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 7, 2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு - 14-06-2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு

https://miro.medium.com/v2/1*SFD4WntCSlLLnyoj-1pOSw.jpeg

இன்றைய நற்செய்தி வாசகம்

விடுதலைப் பயணம் 19: 2-6a
உரோமையர் 5: 6-11
மத்தேயு 9: 36- 10: 8

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில், திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். அவர்கள் "ஆயன் இல்லாத ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டிருந்தனர்" என்று வாசிக்கிறோம். இந்த உலகளாவிய ஆன்மீகப் பசி தீரவும், மக்களை நல்வழிப்படுத்தவும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்பி வைக்கிறார்.
இயேசுவின் அந்த அன்புப் பணி இன்றும் தொடர வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களாக அனுப்பப்பட்டுள்ளோம். "இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய் வழங்குங்கள்" என்ற கிறிஸ்துவின் கட்டளைப்படி, நம்மிடமுள்ள திறமைகளையும், அருளையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த மேய்ப்புப் பணியில் நாம் ஆர்வத்துடன் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 19: 2-6a)
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்டுச் சீனாய் பாலைவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆண்டவர் மோசே வழியாகத் தமக்கு ஒரு 'புனிதமான மக்களினத்தை' உருவாக்க விரும்புகிறார். "நீங்கள் என் சொல்லுக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், எல்லா மக்களுள்ளும் நீங்களே எனக்குச் சொந்தமான மக்களாய் இருப்பீர்கள்" என்று ஆண்டவர் கூறும் வாக்குறுதியை இவ்வாசகத்தில் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1. அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

2. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

3. ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 6-11)

நாம் பாவிகளாய் இருந்தபோதே, நமக்காகத் தம் உயிரைத் தந்து கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும், கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என்ற மேலான உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆண்டின் பொதுக்காலத்தை மீண்டும் தொடங்கியிருக்கும் தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், இன்றைய பதிலுரைப் பாடலில் அறிக்கையிட்டதுபோல, “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!” என்கிற உணர்வோடு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்கள்மேல் பரிவு கொண்ட இயேசுவே! அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி வழிநடத்துகிற நல்ல தலைமையின்றி தவிக்கின்ற இவ்வுலகிற்கு, நல்ல தலைவர்களையும், ஏற்கனவே இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்கு நல்புத்தியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் நீங்களே என் தனிச் சொத்தாவீர்கள்” என்கிற உமது வாக்குத்தத்தத்தின் படி நாங்கள் அனைவரும் உமக்குரிய மக்களாகவே வாழவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்கியுள்ள எம்பிள்ளைகளும், இளையோரும், உமக்கும், பிறருக்கும் பணிந்திருந்து, பயனுள்ள செயல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, உயர்நிலை அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்று அங்கலாய்த்த இயேசுவே!  அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய உம்மிடமே மன்றாடுகிறோம். தேவ அழைத்தல் பெருகும்படியாகவும், அழைக்கப்பட்டோரில் பலர் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கப்பட்டோர் அனைவரும் பிரமாணிக்கத்தோடு வாழவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்களை மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற உம் அறைகூவலுக்கு செவிசாய்த்து, மனம் மாறி நற்செய்தியை நம்புவதோடு நில்லாமல், நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் ஏற்புடைய வாழ்வை மேற்கொண்டு, கொடையாகப் பெற்றதை, கொடையாகவே வழங்குகிற நல்மனது பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, June 4, 2026

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

 கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQuCC6bVBpqvjaVyotYS7I3hK-gctKzVMLjnWMkzBMAZg&s 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணையில் வாழும் ஆண்டவரின் அன்புக்குரிய இறைமக்களே! இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால், தம்மையே உணவாகவும் பானமாகவும் நமக்குத் தந்த மாபெரும் மறைபொருளை இன்று நாம் நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை உண்ணும் எவரும் என்றுமே வாழ்வர்" என்று நற்செய்தியில் இயேசு நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் மன்னாவை வழங்கியது போல, இன்று நமது ஆன்மீகப் பயணத்திற்குத் தாகம் தீர்க்கும் பானமாகவும், பசி போக்கும் உணவாகவும் நற்கருணைத் திருவிருந்து வழங்கப்படுகிறது. நற்கருணை என்பது வெறும் சடங்கு அல்ல; அது கிறிஸ்துவின் உயிருள்ள பிரசன்னம். நாம் ஒரே அப்பத்தைப் பகிர்ந்து கொள்வதால், நாம் அனைவரும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்ற ஒற்றுமையை இது வலியுறுத்துகிறது. இந்தத் திருவிருந்தில் தகுதியுடன் பங்கேற்கவும், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (இணைச் சட்டம் 8: 2-3, 14b-16a)

மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசும்போது, பாலைவனத்தில் அவர்கள் அனுபவித்த சோதனைகளையும், கடவுள் அவர்களுக்குச் செய்த நன்மைகளையும் நினைவுபடுத்துகிறார். "மனிதர் உணவினால் மட்டுமல்ல, ஆண்டவரின் வாய் சொல்லால் வாழ்வர்" என்பதை அவர்களுக்குப் புகட்டவே, அவர்கள் அறியாத மன்னாவைக் கொண்டு கடவுள் அவர்களுக்கு உணவளித்தார் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.
திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரிந்தியர் 10: 16-17)

நற்கருணைக் கிண்ணமும், அப்பமும் கிறிஸ்துவின் திருஇரத்தத்திலும் திருவுடலிலும் நாம் பங்கு கொள்வதைக் குறிக்கின்றன என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் பலராய் இருந்தாலும், ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதால் ஒரே உடலாய் மாறுகிறோம் என்ற ஒற்றுமையின் மறைபொருளை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும். ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதனால், பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்கிற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் பதட்டங்களாலும், குழப்பமான சூழல்களாலும், பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகளாலும் அல்லலுறும் அவனியின் மீது உமது கண்களைத் திருப்பி, உலகத் தலைவர்களுக்கும், எம்நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான ஞானத்தை நல்கி, அனைவருக்குமான நல்வாழ்வு மற்றும் அமைதி நோக்கி அவர்கள் எங்களை வழிநடத்த வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒவ்வொரு திருப்பலியும் கிறிஸ்துவின் இரத்தத்திலும், கிறிஸ்துவின் உடலிலும் பங்குகொள்ளுதல் என்பதை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடும், தூய உள்ளத்தோடும் நாங்கள் பங்குபெறவும், நற்கருணை இல்லையேல் திருஅவை இல்லை, குருக்கள் இல்லையேல் திருப்பலி இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் அனைவரும் குருக்களை மதித்து நடக்கவும், தேவ அழைத்தலை ஊக்குவிப்பவர்களாகவும்       விளங்கிட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.” என்கிற உமது திருமொழியில் நம்பிக்கை வைத்து, எம்குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும் இறந்துபோன அடியார்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நிலை வாழ்வினைத் தந்து, உயிர்ப்பின் மகிமையில் பங்குகொள்ளும் பேரின்பத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்” என்பதை உணர்ந்து, எங்களது வாழ்வினை இறைவார்த்தையென்னும் அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பவும், “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்கிற இறைவாக்கிற்கேற்ப, நற்கருணை பக்தி மூலம், உம்மோடு இணைந்து வாழ்கிற பேற்றினை பெற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, May 26, 2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தை நிறைவு செய்து, இன்று நாம் திருச்சபையின் மிக முக்கியமான மறைபொருளாகிய மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தந்தை, மகன், தூய ஆவியானவர் என மூன்று ஆள்களாய் இருந்தாலும், அன்பினால் ஒன்றிணைந்த ஒரே கடவுளை இன்று நாம் போற்றிப் புகழ்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்று வாசிக்கிறோம். மூவொரு இறைவன் என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு உறவு. தந்தை - படைப்பவர், மகன் - மீட்பவர், தூய ஆவி - வழிநடத்துபவர். இந்த மூவரும் எவ்வாறு அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளார்களோ, அவ்வாறே நாமும் நமது குடும்பங்களிலும், சமூகத்திலும் அன்பினால் ஒன்றிணைய அழைக்கப்படுகிறோம். "தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே" என்று நாம் சிலுவை அடையாளம் வரையும் ஒவ்வொரு முறையும் இந்த உறவுக்குள் நுழைகிறோம். அந்த அன்பின் உறவில் வளர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9)

சீனாய் மலையில் மோசேக்கு ஆண்டவர் காட்சி தந்தபோது, தம்மை "இரக்கமும் அருளும் கொண்ட கடவுள்" என்று வெளிப்படுத்துகிறார். மக்கள் பாவம் செய்தபோது, மோசே அவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடுகிறார். இறைவன் கோபப்படுவதில் மெதுவானவர், பேரன்பு காட்டுவதில் வல்லவர் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

1. எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி

2. உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

3. உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (2 கொரிந்தியர் 13: 11-13)

"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" என்ற ஆசீர்வாதத்தோடு புனித பவுல் இந்த வாசகத்தை முடிக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அமைதியோடும் அன்போடும் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும், எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாகிய மூவொரு கடவுளின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். மூவொரு இறைவனிடம் காணப்படும் ஒருமித்த சிந்தனையும் செயல்பாடும் எங்களிலும் இருந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வணங்காக் கழுத்துள்ள மக்களாகிய எங்கள் கொடுமையையும், எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்ற மோசேயின் வேண்டுதலின்படி, போர்களாலும், வன்முறைகளாலும், தவறான முடிவுகளாலும் பாழ்பட்டுப்போயிருக்கிற எம் உலகையும், நாட்டையும், மாநிலத்தையும், நீர் தாமே கனிவோடு கண்ணோக்கி, அமைதியையும், நிம்மதியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.” என்கிற பவுலடியாரின் அறிவுரைகளைச் சிரமேற்கொண்டவர்களாக எங்கள் பங்கு த்தளமும், அன்பியங்களும், குடும்பங்களும், எப்பொழுதும் அன்பு நிறைந்த, ஒற்றுமை நிலவும் சமூகங்களாக விளங்கிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்” என்கிற இன்றைய இரண்டாம் வாசக அறிவரையை புரிந்து கொண்டு, இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும், சிற்றின்பம், உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களாக, பொறுப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும், நன்னடத்தையுடனும், தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமும் பரிவும் உள்ளவரும், சினம் கொள்ளத் தயங்குபவரும், பேரன்புமிக்கவவரும்; நம்பிக்கைக்குரியவருமான கடவுள் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே விரும்புகிறவர் என்பதை உணர்ந்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைவனுக்கு உகந்த, மனமாற்றம் மிகுந்த ஒரு வாழ்க்கையை நடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 20, 2026

தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

 தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  வந்துள்ள இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும், தடையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களிலிருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்! ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள். இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக்
கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


தூயஆவியின் தொடர் பாடல் : (mp3 பாடல் இசையுடன்) 


தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524) 


தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்கிற நற்செய்தியின் படி, நாங்கள் எந்தப் படிநிலையில் இருந்தாலும், அனைவரும் உம்மால் அனுப்பப்பட்டவர்களே என்றுணர்ந்து, ஒற்றுமையின் ஆவியை, உறுதி தரும் ஆவியை நிறைவாக உள்வாங்கி, இறையாட்சியின் உயிர் துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மிகக்குறுகிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்கிற சொற்றொடரை இரண்டுமுறை உச்சரித்த நீர், இவ்வுலகுக்கு நிலையான அமைதியை உரித்தாக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசியோரும், நற்செய்தியை தம் சொந்த மொழிகளில் கேட்கச் செய்த ஆவியானவர், பல்வேறு பிரச்சனைகளால் முரண்பட்டுள்ள உலகத்தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், ஒருமித்த கருத்துக்கும் ஒற்றுமையின் பாதைக்கும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப் பல்லவியாகப் பகர்ந்த நாங்கள், தூய ஆவியின் நிரப்புதலால் புத்தொளி பெற வேண்டுமென்றும், எம்பிள்ளைகளும், இளையோரும் தூய ஆவியின் வழிநடத்துதலால், தங்கள் எதிர்கால வாழ்வை சரியாகத் தேர்வு செய்து, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அருள் கொடைகள் பலவகை உண்டு; செயல்பாடுகள் பலவகை உண்டு; திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே; கடவுள் ஒருவரே” என்றுணர்ந்து, எங்கள் பங்குகளிலும், அன்பியங்களிலும், தனிப்பட்ட குடும்பங்களிலும், நாங்கள் வாழும் சமுதாயத்திலும், நாங்கள் அனைவரும், ஒரே உடலின் பல்வேறு உறுப்புகளாய், இசைந்தும், இணைந்தும், செயல்படுகிற மனப்பக்குவத்தை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள எங்கள் அனைவர் மீதும், தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். நாங்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும், அனைத்து அருள்வரங்களும் பெற்றவர்களாகவும், ஒன்றிப்பில் இன்புற்று வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, May 12, 2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

Feast of the Ascension - Wikipedia

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. 

இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப் பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்" என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. விண்ணேற்றப் பெருவிழாவாகிய இன்று “கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்” என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” என்கிற திருப்பாடலைத் தியானித்த நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளை ஆளுகிற தலைவர்களுக்காகவும், எம்நாட்டின் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். நல்லாட்சி, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை, உலகிலும், எம்நாட்டிலும் நிலவ வேண்டுமென்றும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்கிற உமது அறைகூவலை சிரமேற்கொண்டு, மறைத்தூதுப் பணியாற்றவும், அறப்பணிகள் வழியாகத் தொண்டாற்றவும் தங்களையே கையளித்துள்ள அனைத்து துறவியருக்காகவும், சிறப்பாகப் பிற நாடுகளில் பணிபுரிவோருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களை நீர் தாமே நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறையாட்சிப் பணிக்காக மேலும் பலர் முன்வரவேண்டுமென்றும், அதற்காக நடத்தப்படும் தேவ அழைத்தல் முகாம்கள் நிறைந்த பலன் தரும்படியாகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருமுழுக்கு வழியாகக் கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், குடும்பங்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக் குழந்தைகளும், இளையோரும், தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைப்பேறு, எதிர்நோக்கு, நம்பிக்கை, ஆகியவை எத்துணை மேலானவை என்பதை உணர்ந்து செயலாற்றி, நம்பிக்கை வாழ்விலும், உலகுசார் வாழ்விலும், வெற்றி பெறவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் உமக்கு அருளப்பட்டிருப்பதையும், “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்கிற வாக்குறுதியையும் இறுகப்பற்றிக்கொண்டு, விண்ணேற்றம் அடைந்த உம்மைப் போல், நாங்களும் வாழ்வில் ஏற்றம் அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF